ரகசியமான விலைப்புள்ளி தகவலுக்காக ஒரு நிறுவனத்தின் இயக்குநர் எஸ்எம்ஆர்டி ஊழியருக்கு லஞ்சம் கொடுத்தார்.
ஐந்து ஆண்டுகளில் 37 முறை, யோங் மிங் ஜுன் மொத்தம் 24,450 வெள்ளியை சோ சூன் ஹெங்கிற்கு வழங்கியுள்ளார். சோ சூன் ஹெங் அப்போது எஸ்எம்ஆர்டியின் உதவி கொள்முதலாளராக இருந்தார்.
வாகனங்களுக்கான உதிரிப்பாகங்கள், உபகரணங்களை விற்கும் யூரோ பிரேம்ஸ் நிறுவனத்தின் இயக்குனரான 41 வயது யோங்கிற்கு செவ்வாய்க்கிழமை எட்டு மாதங்கள் நான்கு வாரங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
அவர் இரண்டு ஊழல் குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டார். மேலும் மூன்று குற்றச்சாட்டுகள் தண்டனையின்போது கருத்தில்கொள்ளப்பட்டன.
சோ தற்போது எஸ்எம்ஆர்டியில் வேலை பார்க்கவில்லை. 2023 ஜனவரி மாதம் அப்போது 45 வயதாக இருந்த சோவுக்கு 21 மாதம் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. ஊழல், ஏமாற்றுக் குற்றச்சாட்டுகளை அவர் ஒப்புக்கொண்டார்.
எஸ்எம்ஆர்டி, யூரோ பிரேம்ஸ் நிறுவனத்தின் அதிகம் கொள்முதல் செய்யும் வாடிக்கையாளராக இருந்தது. அதன் பேருந்துகளின் பராமரிப்புக்காக யூரோ பிரேம்சிடமிருந்து உதிரிப்பாகங்களை அது வாங்கியது.
உதவி கொள்முதலாளராக, எஸ்எம்ஆர்டியின் கொள்முதல் நடவடிக்கைகளுக்கு சோ பொறுப்பேற்றிருந்தார். அதன் ரயில்கள், பேருந்துகள், டாக்சிகளுக்கான உதிரிப் பாகங்கள் வாங்குவது இதில் அடங்கும்.
$200,000க்குக் குறைவான பொருள்களை வாங்கும்போது, நிறுவனம் அதற்கான விலைப்பட்டியலைச் சமர்ப்பிக்கும்படி விற்பனையாளர்களைக் கேட்டுக்கொள்ளும். இது தொடர்பான ரகசியத் தகவல்களை, கையூட்டு பெற்றுக்கொண்டு சோ பகிர்ந்ததாகக் கூறப்பட்டது.
தொடர்புடைய செய்திகள்
2011 முதல் 2020 வரை எஸ்எம்ஆர்டியில் பணிபுரிந்த சோ, மேலும் இரண்டு நிறுவன இயக்குநர்களிடமிருந்தும் லஞ்சம் பெற்றுள்ளார்.
மூன்று இயக்குநர்களிடம் இருந்து சோ பெற்ற மொத்த லஞ்சம் $54,850 ஆகும். பின்னர் அவரே $30,000 தொகையை லஞ்ச ஊழல் புலனாய்வுப் பிரிவிடம் ஒப்படைத்தார்.
உள்தணிக்கை நடவடிக்கையைத் தொடர்ந்து 2020 ஏப்ரல் 27ஆம் தேதி சோ நிறுவனத்தில் இருந்து நீக்கப்பட்டார்.

