ஜார்ஜியாவைச் சேர்ந்த அகாலையா ரக்லி, 46, என்ற ஆடவர் சிங்கப்பூர் ஒரு பணக்கார நாடு என்று நினைத்தார். அதனால் சிங்கப்பூரில் திருடுவதற்கு அவர் திட்டம் போட்டார்.
கோல்மென் ஸ்திரீட்டில் உள்ள பெனின்சுலா ஷாப்பிங் சென்டர் கடைத்தொகுதியில் நாணய மாற்று வியாபாரம் செய்யும் ஒரு நிறுவனத்தை அவர் குறிவைத்தார்.
அந்த நிறுவனத்திடம் இருந்து US$74,300 ($101,861) பணத்தை அவர் திருடினார். அந்த ஆடவருக்கு புதன்கிழமை இரண்டாண்டுகள், இரண்டு மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
அந்த ஜார்ஜியா ஆடவர் தனது நாட்டைச் சேர்ந்த மலிஷாவா ஜோனி, 55, என்பவருடன் ஏப்ரல் 6ஆம் தேதி சிங்கப்பூருக்கு வந்தார்.
மலிஷாவா ஜோனியும் குற்றத்தை ஒப்புக்கொண்டார். அவருக்கு புதன்கிழமை இரண்டாண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
திருடியதாகக் கூறப்படும் ஒரு குற்றச்சாட்டு உள்ளிட்ட பல குற்றங்களை ஆகஸ்ட் மாதம் அந்த இருவரும் ஒப்புக்கொண்டனர்.
அரசாங்க தரப்புத் துணை வழக்கறிஞர் டான் பான், முந்தைய வழக்கு விசாரணையின்போது பல விவரங்களைத் தெரிவித்தார்.
ஜார்ஜியாவைச் சேர்ந்த அந்த இருவரும் நல்ல, கள்ள நாணயங்களுடன் சிங்கப்பூருக்கு வந்தனர்.
ரக்லி ஏப்ரல் 21ஆம் தேதி பெனின்சுலா ஷாப்பிங் சென்டரில் உள்ள நாணய மாற்றுக் கடைக்குச் சென்றார். US$75,000 தொகையைப் பிற்பகலில் வந்து வாங்கிக்கொள்ளவதாகக் கூறிவிட்டு அவர் கடையைவிட்டுச் சென்றுவிட்டார்.
பிறகு அந்த இரண்டு ஆடவர்களும் திரும்பி வந்தனர். அப்போது நாணய மாற்றுக் கடை உரிமையாளர் அவர்களிடம் எட்டுக் கட்டுகளாக 750 US$100 நோட்டுகளைக் கொடுத்தார்.
ரக்லி மொத்தம் US$700 பணத்தை எடுத்துக்கொண்டு அதற்கு ஈடான வேறொரு நாணயத்தைக் கொடுத்தார். அதற்குப் பிறகு எஞ்சிய US$74,300 தொகையை மூன்று பிளாஸ்டிக் பைகளில் வைத்து அவற்றை கறுப்புநிற தோல் பையில் வைத்துக்கொண்டார்.
தோலால் ஆன அந்தக் கறுப்புநிற கைப்பையில் ஏற்கெனவே இதர மூன்று பிளாஸ்டிக் பைகள் இருந்தன.
அவை ஒவ்வொன்றிலும் பணம் இருந்தது. அந்தப் பணக்கட்டுகளில் மேலே இருந்த நோட்டும் அடி நோட்டும் மட்டும் உண்மையான US$100 நோட்டுகள். மற்றவை எல்லாம் ேபாலியான அமெரிக்க டாலர், யூரோ நோட்டுகளாகவும் உண்மையான US$1 நோட்டுகளாகவும் இருந்தன.
உண்மையான அமெரிக்க டாலர் பணத்தை ஒரு சிறிய கைப்பையில் மாற்றி வைப்பது போல் இருவரும் நடித்தனர்.
அந்தச் சாக்கில் அவர்கள் போலி நாணயம் இருந்த மூன்று பிளாஸ்டிக் பைகளை எடுத்து அந்தக் கைப்பையில் வைத்துவிட்டனர்.
பிறகு அந்தக் கைப்பையைக் கடைக்காரரிடம் பத்திரமாக வைத்திருக்கும்படி சொல்லி கொடுத்துவிட்டு பிறகு வந்து பணத்தைச் செலுத்தி உண்மையான அமெரிக்க டாலரை பெற்றுக்கொள்வதாகக் கூறிவிட்டு உண்மையான அமெரிக்க டாலருடன் அந்த இருவரும் போய்விட்டனர். திரும்பி வரவில்லை.
தன்னிடம் ஒப்படைக்கப்பட்ட கைப்பையை வெட்டி திறந்து பார்த்தப் பிறகுதான் தான் ஏமாற்றப்பட்டது கடைக்காரருக்குத் தெரியவந்தது.
ஜார்ஜியாவைச் சேர்ந்த இருவரும் உடனடியாக சாங்கி விமான நிலையம் சென்று விமானத்தில் ஏறி சிங்கப்பூரைவிட்டு தப்பிச் செல்ல முயன்றனர்.
ஆனால், விமானம் புறப்படுவதற்கு முன்பாக பிடிபட்டுவிட்டனர்.
இதேப்போல, ஜார்ஜியா நாட்டைச் சேர்ந்த வேறு இரண்டு பேர் லிட்டில் இந்தியாவில் செயல்படும் வேறொரு நாணய மாற்று வியாபாரி கடையில் இதேபோன்ற குற்றத்தைச் செய்து இருக்கிறார்கள் என்று கூறப்படுகிறது.
அவர்களின் வழக்கு நிலுவையில் உள்ளது.