இதய நோயைக் கண்டறிய ஆய்வு தொடக்கம்

3 mins read
1023df5f-dd54-4434-9d65-abbd9e8cfd72
இதய நோயைப் படிப்படியாகச் சிதைப்பதைச் சித்திரிக்க, சுகாதார அமைச்சர் ஓங் யி காங் (வலது) ஒரு பனிக்கட்டியைச் சுத்தியலால் உடைத்து, ‘புரோஜெக்ட் ரீசெட்’டைத் தொடங்கிவைத்தார். அவருடன் ‘புரோஜெக்ட் ரீசெட்’ தொடர்புகொள்ளும் முதன்மை ஆய்வாளர் (Corresponding Principal Investigator) பேராசிரியர் ரோஜர் ஃபூ. - படம்: சாவ்பாவ்

பெரிய அளவிலான வருமுன் காக்கும் இதய சுகாதாரத் திட்டத்தின் ஓர் அங்கமாக, 40 முதல் 70 வயது வரையிலான 10,000க்கும் மேற்பட்ட சிங்கப்பூர்வாசிகள் இதய நோய்க்குப் பரிசோதிக்கப்படுவர்.

உயிர்க்கொல்லி நோயான இதய நோயை ஆரம்பகட்டத்திலேயே கண்டுபிடிக்க இத்திட்டம் வழிவகுக்கும். சிங்கப்பூரில் அன்றாடம் சராசரியாக 34 பேருக்கு மாரடைப்பு ஏற்படுகிறது; இதய நோயால் 23 பேர் இறக்கின்றனர்.

‘புரோஜெக்ட் ரீசெட்’ என்று அழைக்கப்படும் இத்திட்டத்தை சுகாதார அமைச்சர் ஓங் யி காங் புதன்கிழமை தொடங்கிவைத்தார்.

தேசிய ஆய்வு அறநிறுவனமும் சுகாதார அமைச்சின் தேசிய மருத்துவ ஆய்வு மன்றமும் இணைந்து வழங்கிய $25 மில்லியன் பெறுமானமுள்ள மானியத்தைப் பெறும் இத்திட்டம், பொதுச் சுகாதாரக் கூட்டமைப்புகள், மருத்துவப் பள்ளிகள், தொழில்துறை, சமூகப் பங்காளிகள் ஆகியவற்றை ஒன்றிணைக்கும்.

உயர் ரத்த அழுத்தம், உயர் ரத்தக் கொழுப்பு, கல்லீரலில் கொழுப்பு படியும் நோய், குடும்பத்தில் இதயநோய் அல்லது பக்கவாதம், உடல் பருமன் ஆகிய பிரச்சினைகளைக் கொண்டவர்கள், இத்திட்டத்தில் சேர விண்ணப்பிக்கலாம். கல்லீரல், இதயம், வளர்சிதை மாற்றம் சார்ந்த பரிசோதனைகளுக்குச் செல்லும் வாய்ப்பை அவர்கள் பெறுவர்.

புதிய தொழில்நுட்பங்கள் அறிமுகமாகும் ஐந்தாண்டுத் திட்டத்திற்கு 3,000 பேர் தேர்ந்தெடுக்கப்படுவர். ஏற்கெனவே சிறிய அளவிலான இதய ஆய்வுகளில் பங்கேற்றவர்களும் அவர்களில் அடங்குவர்.

ஐந்தாண்டுகளுக்கு இலவச திறன் கைக்கடிகாரம், ஆண்டுக்கு அதிகபட்சம் ஐந்து முறை இலவச மருத்துவப் பரிசோதனைகளும் மருத்துவ நிபுணர்களின் பராமரிப்பு, நேரம் ஒதுக்கியதற்காக படித்தொகை வழங்கப்படும்.

மெய்நிகர் தொழில்நுட்பம்வழி தங்கள் கல்லீரல் திசு விறைப்பு, இதயத்துடிப்பை பயனாளர்களால் உணரமுடியும்.

‘புரோஜெக்ட் ரீசெட்’ பயன்படுத்தும் மற்றொரு தொழில்நுட்பம், ‘கார்டியோசைட்‘. மாரடைப்பு ஏற்படும் அபாயத்தை எதிர்நோக்குபவரை அடையாளம் காண அது உதவும்.

சுகாதார அமைச்சர் ஓங், என்யுஎஸ் ‘ஹேப்ட்க்ளவ்’ (HaptGlove) வழி மெய்நிகர் உண்மை உலகத்தை அனுபவிக்கிறார். என்யுஹெச்எஸ் வழங்கும் இரு தொழில்நுட்பங்கள் - ஹோலோமெடிசன் (Holomedicine), சிங்கப்பூரில் மாரடைப்பு ஆபத்துக் குறிகளின் பரவலை உடனுக்குடன் காட்சிப்படுத்தும் ‘கார்டியோசைட்‘ (CardioSight),‘புரோஜெக்ட் ரீசெட்’டில் இடம்பெறும்.
சுகாதார அமைச்சர் ஓங், என்யுஎஸ் ‘ஹேப்ட்க்ளவ்’ (HaptGlove) வழி மெய்நிகர் உண்மை உலகத்தை அனுபவிக்கிறார். என்யுஹெச்எஸ் வழங்கும் இரு தொழில்நுட்பங்கள் - ஹோலோமெடிசன் (Holomedicine), சிங்கப்பூரில் மாரடைப்பு ஆபத்துக் குறிகளின் பரவலை உடனுக்குடன் காட்சிப்படுத்தும் ‘கார்டியோசைட்‘ (CardioSight),‘புரோஜெக்ட் ரீசெட்’டில் இடம்பெறும். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

“வாழ்க்கைமுறை, மரபணு மாற்றங்கள் போன்ற இதய நோய்க்கான அபாயக் கூறுகள் தரவுகள் மூலம் ஆராயப்படும். இதன்வழி நோயாளியின் ஆரோக்கியம் பற்றி தெரியவரும். இத்தகைய ஆய்வு இவ்வளவு பெரிய அளவில் இதற்குமுன் மேற்கொள்ளப்பட்டதில்லை.

