அண்டை நாடுகளில் சமூக, அரசியல் ரீதியான அமைதியின்மை நிலை காரணமாக ஏற்படக்கூடிய பின்விளைவுகள் குறித்து சிங்கப்பூரர்களில் பெரும்பாலானோர் கவலைப்படுவதாக ‘கன்டார் பப்ளிக்’ நிறுவனம் நடத்திய அண்மைய ஆய்வு ஒன்று கண்டறிந்துள்ளது.
அனைத்துலக விநியோகத் தொடர் தடைப்படும் நிலைக்கு நாடு ஆளாகக்கூடும் என்றும் அவர்கள் நம்புகின்றனர்.
அத்துடன் சிங்கப்பூர் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அனைத்துலக அளவில் உதவி கிடைக்கும் என்று சிங்கப்பூரர்களில் 50 விழுக்காட்டினருக்கும் குறைவானோர் ஆய்வில் குறிப்பிட்டிருந்தனர்.
மாறிவரும் அனைத்துலகச் சூழல், அதனால் ஏற்படும் நிச்சயமற்ற நிலையில் சிங்கப்பூரர்கள் தங்களைப் பற்றி கொண்டுள்ள எண்ணம், நாட்டின் மக்கள்தொகை பன்முகத்தன்மை, புதிதாகக் குடியுரிமை பெற்றவர்களுடன் சிங்கப்பூரர்களின் உறவு, புவிசார் அரசியல் ரீதியான உண்மை நிலவரங்கள் குறித்து அவர்களுக்குள்ள புரிந்துணர்வு ஆகிய அம்சங்களை ‘உலகில் நமது இடம்’ என்ற அந்த ஆய்வு ஆராய்ந்தது.
இவ்வாண்டு ஜூன் மாதத்திற்கும் செப்டம்பர் மாதத்திற்கும் இடைப்பட்ட காலத்தில் இணையம் வழி நடத்தப்பட்ட இந்த ஆய்வில், 763 சிங்கப்பூரர்கள் பங்கேற்றனர். பலதரப்பட்ட வயதினர், இனத்தவர், பாலினத்தவர் இந்த ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டனர்.
ஆறு பிரிவுகளில் 90க்கும் மேற்பட்ட கேள்விகள் இந்த ஆய்வில் இடம்பெற்றிருந்தன. சிங்கப்பூரில் வழங்கப்படும் வாய்ப்புகள், தேசிய சேவை, நாடளாவிய பெருமை குறித்த மக்களின் எண்ணங்கள் பற்றி கேள்விகள் கேட்கப்பட்டிருந்தன.
மேலும் ஆழமான ஆய்வு நடத்தப்பட்டு அதன் முடிவுகள் அடுத்தாண்டு முதல் காலாண்டில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சிங்கப்பூர் அரசாங்கத்துக்காக கன்டார் பப்ளிக் ஏற்கெனவே ஆய்வுகள் மேற்கொண்டுள்ளது.

