மூன்றரை ஆண்டு பொறியியல் மற்றும் விரிவாக்கப் பணிகளுக்குப் பிறகு முனையம் 2ன் வடக்குப் பகுதியில் சாங்கி விமான நிலையத்தின் செயல்பாடுகள் வியாழக்கிழமை தொடங்கியிருக்கிறது.
புதுப்பிக்கப்பட்ட முனையத்தில் மேலும் 15,500 சதுர மீட்டர் பரப்பளவு சேர்க்கப்பட்டுள்ளது. அடுத்த மாதம் இறுதியில் இம்முனையம் முழுமையாகத் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்தடுத்த வாரங்களில் கடைகள், உணவகங்களும் படிப்படியாகத் திறக்கப்படும்.
முனையம் 2ன் வடக்குப் பகுதியில் அமைந்துள்ள வசதிகளை தற்போது பயணிகள் பயன்படுத்த முடியும்.
ஜெர்மன் நாட்டின் லுஃப்தான்சா, பங்ளாதேஷ், இலங்கை உள்ளிட்ட தெற்கு ஆசிய நாடுகளுக்குச் செல்லும் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானங்கள், சுவிஸ் இண்டர்நேஷனல் விமான நிறுவனத்தின் விமானங்கள் முனையம் 2ல் உள்ள வடக்குப் பகுதியிலிருந்து செயல்படத் தொடங்கும் என்று நேற்று வெளியிட்ட அறிக்கையில் இந்த முனையத்தை நடத்தும் சாங்கி விமான நிலையக் குழுமம்(சிஏஜி) தெரிவித்தது.
இவற்றைத் தொடர்ந்து ஏர் ஜப்பான், ஆல் நிப்பான் ஏர்வேஸ், எத்திஹாட் ஏர்வேஸ், இண்டிகோ, மாலத்தீவு மற்றும் நேப்பாள் செல்லும் எஸ்ஐஏ விமானங்கள் அக்டோபரில் சேவையைத் தொடங்கும். இதனால் முனையம் 2ல் இயங்கும் விமானச் சேவைகளின் எண்ணிக்கை 12லிருந்து 16க்கு அதிகரிக்கும்.
இவை தவிர எஸ்ஐஏயின் முதல் வகுப்பு பயணச்சீட்டு வழங்கும் முகப்பு, சேட்ஸ் பிரிமியர் பயணிகள் ஓய்வறை ஆகியவையும் முனையம் 2ல் திறக்கப்பட்டுள்ளது என்று சிஏஜி அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது
முனையம் 2ன் வடக்குப் பிரிவு திறக்கப்படுவதன் மூலம் சாங்கி விமான நிலைய ஒட்டுமொத்த பயணிகளின் எண்ணிக்கை ஆண்டுக்கு 90 மில்லியனைத் தொடும். இதில் 2ஆம் முனையத்தில் மட்டும் பயணிகளை கையாளும் ஆற்றல் ஆண்டுக்கு 28 மில்லியனுக்கு அதிகரிக்கும்.
ஆகஸ்ட் வரை சாங்கி விமான நிலையத்தின் பயணிகளின் போக்குவரத்து கொவிட்-19 காலத்துடன் ஒப்பிடுகையில் 87 விழுக்காடு வரை அதிகரித்துள்ளது.
தொடர்புடைய செய்திகள்
கொள்ளைநோய் பரவிய காலத்தில் பயணிகளின் எண்ணிக்கை குறைந்தபோது 2020 மே மாதத்தில் முனையம் 2 புதுப்பிக்கப்படுவதற்காக மூடப்பட்டது. அதன் தெற்குப் பகுதி 2022ல் கட்டம் கட்டமாகத் திறக்கப்பட்டது. அப்போது குடிநுழைவு, பயணப் பெட்டிகளை பெறும் இடங்கள் திறக்கப்பட்டன. புறப்பாடுப் பிரிவு அக்டோபரில் திறக்கப்பட்டது.
புதுப்பிக்கப்பட்ட முனையம் 2 புறப்பாட்டுப் பகுதியில் விரைவான தடையற்ற பயணத்திற்கான தானியங்கி இயந்திரங்கள் இடம்பெற்றுள்ளன. இதன் குடிநுழைவுப் பகுதியும் தானியங்கி குடிநுழைவுப் பாதைகளை அமைக்கும் வகையில் விரிவுபடுத்தப்படவிருக்கிறது.