“செயற்கை நுண்ணறிவு மூலம் இதய நோய்த் தடுப்பு உத்திகளை உருவாக்கவும் மக்களை எளிதில் சென்றடையவும் செய்யும் இத்திட்டம்,’ என்றார் ‘புரோஜெக்ட் ரீசெட்’ திட்டத்தின் முதன்மை ஆய்வாளர் பேராசிரியர் ரோஜர் ஃபூ.

ஆய்வுகளின்படி, சிங்கப்பூரர்களில் மூவரில் ஒருவருக்கு ஆரம்பகட்ட இதயநோய் கண்டறியப்படாமல் இருப்பதாகக் கணிக்கப்படுகிறது.

கடந்த ஏழு ஆண்டுகளாக தேசிய மருத்துவ ஆய்வு மன்றம் இதயம் சார்ந்த ஆய்வுகளுக்கு $180 மில்லியன் பெறுமானமுள்ள மானியம் வழங்கியுள்ளதாகக் கூறிய அமைச்சர் ஓங், இதய நோய்களை எதிர்கொள்ள மருத்துவம் மட்டுமல்லாது, வாழ்க்கைமுறை ரீதியாகவும் முயற்சிகள் தேவை என்றார்.

“இதயநோய்த் தடுப்பில் உன்னத மாற்றத்தை ஏற்படுத்த முழு நாடும் ஒன்றுபட்டு செயல்பட்டால்தான் முடியும்.” என்றார் நிகழ்ச்சியின் தலைமை ஏற்பாட்டாளரும் தேசிய பல்கலைக்கழ்க யோங் லூ லின் மருத்துவப் பள்ளியின் மூத்த துணை மேலாளருமான (Senior Assistant Manager) அமுதா ராஜு (வலது​).
“இதயநோய்த் தடுப்பில் உன்னத மாற்றத்தை ஏற்படுத்த முழு நாடும் ஒன்றுபட்டு செயல்பட்டால்தான் முடியும்.” என்றார் நிகழ்ச்சியின் தலைமை ஏற்பாட்டாளரும் தேசிய பல்கலைக்கழ்க யோங் லூ லின் மருத்துவப் பள்ளியின் மூத்த துணை மேலாளருமான (Senior Assistant Manager) அமுதா ராஜு (வலது​). - படம்: ரவி சிங்காரம்

இந்த ஆய்வுத் திட்டத்தில் கல்லீரலுக்கும் இதயத்துக்கும் இடையேயான தொடர்பை ஆராயவிருக்கும் உதவிப் பேராசிரியர் மார்க் தினேஷ் முத்தையா, நோய்கள் வருமுன் காக்கும் முயற்சிகளை இத்திட்டம் விரிவுபடுத்தும் என்றார். தேசிய பல்கலைக்கழக மருத்துவமனையில் இரைப்பை, குடல், கல்லீரல் பிரிவில் மூத்த ஆலோசகராக அவர் பணிபுரிகிறார்.

இதற்கு முந்தைய ‘பிக்மேன்’ ஆய்வில் பங்கேற்ற திரு மைக் டான், 64,‘புரோஜெக்ட் ரீசெட்’டிலும் பங்கேற்கவுள்ளார்.

“ரத்தக் கொழுப்பு கட்டுக்குள் இருக்கிறது. உடற்பயிற்சியும் செய்கிறேன். இதய ஆரோக்கியமும் நன்றாக இருக்கிறது. எனினும், கல்லீரலில் கொழுப்பு படியும் நோய் இருப்பதாகத் தெரியவந்துள்ளது,” என்றார் அவர்.

இதற்கு முந்தைய ‘பிக்மேன்’ ஆய்வில் பங்குபெற்ற திரு மைக் டான், 64,‘புரோஜெக்ட் ரீசெட்’டிலும் ஆவலுடன் பங்குபெறவுள்ளார். ஆய்வுகளின்படிதான் இவருக்குக் கொழுப்புமிக்க கல்லீரல் நோய் இருப்பது எதிர்பாராவிதமாகத் தெரியவந்தது.
இதற்கு முந்தைய ‘பிக்மேன்’ ஆய்வில் பங்குபெற்ற திரு மைக் டான், 64,‘புரோஜெக்ட் ரீசெட்’டிலும் ஆவலுடன் பங்குபெறவுள்ளார். ஆய்வுகளின்படிதான் இவருக்குக் கொழுப்புமிக்க கல்லீரல் நோய் இருப்பது எதிர்பாராவிதமாகத் தெரியவந்தது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

‘புரோஜெக்ட் ரீசெட்’டில் பங்கேற்க https://medicine.nus.edu.sg/reset_landing/ எனும் இணையத்தளத்தில் விண்ணப்பிக்கலாம்.

குறிப்புச் சொற்கள்