மோசடி: $70,000 இழந்த 74 வயது முதியவர்

மோசடி: $70,000 இழந்த 74 வயது முதியவர்

2 mins read
7ddb8ba6-1ad3-4c2a-8625-681ebf88bdd1
திரு லோ என்ற 74 வயது முதியவர் ஃபேஸ்புக்கில் வாத்துக் கறி விற்பனை விளம்பரத்தைக் கண்டு மனம் மகிழ்ந்து அந்த விற்பனையாளருடன் ஆறு மணி நேரம் நட்பாகப் பேசினார். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

திரு லோ என்ற 74 வயது முதியவர் ஃபேஸ்புக்கில் வாத்துக் கறி விற்பனை விளம்பரத்தைக் கண்டு மனம் மகிழ்ந்து அந்த விற்பனையாளருடன் ஆறு மணி நேரம் நட்பாகப் பேசினார்.

வாத்துக் கறி வாங்க விருப்பம் என்று சொன்னார்.

அந்த விற்பனையாளர் ஒரு மோசடிப் பேர்வழி. அவர் அந்த முதியவருக்கு வாட்ஸ்அப்பில் ஒரு தகவல் அனுப்பினார்.

கிராப்&கோ என்ற மூன்றாம் தரப்பு செயலியைக் கைப்பேசியில் பதிவிறக்கம் செய்து பேநவ் மூலம் $5 முன்பணம் கட்டும்படி மோசடிக்காரர் கேட்டார்.

முதியவருக்குச் சந்தேகம் வந்துவிட்டது. விற்பனையாளரிடம் அது பற்றி கேட்டார். அவரோ, ஐயா முன்பணமாக $5தான் அனுப்புகிறீர்கள். வெறும் $5 பணத்தை மோசடி செய்யும் வேலையில் யாராவது ஈடுபவார்களா, தாரளமாக நம்பலாம் என்று முதியவரிடம் சொல்ல அவருக்கு நம்பிக்கை ஏற்பட்டது.

அதையடுத்து மோசடிக்காரர் கேட்டுக்கொண்டதைப் போலவே அந்த முதியவர் செயல்பட்டார்.

மோசடிக்காரரிடம் பேசிக்கொண்டு இருந்தபோதே முதியவரின் கைப்பேசி அரை மணியில் பல முறை நின்று நின்று அணைந்து அணைந்து மீண்டும் மீண்டும் செயல்படத் தொடங்கியது.

மூன்றாம் தரப்புச் செயலியை மூட முயன்றும் முடியவில்லை. ஏதோ மோசடி நடக்கிறது என்பதை முதியவர் கண்டுகொண்டார். அதற்குள்ளாக, முதியவர் பேசிக்கொண்டு இருந்ததைக் காதில் வாங்கிய அந்த முதியவரின் மனைவி சந்தேகப்பட்டு தன் புதல்வியை அழைத்தார்.

உடனே டிபிஎஸ் வங்கிக்குத் தகவல் பறந்தது. ஆனால் அதற்குள்ளாகவே முதியவரின் டிபிஎஸ், பிஓஎஸ்பி வங்கிக் கணக்குகளில் இருந்து சுமார் $59,000 தொகை போய்விட்டது.

அதோடு, அவரின் டிபிஎஸ் கடன் அட்டையைப் பயன்படுத்தி சுமார் $11,000 பணத்தையும் மோசடிக்காரர் எடுத்துக்கொண்டுவிட்டார்.

ஓய்வுக்காலத்திற்குச் சேர்த்து வைத்து இருந்த பணம் எல்லாம் போய்விட்டதை முதியவர் திரு லோ உணர்ந்தார்.

காவல்துறையிடம் புகார் தெரிவிக்கப்பட்டது. அதை உறுதிப்படுத்திய காவல்துறை புலன்விசாரணை நடப்பதாகத் தெரிவித்தது.

குறிப்புச் சொற்கள்