சமத்துவமின்மை, முன்னேற்றம் இரண்டையும் சமாளிப்பது குறித்து துணைப் பிரதமர் வோங்

2 mins read
052b1ba9-39a0-4607-a804-70e35e4e254b
சிங்கப்பூர் பொருளியல் சங்கத்தின் வருடாந்திர விருந்து நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக திரு லாரன்ஸ் வோங் கலந்துகொண்டார். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சவால்கள் அதிகரித்துவரும் சூழலில் சமத்துவமின்மை, முன்னேற்றம் ஆகிய இரு சவால்களைச் சமாளிக்கும் திட்டம் குறித்து துணைப் பிரதமர் லாரன்ஸ் வோங் பேசியுள்ளார்.

நடுத்தர வருமானப் பிரிவினரின் நலனை மேம்படுத்த அரசாங்கம் முனைப்பு கொண்டுள்ளது. அத்துடன் குறைந்த வருமானப் பிரிவினரின் மேம்பாட்டுக்கு வழிவகுப்பதுடன் சமூக முன்னேற்றத்தைத் தக்கவைத்துக்கொள்ளவும் அரசாங்கம் செயல்படும் என்று அவர் குறிப்பிட்டார்.

அதேவேளையில் நியாயமான ஒரு சமூக சூழலை உருவாக்க, ஒன்றுபட்ட நடவடிக்கை தேவை என்றும் இதற்குக் குறிப்பாக முன்னேற்றம் அடைந்தோர் கைகொடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

ஃபேர்மோண்ட் ஹோட்டலில் செவ்வாய்க்கிழமை இரவு நடந்த சிங்கப்பூர் பொருளியல் சங்கத்தின் வருடாந்திர விருந்து நிகழ்ச்சியில் அவர் இவ்வாறு பேசியிருந்தார்.

நிதி மறுவிநியோகம், அரசாங்கக் கொள்கைகள் ஆகியவற்றின் அடிப்படையில் மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய ஒரு சமூகத்தை உருவாக்க சிங்கப்பூர் முயல்வது போதாது என்றார். சமூகத்தினரும் இதற்குப் பங்காற்ற வேண்டும் என்றும் இதற்கு நன்கொடை கலாசாரம் மேலும் வலுவாக வேண்டும் என்றும் அவர் சுட்டினார்.

ஆட்குறைப்புக்கு ஆளான ஊழியர்களுக்கு வேலையின்மை அனுகூலங்கள்

ஆட்குறைப்புக்கு ஆளான ஊழியர்களுக்கு விரிவுபடுத்தப்பட்ட ‘ஸ்கில்ஸ்ஃபியூச்சர்’ அமைப்புமுறையின்கீழ் பலன் அளிக்கும் திட்டங்கள் வழங்கப்படும் என்று நிதி அமைச்சராகவும் உள்ள திரு லாரன்ஸ் வோங் தெரிவித்தார்.

உடனடியாக எழக்கூடிய சிரமங்களை, ஆட்குறைப்பு செய்யப்பட்டோர் கையாள்வதற்கு அரசாங்க நிதியின் மூலம் ‘தேவையான அளவு’ அனுகூலங்கள் வழங்கப்படலாம் என்றார் அவர்.

வேலையின்மை அனுகூலங்களை அறிமுகப்படுத்துவதில் அரசாங்கம் பலகாலமாக எச்சரிக்கையுடன் செயல்பட்டு வருகிறது. மற்ற நாடுகளில் இத்தகைய அனுகூலங்களால் எதிர்மறையான விளைவுகள் ஏற்பட்டுள்ளன.

இதனால், வேலைக்குச் செல்வதற்குப் பதிலாக வேலை இல்லாத நிலையையே மக்கள் அதிகம் விரும்புகின்றனர் என்றார் திரு வோங்.

குறிப்புச் சொற்கள்