2022ல் சாதனை அளவுக்குத் திருமணங்கள்

2 mins read
59f964a4-16c3-4650-9611-0b011d706742
சிங்கப்பூரில் குடிமக்கள் திருமணங்களின் எண்ணிக்கை 2022ல் சாதனை அளவாக இருந்தது. - படம்: கோப்புப்படம்

சிங்கப்பூரில் 2022ஆம் ஆண்டில் சாதனை அளவுக்குத் திருமணங்கள் நடந்துள்ளன. கடந்த 2020 முதல் இரண்டாவது ஆண்டாக திருமணங்கள் அதிகரித்து உள்ளன.

சிங்கப்பூர் குடிமக்களைப் பொறுத்தவரை 2022ல் 24,767 திருமணங்கள் நடந்தன. இந்த எண்ணிக்கை 2021ல் 23,433 ஆக இருந்தது.

கொவிட்-19 தொற்றுநோய் காரணமாக பலரும் தங்கள் திருமணத்தை ஒத்தி வைத்ததே இதற்கான காரணமாக இருக்கலாம்.

கடந்த ஐந்து ஆண்டுகளில் இடம்பெற்ற குடிமக்கள் திருமணங்களின் வருடாந்திர சராசரி எண்ணிக்கை 22,700ஆக இருக்கிறது. இது அதற்கு முந்தைய ஐந்தாண்டுகளின் அளவான 23,600ஐவிட குறைவாகவே உள்ளது.

சிங்கப்பூர் குடிமக்களைப் பொறுத்தவரை மணமகன்களின் முதல் திருமண சராசரி வயது சென்ற ஆண்டில் 30.5 ஆக இருந்தது. மணமகளின் சராசரி வயது 28.8. இவை 2012ல் முறையே 30.1 ஆகவும் 27.7 வயது ஆகவும் இருந்தன.

சிங்கப்பூர் தம்பதியருக்குக் கடந்த 2022ல் 30,429 பிள்ளைகள் பிறந்தன. இந்த எண்ணிக்கை 2021ஆம் ஆண்டில் 31,713 ஆக இருந்தது.

கணக்கிட்டுப் பார்க்கையில் 2022ல் குழந்தை பிறப்புகள் 4 விழுக்காடு குறைந்து இருக்கின்றன.

சிங்கப்பூர்வாசிகளின் மொத்த கருவள விகிதம் 2022ல் சாதனை அளவுக்குக் குறைந்து 1.04 ஆக இருந்தது.

சிங்கப்பூர்வாசிகளான சீனர்களைப் பொறுத்தவரை கருவள விகிதம் 2021ல் 0.96 ஆக இருந்தது. இது 2022ல் 0.87 ஆகக் குறைந்துவிட்டது. இந்தியரிடையே இந்த விகிதம் 2021ல் 1.05 ஆக இருந்தது. 2022ல் 1.01 ஆகக் குறைந்துவிட்டது.

அதேவேளையில், மலாய்க்காரர்களைப் பொறுத்தவரை அதே காலகட்டத்தில் இந்த விகிதம் 1.82லிருந்து 1.83 ஆகக் கொஞ்சம் கூடி இருக்கிறது.

குறிப்புச் சொற்கள்