சிங்கப்பூரின் உற்பத்தி 12% சரிவு: எதிர்பார்த்ததைவிட மோசம்

சிங்கப்பூரின் உற்பத்தி 12% சரிவு: எதிர்பார்த்ததைவிட மோசம்

2 mins read
b2fbfac2-b511-4288-aa6c-0315006cc162
போக்குவரத்துப் பொருளியல் துறை தவிர்த்து இதர எல்லாத் துறைகளிலும் ஆகஸ்ட் மாதம் சரிவு பதிவானது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூரின் உற்பத்தி ஆண்டு அடிப்படையில், சென்ற மாதம் 12.1 விழுக்காடு வீழ்ச்சி கண்டது. இது தொடர்ச்சியான 11வது மாத வீழ்ச்சி.

ஜூலை மாதம் உற்பத்தி 0.9 விழுக்காடு குறைந்ததைத் தொடர்ந்து அதற்கடுத்த மாதம் 3.1 விழுக்காடு சரியலாம் என ராய்ட்டர்ஸ் நடத்திய கருத்துக்கணிப்பில் பொருளியல் நிபுணர்கள் தெரிவித்து இருந்தனர்.

ஏற்றுமதி அடிப்படையிலான உற்பத்தித் துறையில் பலவீனமான நிலவரம் தென்படுவதால், 2023ஆம் ஆண்டுக்கான பொருளியல் வளர்ச்சி 0.5 விழுக்காட்டுக்கும் 1.5 விழுக்காட்டுக்கும் இடைப்பட்டு இருக்கும் என்று அரசாங்கம் கடந்த மாதம் தனது முன்னுரைப்பைக் குறைத்திருந்தது.

ஆகஸ்ட் மாதம், போக்குவரத்துப் பொருளியல் துறை தவிர்த்து இதர எல்லாத் துறைகளிலும் சரிவு பதிவானது.

அதேநேரம் உயிர்மருத்துவ உற்பத்தியை விலக்கிப் பார்க்கையில் மொத்த உற்பத்தியின் விகிதத்தில் 16.6 விழுக்காடு சரிவு ஏற்பட்டதாக சிங்கப்பூர் பொருளியல் வளர்ச்சிக் கழகம் செவ்வாய்க்கிழமை கூறியது.

மாதாமாதம் பருவத்திற்கேற்ப சரிக்கட்டப்படும் உற்பத்தி ஆகஸ்ட் மாதம் 10.5 விழுக்காடு குறைந்தது. 1.7 விழுக்காடு குறையலாம் என்னும் பொருளியல் நிபுணர்களின் கணிப்பையும் மிஞ்சி இந்தச் சரிவு பதிவானது.

சிங்கப்பூரின் உற்பத்தித் துறையில் 45 விழுக்காடு பங்களிக்கும் மின்னியல் துறைதான் ஆக மோசமான சரிவைக் கண்டது. ஆண்டு அடிப்படையில் அது 20 விழுக்காடு சரிந்தது. உலகளவிலான தேவையில் ஏற்பட்டிருக்கும் பலவீனம் இதற்குக் காரணமாகச் சொல்லப்படுகிறது.

மின்னியல் துறைக்குட்பட்ட பகுதி மின்கடத்தியின் உற்பத்தி 23.7 விழுக்காடு வீழ்ச்சி கண்டது. ஜூலை மாதம் அந்தச் சரிவின் விகிதம் 5.1 என்று இருந்தது.

தொடர்புடைய செய்திகள்

கணினி பாகங்கள் மற்றும் தரவு சேமிப்புச் சாதனங்களின் உற்பத்தியில் 13 விழுக்காடும் மின்னியல் பொருள்கள் மற்றும் அதன் உதிரிபாகங்கள் உற்பத்தியில் 5.2 விழுக்காடும் சரிவு ஏற்பட்டது.

குறிப்புச் சொற்கள்