அனைத்து தொடக்கக் கல்லூரிகளிலும் தீவிரவாத மனப்போக்கிற்கு எதிரான பயிலரங்குகள்

2 mins read
cc399a2d-ea5c-46a2-9a3a-fa46f4a9971d
பயிலரங்குகளை உயர்நிலை மேல் வகுப்பு மாணவர்களுக்கும் அடுத்த ஆண்டில் அறிமுகப்படுத்த திட்டமிருப்பதாக கல்வி அமைச்சர் சான் சுன் சிங் தெரிவித்தார். - படம்: சாவ் பாவ் 

சிங்கப்பூரில் செயல்படும் எல்லா தொடக்கக் கல்லூரிகளையும் சேர்ந்த மாணவர் தூதர்கள், அடுத்த ஆண்டில் தீவிரவாத மனப்போக்கிற்கு எதிரான பயிலரங்குகளில் கலந்துகொள்வார்கள்.

பயங்கரவாத மிரட்டலைப் பற்றி இளையர்கள் தெரிந்துகொள்ள உதவியாக இது இடம்பெறுகிறது.

அந்தப் பயிலரங்குகளை உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை நடத்தும். இணையம் மூலம் தீவிரவாத மனப்போக்கை வளர்த்துக்கொள்ளும் ஆபத்து அதிகரித்து வருகிறது.

அதிலிருந்து இளையர்களைக் காக்கும் முயற்சிகளின் ஒரு பகுதியாக பயிலரங்குகள் நடத்தப்படும் என்று கல்வி அமைச்சர் சான் சுன் சிங் வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.

பயிலரங்குகள், முன்னோடித் திட்டமாக 2022ல் தொடக்கக் கல்லூரிகளில் அறிமுகமாயின. அவை இந்த ஆண்டில் விரிவடைகின்றன.

கருவூலக் கட்டடத்தில் பொதுச் சேவை மாநாடு ஒன்றில் பேசிய திரு சான், இத்தகைய பயிலரங்குகளை உயர்நிலை மேல் வகுப்பு மாணவர்களுக்கு அடுத்த ஆண்டில் அறிமுகப்படுத்துவதற்கான திட்டங்கள் இருப்பதாகவும் கூறினார்.

ஒருவரிடத்தில் காணப்படும் தீவிரவாத மனப்போக்கிற்கான அறிகுறிகளை எப்படி தெரிந்துகொள்வது என்பது பற்றி மாணவர்களுக்கும் கல்வியாளர்களுக்கும் போதிப்பது இந்தப் பயிலரங்குகளின் நோக்கம்.

தீவிரவாத மனப்போக்கை வளர்த்துக்கொண்ட ஒருவரைச் சந்திக்கும்போது அதன்தொடர்பில் எப்படி செயல்படுவது என்பது பற்றியும் அவர்கள் தெரிந்துகொள்வார்கள்.

சிங்கப்பூரைப் பொறுத்தவரை சுயமாக தீவிரவாத மனப்போக்கை வளர்த்துக்கொள்வோரில் இளைஞர்கள் அதிகமாக இருக்கிறார்கள் என்பதை அமைச்சர் சான் சுட்டினார்.

கடந்த 2015 முதல் 37 சிங்கப்பூரர்களுக்கு எதிராக உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கிறது. அவர்களில் 11 பேர் 21 வயதுக்கும் குறைந்த வயதுடையவர்கள்.

அந்த 11 பேரில் ஐந்து பேர் சிங்கப்பூரில் தாக்குதல்களை நடத்த திட்டமிட்டு இருந்தவர்கள்.

கைதானவர்களில் ஆக இளையவருக்கு வயது 15 என்பதை அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

தீவிரவாத கும்பல்கள் மின்னிலக்க ஊடகத்தை மிகத் திறமையாகப் பயன்படுத்தி ஆட்களைச் சேர்க்கின்றன என்பதையும் அமைச்சர் குறிப்பிட்டார்.

சிங்கப்பூர் சுய தீவிரவாத மனப்போக்கு மிரட்டலை அதிகமாக எதிர்நோக்குகிறது என்று குறிப்பிட்ட திரு சான், இதில் மெத்தனப்போக்குக் கூடாது என்றார்.

உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் தடுத்து வைக்கப்பட்ட இளையர்களில் பெரும்பாலானவர்கள் மறுவாழ்வு பயிற்சி பெற்று சமூகத்தில் மீண்டும் ஒருங்கிணையும் வகையில் நல்ல முன்னேற்றம் அடைந்து இருக்கிறார்கள் என்று கடந்த பிப்ரவரி மாதம் சட்ட, உள்துறை அமைச்சர் கா சண்முகம் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்