கள்ளப் பணத்தை நல்ல பணமாக்கும் வழக்கில் தொடர்புடையவரின் சகோதரரும் மாயம்

கள்ளப் பணத்தை நல்ல பணமாக்கும் வழக்கில் தொடர்புடையவரின் சகோதரரும் மாயம்

2 mins read
2e99d020-c61a-4b72-a050-d7a097cd5c04
வரைபடத்தில் சித்திரிக்கப்பட்டுள்ள, வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருக்கும் வாங் ஷுய்மிங்கின் சகோதரரான வாங் ஷுய்டிங் காவல்துறையால் தேடப்பட்டு வருகிறார். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

கள்ளப் பணத்தை நல்ல பணமாக்கிய சிங்கப்பூரின் ஆக மோசமான வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவரின் சகோதரரையும் காவல்துறை தேடி வருகிறது. இந்த வழக்கில் தேடப்பட்டு வரும் எட்டுப் பேரில் அவரும் ஒருவர்.

$2.4 பில்லியன் மதிப்புள்ள சொத்தும் ரொக்கமும் கைப்பற்றப்பட்ட வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள பத்து வெளிநாட்டவரில் வாங் ஷுய்மிங்கும் ஒருவர். அந்த பத்துப் பேரும் பிறப்பால் சீனக் குடிமக்கள்.

வாங்குக்குப் பிணை வழங்குவது குறித்த வழக்கு விசாரணை வெள்ளிக்கிழமை நடந்தது. அதில் வாங்குக்குப் பிணை வழங்கப்படக்கூடாது என்று அரசுத் தரப்பு வழக்கறிஞர் டேவிட் கோ வாதிட்டார்.

அப்போது திரு கோ, வழக்குத் தொடர்பில் காவல்துறையால் தேடப்பட்டு வரும் எட்டுப் பேரில் வாங்கின் சகோதரரான வாங் ஷுய்டிங்கும் ஒருவர் என்று தெரிவித்தார்.

இரண்டரை மணிநேர விவாதத்துக்குப் பிறகு மாவட்ட நீதிபதி பிரண்டா டான், வாங்குக்கு பிணை வழங்கக்கூடாது என்று தீர்ப்பளித்தார்.

வாங்கின் குடும்பம் சிங்கப்பூருக்கு 2019வ் வந்தது. இப்போது ஒரு கடுமையான குற்றச்சாட்டை அவர் எதிர்நோக்குவதால், அவருக்கு உள்ள பெரும்பணத்தைக் கொண்டு மற்றொரு நாட்டில் அவர் குடிபெயர வாய்ப்புள்ளது என்று நீதிபதி டான் குறிப்பிட்டார்.

வாங்குக்குப் பிணை வழங்கப்பட்டால் அவர் வழக்கில் சம்பந்தப்பட்ட மற்றவர்களின் உதவியுடன் நாட்டைவிட்டு வெளியேறக்கூடும் என்றும் குற்றம் சாட்டப்பட்ட பத்துப் பேரில் வாங்தான் அதிகமான குற்றச்சாட்டுகளை எதிர்நோக்குகிறார் என்றும் அரசுத் தரப்பு வழக்குரைஞர் எடுத்துரைத்தார்.

வாங்கின் வழக்குக்கு முந்திய கலந்துரையாடல் அக்டோபர் 27ஆம் தேதி நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

குறிப்புச் சொற்கள்