சிங்கப்பூரில் செப்டம்பர் 25 முதல் 29 வரை முதல் அனைத்துலக சீர்திருத்தத் தலைமைத்துவக் கருத்தரங்கு (ஐசிஎல்பி) நடைபெறுகிறது.
ஆசிய பசிபிக் சீர்திருத்த நிர்வாகிகள் சங்க (ஏபிசிசிஏ) உறுப்பினர்கள், பார்வையாளர்கள் என 12 நாடுகளின் பிரதிநிதிகள் இக்கருத்தரங்கில் பங்கேற்கின்றனர்.
‘ஐசிஎல்பி’யின் முதல் நோக்கம், அனைத்துலகச் சீர்திருத்தச் சங்கத் தலைவர்களிடையே கூட்டுமுயற்சிகளையும் பரிமாற்றங்களையும் ஏற்படுத்துவதாகும்.
மற்றொரு குறிக்கோள், குற்றவாளிகளைச் சீர்திருத்தி சமுதாயத்துடன் மீண்டும் ஒன்றிணைக்கும் நடைமுறைகளைப் பகிர்ந்துகொள்ள தளம் வழங்குவதாகும்.
சிங்கப்பூர் சிறைச் சேவை, விரைவாக மாறிவரும் சீர்திருத்தச் சூழலுடன் இணைந்து மேற்கொண்டுவரும் பயிலரங்குகள், பயிற்சிகள் பற்றி விவரித்தது.
பொதுமக்களிடம் நம்பிக்கையை வளர்க்க ஊடகங்களின் பயன்பாடு, சீர்திருத்தப் பணிகளில் தொழில்நுட்பத்தின் அவசியம், போதைப்பொருள் புழக்கத்திலிருந்து மீள உதவித் திட்டங்கள், சமூகத்தின் பங்கு போன்றவற்றைக் குறித்தும் சிங்கப்பூர் சிறைச் சேவை பகிர்ந்துவருகிறது.
திங்கட்கிழமை (செப்டம்பர் 25) நடந்த தொடக்க நிகழ்ச்சியில் உள்துறை, தேசிய வளர்ச்சித் துணை அமைச்சர் டாக்டர் முகம்மது ஃபைஷல் இப்ராஹிம் சிறப்புரை ஆற்றினார் .
சீர்திருத்த அமைப்புகள் குற்றவாளிகளைப் பாதுகாப்பதோடு நின்றுவிடக்கூடாது. சிறையிலிருந்து வெளியேறியபின் மீண்டும் சமுதாயத்தில் இணையவும் துணைபுரிய வேண்டும் என்றார் டாக்டர் இப்ராஹிம்.
தொடர்புடைய செய்திகள்
1990களில் குற்றவாளிகளைப் பாதுகாப்பாக வைத்திருப்பதிலேயே சிங்கப்பூர் சிறைச் சேவை கவனம் செலுத்தியது. ஆனால், சிறைத்தண்டனை பெற்றவர்கள் விடுதலையான பிறகு மீண்டும் மீண்டும் சிறைக்குத் திரும்பினர்; சிறை அதிகாரிகளின் ஊக்கமும் பாதிப்படைந்தது.
இதை உணர்ந்த சிங்கப்பூர் சிறைச் சேவை, குற்றவாளிகள் மீண்டும் குற்றம் புரியாமல், சமுதாயத்தில் இணைய பல திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. அதனால்தான் சிறைச் சேவையாளர்களுக்கு ‘உயிர்களின் தலைவர்கள்’ என்ற தகுந்த பெயரும் வழங்கப்பட்டுள்ளது, எனப் பாராட்டினார் டாக்டர் இப்ராஹிம்.
தற்போது சிங்கப்பூர் சிறைக் கைதிகளுக்கு மனநல ஆதரவு, குடும்ப உறவுகள், வேலைத் திறன்கள் சார்ந்த பல்வேறு செயல்திட்டங்கள் உள்ளன.
மறுவாழ்வுப் பயணத்தைச் சீராக்க, சிறைத்தண்டனை காலத்தின் கடைசி பாகத்திலேயே மேற்பார்வையோடு சமுதாயத்தில் இணைய அனுமதிக்கப்படுகின்றனர்.
இத்தகைய சமூகத் திட்டங்களில் பங்கேற்கும் சிறைக் கைதிகளின் விகிதம் 2014ல் 11%ஆக இருந்தது. தற்போது அது 28%க்கு உயர்ந்துள்ளது.
மீண்டும் குற்றம் புரியும் விகிதமும் 20 ஆண்டுகளுக்கு முன்பிருந்ததைவிடப் பாதியாகக் குறைந்துள்ளது.
2004ல் தொடங்கிய மஞ்சள் நாடா இயக்கத்தைப் பற்றியும் பேசிய டாக்டர் இப்ராஹிம், அதில் பங்கேற்கும் முதலாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகப் பாராட்டினார். 2004ல் 1,400ஆக இருந்த அந்த எண்ணிக்கை இவ்வாண்டு ஜூன் மாதம் 6,500ஆகப் பதிவானது.
செப்டம்பர் 24 ஆம் தேதி நடந்த மஞ்சள் நாடா ஓட்டத்தில் ஐசிஎல்பிக்கு வந்திருந்த சீர்திருத்தச் சேவைத் தலைவர்களும் கலந்துகொண்டனர்.
சிங்கப்பூரை முன்னுதாரணமாகக் கொண்டு 2016ல் செக் குடியரசு அதன் முதல் மஞ்சள் நாடா ஓட்டத்தை நடத்தியது. மற்ற நாடுகளிலும் இந்த இயக்கம் சூடுபிடித்துவருகிறது.
இறுதியாக, ஐசிஎல்பி போன்ற அனைத்துலகக் கூட்டுமுயற்சிகளின் பலன்களை வலியுறுத்திய டாக்டர் இப்ராஹிம், ஜப்பானின் தொண்டூழிய அதிகாரித் திட்டம், ஆஸ்திரேலியாவின் மிக அருகில் (Close Quarters) கட்டுப்படுத்தும் உத்திகள், குற்றவாளிகளுக்கு அதிர்ச்சியான அனுபவங்களிலிருந்து மீள வட அயர்லாந்து வழங்கும் உதவி, போன்றவற்றிலிருந்து சிங்கப்பூரும் கற்றுவருவதாகக் கூறினார்.
ஐசிஎல்பி 2023ன் ஏற்பாட்டுக் குழுத் தலைவர் டிஎஸ்பி சுரேந்திரன், 36, “அனைத்துலக சீர்திருத்தத் தலைவர்களிடம் கற்றுக்கொண்டவை இங்குள்ள குற்றவாளிகளுக்குச் சீரான வாழ்வை அமைத்துத்தர பெரிதும் துணைபுரியும்,” என்றார். 11 ஆண்டுகளாக சிங்கப்பூர் சிறைச் சேவையில் உள்ள இவர், தற்போதைய சிறை அதிகாரிகளுக்கு பயிற்சித்திட்டங்களை நடத்திவருகிறார்.