சிங்கப்பூரில் வார அடிப்படையிலான டெங்கி பாதிப்பு எண்ணிக்கை, கடந்த இரு வாரங்களாக 300ஐ தாண்டியது. வாராந்திர டெங்கி பாதிப்பு இவ்வாண்டு 300ஐ கடந்திருப்பது இதுவே முதன்முறை.
செப்டம்பர் 10ஆம் தேதிக்கும் 16ஆம் தேதிக்கும் இடைப்பட்ட வாரத்தில் 330 டெங்கி பாதிப்புகளும் செப்டம்பர் 17ஆம் தேதிக்கும் கடந்த சனிக்கிழமைக்கும் இடைப்பட்ட வாரத்தில் 303 பாதிப்புகள் பதிவானதாக தேசிய சுற்றுப்புற வாரியத்தின் இணையப்பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் செவ்வாய்க்கிழமை வரை 124 டெங்கி பாதிப்புகள் பதிவாகின.
மேற்கண்ட டெங்கி பாதிப்புகளைச் சேர்த்து, இவ்வாண்டு இதுவரை எண்ணிக்கை 7,000ஐக் கடந்துவிட்டது.
வாரியத்தின் காலாண்டு அடிப்படையிலான டெங்கி கண்காணிப்பு தரவைப் பொறுத்து, கடந்த ஜூன் நிலவரப்படி உள்ளூரில் டெங்கி தொற்று காரணமாக இவ்வாண்டு இரு மரணங்கள் பதிவாகின.
கடந்த ஆண்டு 32,000க்கும் அதிகமான டெங்கி பாதிப்புகள் பதிவாகின. 2020ல் டெங்கி பாதிப்பு எண்ணிக்கை 35,000க்குமேல் என்று உச்சம் தொட்டது.
சிங்கப்பூரில் தற்போது 69 டெங்கிக் குழுமங்கள் உள்ளன. அவற்றில் ஒன்பது குழுமங்கள் சிவப்பு எச்சரிக்கை பிரிவில் உள்ளன. அப்பிரிவில் உள்ள குழுமங்களில் 10 அல்லது அதற்கு மேற்பட்ட டெங்கி பாதிப்புகள் கண்டறியப்பட்டன.
சைன்ஸ் பார்க் டிரைவ், கிளப் ஸ்திரீட், லெண்டோர் லூப் உள்ளிட்ட குழுமங்கள் அத்தகைய பிரிவில் உள்ளன.

