புதுப்பொலிவுடன் தேக்கா நிலையம் மீண்டும் திறப்பு

தேக்கா நிலையத்தின் முதல் தளம், மூன்று மாதகால புதுப்பிப்புப் பணிகளுக்குப் பின் புதுப்பொலிவுடன் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.

தரைக்கற்கள், மின்விளக்குகள், மின்விசிறிகள், வண்ணப்பூச்சு, மேசைகள், நாற்காலிகள், புறாக்களை தடுக்கும் உறை உள்ளிட்ட பல்வேறு புதுப்பிக்கப்பட்ட அம்சங்களுடன் பளிச்சிடுகிறது தேக்கா நிலையத்தின் முதல் தளம்.  

கழிப்பறை புதுப்பிக்கப்பட்டிருப்பதுடன், சரக்குகளை ஏற்ற, இறக்க கூடுதல் வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

கலாசார, சமூக, இளையர்துறை மற்றும் வர்த்தக, தொழில் துணை அமைச்சர் ஆல்வின் டான் முதல் தளத்தை சனிக்கிழமை திறந்துவைத்தார். முன்னதாக துணிக்கடைகள், தையல் கடைகள் உள்ளிட்டவை இருக்கும் இரண்டாம் தளம் செப்டம்பர் 1ஆம் தேதி திறக்கப்பட்டது.

கலாசார, சமூக, இளையர்துறை மற்றும் வர்த்தக, தொழில் துணை அமைச்சர் ஆல்வின் டான், புதுப்பிப்புப் பணிகளின் நிறைவைக் குறிக்கும் கேடயத்தைத் திறந்துவைக்கிறார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

பலரது மனதிற்கும் நெருக்கமான தேக்கா நிலையம் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது என்று கூறிய திரு டான், புதுப்பிக்கப்பட்ட நிலையத்தில் ஆங்காங்கே வைக்கப்பட்டிருக்கும் ‘தேக்காவைத் தூய்மையாக வைத்திருங்கள்’ அறிவிப்புப் பலகைகளின்படி, இந்நிலையத்தின் தூய்மையை அனைவரும் பேண வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.  

தேக்கா நிலையத்தில் நான்கு தலைமுறைகளாக கடை வைத்துள்ள ‘ஏ எஸ் சரபத்’ ஸ்டோரின் குடும்ப உறுப்பினர் சாந்தி ராஜேஷ்கண்ணன், 50, “தேக்கா நிலையத்துடன் எங்கள் குடும்பத்திற்கு தாய்வீடு போன்ற பந்தம் உள்ளது. புதுப்பொலிவுடன் காணப்படும் நிலையம் ஊக்கமளிக்கிறது.  மூன்று மாத காலத்திற்குப் பின் திறக்கப்பட்டிருக்கும் செய்தியை எங்கள் வாடிக்கையாளர்களிடம் தொலைபேசியில் தொடர்புகொண்டு தெரிவித்து வருகிறோம்,“ என்று கூறினார்.

“மறுசீரமைக்கப்பட்டுள்ள மேசை, நாற்காலிகளும் கழிப்பறை வசதியும் வரவேற்கத்தக்கவை. இது அதிகமான வாடிக்கையாளர்களை ஈர்க்கும் என்று எதிர்பார்க்கிறேன்,” என்று கூறினார் எஸ் பி விலாஸ் உரிமையாளர் ஆறுமுகம் சின்னையா, 57. பத்து ஆண்டுகளுக்கும் மேலாக தேக்கா நிலையத்தில் அவர் கடை நடத்தி வருகிறார்.

தேக்கா நிலையத்தின் புதுப்பிப்புப் பணிகளின் ஒரு பகுதியாக, புதிய மேசைகள், நாற்காலிகள் பொருத்தப்பட்டுள்ளன. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

இருப்பினும், புதுப்பிப்புப் பணிக்காக மூன்று மாதகாலம் நிலையம் மூடப்பட்டிருந்தது பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்தியதாக அவர் குறிப்பிட்டார்.

“என் குடும்பத்தின் வாழ்வாதாரத்திற்கு கடை வியாபாரம் அடித்தளமாக இருந்தது. பெரிதளவில் நிதியிருப்பு இல்லாத சூழலில் மூன்று வேலை உணவுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டது. இப்போது கடைகள் மீண்டும் திறக்கப்பட்டிருப்பது நிம்மதியளிக்கிறது,” என்றார் அவர்.  

