ஒருங்கிணைந்த காப்புறுதி பாதுகாப்புத் திட்டங்களில் (ஐபி) சேர்ந்து புற்றுநோய்க்குச் சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கான புற்றுநோய் மருந்து சாராத (சிடிஎல் அல்லாத) காப்புறுதிப் பாதுகாப்பு ஏற்பாடு ஆறு மாதம் நீட்டிக்கப்பட்டது. அது சனிக்கிழமை முடிவடைந்தது.
இதன் தொடர்பில் கருத்து தெரிவித்த சுகாதார அமைச்சின் பேச்சாளர், தற்காலிக ஆதரவை இப்போது பெற்றுவரும் நோயாளிகள், தாங்கள் இப்போது பெறுகின்ற புற்றுநோய் மருந்து சாராத சிகிச்சையை (சிடிஎல் அல்லாத) முடிக்க இயலவில்லை என்றால், அவர்கள் தங்கள் காப்புறுதி நிறுவனத்துடன் (ஐபி) தொடர்புகெண்டு தங்களுடைய காப்புறுதி பாதுகாப்பு அம்சங்கள் பற்றி 2023 செப்டம்பர் 30க்குப் பிறகு தெரிந்துகொள்ளலாம் என்று கூறினார்.
புற்றுநோய்ச் சிகிச்சைக்குச் செலவு அதிகரித்துவருகிறது. அதைத் தடுக்கும் வகையில் சிடிஎல் ஏற்பாடு (புற்றுநோய் மருந்து பட்டியல்) 2022ல் அறிமுகமானது. 2021ல் புற்றுநோய்ச் சிகிச்சைக்கு $275 மில்லியன் செலவு ஆகியது. இது 2017ல் $110 மில்லியனாக இருந்தது.
சிடிஎல் பட்டியலில் உள்ள மருந்துகள் ஆய்வுக் கூடங்களில் பரிசோதிக்கப்பட்டு மெய்ப்பிக்கப்பட்டவை. அவை மிகவும் மலிவானவை.
சிடிஎல் சாராத புற்றுநோய் சிகிச்சைக்கு அரசாங்க மானியம் இல்லை. மெடிசேவ் எனப்படும் மசே நிதி மருத்துவச் சேமிப்புக் கணக்கில் இருந்தும் தொகையைப் பெற இயலாது. மெடிஷீல்டு லைஃப், ஐபி சுகாதார காப்புறுதி பாதுகாப்பு ஏற்பாடுகள் மூலமாகவும் பலன்பெற இயலாது.
சிடிஎல் ஏற்பாடு, 2021 ஆகஸ்டில் 270 நோயாளிகளுடன் தொடங்கியது. அதன்படி வரும் நவம்பரில் அங்கீகரிக்கப்பட்ட சிகிச்சைகளின் மொத்த எண்ணிக்கை 368 ஆக இருக்கும் என்று அமைச்சு தெரிவித்ததாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் கூறியது.

