கொவிட்-19 கொள்ளைநோய் காலத்தில் தளர்த்தப்பட்ட விதிகளை மோசடிக்காரர்கள் சட்டவிரோதமாகப் பயன்படுத்தி மில்லியன்கணக்கான பணத்தை சிங்கப்பூருக்கு மாற்றியதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கள்ளப் பணத்தை நல்ல பணமாக்கும் மோசடியில் ஈடுபட்டவர்கள் வேறு நாட்டிலிருந்து சிங்கப்பூரில் நிறுவனங்களைத் தொடங்கி அவற்றின் மூலம் சட்டவிரோதமாகத் திரட்டிய பணத்தை சிங்கப்பூர் வங்கிகளில் செலுத்தியதும் இப்போது தெரிய வந்துள்ளது.
கொவிட்-19 கொள்ளைநோய் பரவிய காலத்தில் நிறுவனப் பதிவு நடைமுறைகளை இணையம் மூலம் செய்துகொள்ளும் வகையில் விதிகள் தளர்த்தப்பட்டு இருந்தன.
இதனைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திய மோசடிக்காரர்கள், வெளிநாட்டு நிறுவனங்களில் திருடிய பணத்தை இங்கு தொடங்கிய நிறுவனங்களின் மூலம் வங்கிகளில் செலுத்தினர்.
2020ஆம் ஆண்டில் மட்டும் 3.4 மில்லியன் அமெரிக்க டாலர் (S$4.65 மில்லியன்) பணத்தை அவர்கள் அவ்வாறு செலுத்தினர்.
மோசடிக்காரர்கள் இங்கு நிறுவனங்களைப் பதிவு செய்ய உதவிய குற்றத்திற்காக சீனாவைச் சேர்ந்த லியாங் ஜியான்சென் என்பவருக்கு திங்கட்கிழமை $9,000 அபராதம் விதிக்கப்பட்டது.
அந்த 33 வயது ஆடவர் இங்கு நிரந்தரவாசத் தகுதியில் உள்ளார். ஓர் இயக்குநர் என்ற முறையில் கடமையிலிருந்து தவறிய இரு குற்றச்சாட்டுகளை அவர் ஒப்புக்கொண்டார். மேலும் ஒரு குற்றச்சாட்டு தண்டனை விதிப்பின்போது கவனத்தில் கொள்ளப்பட்டது.
2015ஆம் ஆண்டு சீனாவிலிருந்து சிங்கப்பூர் வந்த லியாங், 2020ஆம் ஆண்டு பெருநிறுவனச் செயலகம் ஒன்றைத் தொடங்கியதாக அரசுத் தரப்பு வழக்கறிஞர் கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
நிறுவனச் செயலகச் சேவைகள், நிறுவன முகவரிப் பதிவுச் சேவை மற்றும் உள்ளூரில் யாராவது ஒருவரை இயக்குநராக நியமித்துக்கொள்வது போன்ற சேவைகளுக்கு லியாங் $800 வாங்கி வந்தார்.
அதனைக் கேள்விப்பட்டு சீனாவில் உள்ள அவரது பல வாடிக்கையாளர்கள் லியாங்கை தங்களது நிறுவனங்களுக்கு இயக்குநராகப் பதிவு செய்தனர்.
2021 ஜனவரி நிலவரப்படி, சிங்கப்பூரில் பதிவு செய்யப்பட்ட 135 நிறுவனங்களுக்கு அவர் இயக்குநராக இருந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