‘யாகாதர் முஸ்லிம் ஃபுட்’ கடையின் உரிமையாளர் சீனி இப்ராஹிம், 48, “எங்கள் கடையில் இருக்கும் ஆறு பணியாளர்களையும் மூன்று மாதத்துக்குப் பகுதி நேர வேலையில் நான் சேர்த்துவிட்டேன். எங்களிடம் நிதியிருப்பு இருந்ததால் பொருளியல் சிக்கல் ஏற்படாமல் சமாளிக்க முடிந்தது,” என்று தெரிவித்தார். 

தேக்கா நிலையத்தின் முதல் தளத்தில் உள்ள திறந்தவெளி நடைபாதை. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

‘பராட்டா சாகா சம்பால் பெர்லாடா’ கடையில் எட்டு ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரியும் முகம்மது நிஜாமுதீன், 62, “வடிகால் முறை மறுசீரமைக்கப்பட்டுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. கடையிலிருந்து கழிவுநீர் வெளியேற பெரிய அளவிலான நீர்க்குழாய்கள் நிறுவப்பட்டுள்ளன. சுகாதாரத்தைக் கட்டிக்காக்க இது உதவியாக இருக்கும்,” என்றார். 

சுவரில் மின்விசிறிகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்தியதைப் போலவே மேற்கூரையில் தொங்கும் மின்விசிறிகளையும் அதிகப்படுத்தியிருக்கலாம் என்றும் அதிக வெப்பமாக இருக்கும் நேரங்களில் அவை பயனளித்திருக்கும் என்றும் அவர் பரிந்துரைத்தார். 

புதுப்பிக்கப்பட்டுள்ள தேக்கா நிலையத்தின் முகப்பு. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

முன்பிருந்ததைவிட 10க்கும் மேற்பட்ட மேசைகளையும் அவற்றோடு கோடியா நாற்காலிகளையும் அப்புறப்படுத்தியுள்ளது தமது வியாபாரத்தைப் பாதிக்கும் என்று ‘ஏஆர் ரஹ்மான் கேஃபே’ கடை உரிமையாளர் முஜிபுர் ரஹ்மான், 50, வருத்தம் தெரிவித்தார். 

பானம் அருந்த வருவோர் காலியிடம் இல்லையெனில் திரும்பிச் சென்றுவிடுவர் என்றும் கூட்டம் அதிகமாக வரும் வாரயிறுதி நாள்களில் இது வியாபாரத்தைப் பாதிக்கும் என்றும் அவர் கூறினார். 

தேக்கா நிலைய ஈரச்சந்தையில் கடை நடத்தும் ‘ஜிவி மீட்ஸ்’ உரிமையாளர் ஜிவி பத்மநாதன், 67, “தரைக்கற்களும் வண்ணப்பூச்சுகளும் புதிய தோற்றத்தை அளிக்கின்றன. மூன்று மாதகாலம் வருமானத்தை இழக்க நேர்ந்தாலும் இனிவரும் நாள்களில் அதனை ஈடுசெய்யும் நம்பிக்கையுடன் இருக்கிறோம்.

“கடை வாடகை அதிகரிக்க சாத்தியம் உள்ளதாக செய்தி பரவி வருவது பதற்றமளிக்கிறது. ஆனால் அது குறித்து இன்னும் உறுதியான தகவல் இல்லை,” என்று கூறினார்.

புதுப்பிக்கப்பட்டுள்ள தேக்கா நிலையத்தில் இடம்பெறும் சுவரோவியம். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

புறாக்களின் தொல்லை இருந்து வந்துள்ள நிலையில், இப்போது தடுப்பு உறை அமைக்கப்பட்டு உள்ளதை வரவேற்கிறார் ‘ஐயா’ உணவக உரிமையாளர் செல்லப்பன் பெரியசாமி, 63. 

உணவருந்தும் வாடிக்கையாளர்களுக்குத் தொந்தரவு செய்தல், மீதமுள்ள உணவை உண்ணுதல், எச்சமிடுதல் என புறாக்களால் தொல்லை ஏற்பட்டு வந்துள்ள நிலையில், இனி குழந்தைகளும் பயமில்லாமல் அமர்ந்து உணவருந்தலாம் என்று அவர் சொன்னார்.  

கடைகள் அனைத்தும் வியாபாரத்திற்குத் தயாரான நிலையில் ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 1) முதல் பொதுமக்கள் வழக்கம்போல் தேக்கா நிலையத்திற்குச் செல்லலாம். 

monolisa@sph.com.sg

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!