$1.1 பில்லியன் ஆதரவுத் திட்டம் ;சிங்கப்பூரர்களுக்கு மேலும் $200 வரை ரொக்கம்; $200 சமூக மேம்பாட்டு மன்ற பற்றுச்சீட்டு

$1.1 பில்லியன் ஆதரவுத் திட்டம் ;சிங்கப்பூரர்களுக்கு மேலும் $200 வரை ரொக்கம்; $200 சமூக மேம்பாட்டு மன்ற பற்றுச்சீட்டு

2 mins read
5c08a7d7-ed24-419f-bd45-22257f368f37
துணைப் பிரதமர் லாரன்ஸ் வோங், வாழ்க்கைச் செலவுகளை சிங்கப்பூரர்கள் சமாளிக்க கூடுதல் உதவிகளை அறிவித்துள்ளார். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவினங்களை சிங்கப்பூரர்கள் சமாளிக்க கூடுதலாக $1.1 பில்லியன் வாழ்க்கைச் செலவின ஆதரவுத் தொகுப்புத் திட்டம் கைகொடுக்கவிருக்கிறது.

இதன் ஓர் அம்சமாக உத்தரவாதத் தொகுப்புத் திட்டத்துக்கு $800 மில்லியன் கூடுதலாக ஒதுக்கப்பட்டு மேம்படுத்தப்படுகிறது.

கிட்டத்தட்ட 2.5 மில்லியன் சிங்கப்பூரர்களுக்கு $200 வரை கூடுதல் ரொக்கம் வழங்கப்படும்.

டிசம்பர் மாதம் வழங்கப்படவுள்ள உத்தரவாதத் தொகுப்பின் ரொக்கத்துடன் இதுவும் சேர்த்து வழங்கப்படும். இதைச் சேர்த்து தகுதிபெறும் சிங்கப்பூரர்கள் $800 வரை ரொக்கம் பெறுவர்.

ஒவ்வொரு சிங்கப்பூரர் இல்லங்களுக்கும் எதிர்வரும் ஜனவரி மாதம் $200 சமூக மேம்பாட்டு மன்ற (சிடிசி) பற்றுச்சீட்டுகளும் கிடைக்கும்.

இதனுடன் ஒவ்வொரு சிங்கப்பூரர் குடும்பங்களுக்கும் 2024ஆம் ஆண்டில் கிடைக்கும் சிடிசி பற்றுச்சீட்டுகளின் மதிப்பு $500 ஆகிறது.

இந்தப் புதிய ஆதரவுத் தொகுப்புத் திட்டத்தை நிதியமைச்சரும் துணைப்பிரதமருமான லாரன்ஸ் வோங் வியாழக்கிழமை காலை நடந்த செய்தியாளர் சந்திப்பில் அறிவித்தார்.

குறைந்த, நடுத்தர வருமானமுள்ள குடும்பங்களுக்கு மேலும் ஆதரவு கிடைக்கும் வகையில் உள்ள இந்தத் திட்டங்கள் மூலம் அனைத்து சிங்கப்பூரர்களுக்கும் வெவ்வேறு அளவில் உதவி கிடைக்கும் என்று திரு வோங் தெரிவித்தார்.

புதன்கிழமை அறிவிக்கப்பட்ட தண்ணீர்க் கட்டண உயர்வையும் சமாளிக்க ஒவ்வொரு காலாண்டுக்கும் $20 யு-சேவ் கழிவுகள் வழங்கப்படும்.

2024ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் 2025ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வரை ஆண்டுக்கு $80 என்ற அடிப்படையில் வீடமைப்பு வளர்ச்சிக் கழக வீடுகளில் உள்ள 950,000 இல்லங்களுக்கு $160 கட்டணக் கழிவு கிடைக்கும்.

அத்தனை குடியிருப்புகளுக்கும் அரை மாத சேவை, பராமரிப்புக் கட்டணத்தில் கழிவும் கிடைக்கும்.

அண்மையில் பொதுப் போக்குவரத்து கட்டண உயர்வு அறிவிக்கப்பட்டது. அதன்விளைவாக ஒத்திவைக்கப்பட்ட 15.6% கட்டண உயர்வு மாற்றத்தை சரிசெய்ய கூடுதல் தள்ளுபடி தொகையாக $300 மில்லியன் 2024ஆம் ஆண்டுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

$1,600க்கும் குறைவான மொத்த குடும்ப வருமானம் உள்ள குடும்பங்களுக்கு $50 பொதுப் போக்குவரத்து பற்றுச்சீட்டுகள் வழங்கப்படவுள்ளன.

குறிப்புச் சொற்கள்