தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சுயதொழில் செய்வோரும் குறைந்த வருமான ஊழியர்களும் பலவீனமான நிலையில் உள்ளனர்: என்டியுசி அறிக்கை

2 mins read
281ebd03-5f47-4c85-8668-e33d6fcb1604
ஓராண்டுகால ஆய்வில் பங்கெடுத்த 400 குறைந்த வருமான ஊழியர்களில் பாதி பேர் தங்களது வேலையில் பெருமை கொள்வதாகக் கூறினாலும், கால்பகுதியினரே தாங்கள் மதிக்கப்படுவதாகக் கருதினர்.  - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

பொதுவான மரியாதையின்மை, உயரும் வாழ்க்கைச் செலவினத்துக்கு மத்தியில் நிலைக்குத்திய அல்லது மெதுவான சம்பள வளர்ச்சி, பயிற்சிபெற்று வாழ்க்கைத்தொழிலில் முன்னேற விழிப்புணர்வின்மை அல்லது வாய்ப்பின்மை ஆகிய மூன்று முக்கிய விவகாரங்களைக் குறைந்த வருமான ஊழியர்கள் எதிர்நோக்குகின்றனர். 

தேசிய தொழிற்சங்க காங்கிரஸ் (என்டியுசி) நடத்திய ஓராண்டுகால ஆய்வில் பங்கெடுத்த 400 குறைந்த வருமான ஊழியர்களில் பாதி பேர் தங்களது வேலையில் பெருமைகொள்வதாகக் கூறினர்.

ஆயினும், நிபுணர்கள், மேலாளர்கள், நிர்வாகிகள் (பிஎம்இ) அளவிற்குத் தாங்கள் மதிக்கப்படுவதில்லை என்று அவர்களில் நான்கில் ஒரு பங்கினர் நினைக்கின்றனர்.

ஊழியர்களின் அக்கறைகளையும் ஆர்வங்களையும் கண்டறிவதற்காக 130 அங்கங்களின்வழி 42,000க்கும் மேற்பட்ட ஊழியர்களிடமிருந்து சேகரிக்கப்பட்ட கருத்துகளுடன் வெள்ளிக்கிழமை என்டியுசி வெளியிட்ட அறிக்கையில் இவ்விவரங்கள் வெளியிடப்பட்டிருந்தன. 

இளையர்கள், பணியிடைக்கால ஊழியர்கள், பராமரிப்பாளர்கள், மூத்த ஊழியர்கள், பலவீனமான நிலையிலுள்ள ஊழியர்கள் ஆகிய ஐந்து பிரிவினருக்குப் பத்து பரிந்துரைகளை அறிக்கை செய்தது. 

இளம் ஊழியர்களின் முக்கிய அக்கறை திறன் மேம்பாடாகவும், பணியிடைக்கால ஊழியருக்கு பராமரிப்பளிப்பாகவும் இருந்தது. மூத்த ஊழியர்களின் முக்கிய அக்கறை ஓய்வுக்காலச் சேமிப்பு. 

குறைந்த வருமான ஊழியர்களும் சுயதொழில் செய்வோரும் சாதகமற்ற வேலை நிலவரம், குறைவான வேலை பாதுகாப்பு, போதுமான வேலை பாதுகாப்பின்மை ஆகியவற்றால் பலவீனமான நிலையில் இருப்பதாகவும் என்டியுசி அறிக்கை சுட்டிக்காட்டியது. 

ஆகக் குறைவான சம்பளம் பெறும் 20 விழுக்காட்டினரில் 45 விழுக்காட்டினர் மட்டுமே பதவி உயர்வு வாய்ப்புகளையும் அதற்கான நிபந்தனைகளையும் தெளிவாகப் புரிந்து கொண்டிருந்தனர். 

அதோடு, 2022ல் மாதத்திற்கு $2,492 வரை சம்பளம் பெற்ற முழுநேரக் குறைந்த வருமான ஊழியர்களில் நால்வரில் ஒருவர் மட்டுமே சென்ற ஆண்டு பயிற்சிக்குச் சென்றார். 

பயிற்சிக்குச் செல்லாததற்குப் பெரும்பாலோர் கூறிய காரணம் நேரமின்மை. 

குறைந்த வருமான ஊழியர்களுக்கு நீக்குப்போக்கான ஏற்பாடுகள் கொண்ட வேலைகள் கிடைப்பதும் சிரமமாக இருந்தது. பராமரிப்புப் பொறுப்புகளை ஏற்றிருந்தோரில் பத்தில் ஏழு பேருக்கு நீக்குப்போக்கான வேலை ஏற்பாடுகள் கிடைப்பது சவாலாக இருந்தது. 

இந்த ஊழியர்களுக்கு ஆதரவளிக்க, இயந்திரம் இயக்குவோர், சமூகச் சேவையில் பணிபுரிவோர் போன்ற இன்னும் பல குறைந்த வருமான வேலைகளுக்கும் படிப்படியான சம்பள உயர்வு முறையை விரிவுபடுத்தலாம் என்று என்டியுசி பரிந்துரைத்தது. 

ஐம்பத்தைந்து வயதுக்கு மேற்பட்ட மூத்த ஊழியர்களில் கிட்டத்தட்ட பாதி பேர், தங்களது மத்திய சேம நிதிக் கணக்குகளிலும் தனிப்பட்ட சேமிப்புக் கணக்குகளிலும் ஓய்வுக்காலத்திற்குப் போதுமான சேமிப்பு இல்லை என்று நம்புவதாகவும் என்டியுசி கண்டறிந்தது. 

ஸ்கில்ஸ்ஃபியூச்சர் உதவி நிதிக்குத் தகுதி பெறுவதற்கான வயதை 25-லிருந்து 23 ஆகக் குறைக்கலாம் என்றும் என்டியுசி பரிந்துரைத்தது. 

சம்பளத்துடன் குடும்பப் பராமரிப்பு விடுப்பு வழங்கும் முதலாளிகளின் விகிதம் 2012ன் 15 விழுக்காட்டிலிருந்து சென்ற ஆண்டு 30 விழுக்காடாக அதிகரித்திருந்தாலும், இந்த விடுப்பு இன்னமும் கட்டாயமாக்கப்படவில்லை என்பதையும் என்டியுசி சுட்டிக்காட்டியது. 

வயதான, நோய்வாய்ப்பட்ட அல்லது இயலாமையுள்ள குடும்பத்தினரைப் பராமரிக்க எல்லா ஊழியர்களுக்கும் சம்பளத்துடன் பராமரிப்பு விடுப்பு வழக்கப்பட வேண்டும் என்று என்டியுசி பரிந்துரைத்தது.

குறிப்புச் சொற்கள்