தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

புக்கிட் பாஞ்சாங் இலகுரக ரயில் சேவை ஞாயிறன்று இல்லை என்றாலும் சரளமான போக்குவரத்து

2 mins read
b20c35b1-cf0d-4b5c-b5f5-64d6d66affe8
சுவா சூ காங் ரயில் நிலையத்தில், புக்கிட் பாஞ்சாங் எல்ஆர்டி சேவை பி வழித்தடத்தில் இயங்கிய இடைவழிப் பேருந்தில் ஏறிச் செல்ல பயணிகள் காத்திருந்தனர். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் 

புக்கிட் பாஞ்சாங் இலகுரக ரயில் வழித்தடத்தில் 13 நிலையங்கள் இருக்கின்றன. அந்த வழித்தடம் ஞாயிற்றுக்கிழமை முழுவதும் மூடப்பட்டது. இருந்தாலும் பயணிகளுக்கு எந்தவிதமான வசதிக் குறைவும் இல்லை.

இடைவழிப் பேருந்து சேவைகள் போன்ற மாற்று போக்குவரத்து ஏற்பாடுகள் எந்த பிரச்சினையுமின்றி சரளமாகச் செயல்பட்டன.

அந்த வழித்தடத்தின் செயல்முறைக் கட்டுப்பாட்டு மையம் ஓர் இடைக்கால மையத்திற்கு இடம் மாற வசதியாக சேவை மூடப்பட்டது.

இப்போதைய மையத்தில் மேம்பாட்டுப் பணிகள் இடம்பெறவிருக்கின்றன. அவை மூன்றாண்டு காலம் நீடிக்கும். அந்த இலகுரக வழித்தடத்தின் செயல்முறைக் கட்டுப்பாட்டு மையம் 1999 முதல் சேவையாற்றி வருகிறது.

அது அந்த வழித்தடத்தில் உள்ள ரயில் போக்குவரத்து சமிக்ஞைகள், மின்சார விநியோகம், தகவல் தொடர்பு முறை ஆகியவற்றையும் ரயில் நிலையங்களின் வசதிகளையும் கட்டுப்படுத்தி கண்காணித்து வருகிறது.

அந்த வழித்தடம் மூடப்பட்டதை அடுத்து ஞாயிற்றுக்கிழமை இலவச இடைவழிப் பேருந்துச் சேவைகள் பயணிகளுக்குக் கைகொடுத்தன.

சுவா சூ காங் பேருந்து முனையத்திற்கு அருகே உள்ள ஓரிடத்தில் இருந்து புறப்பட்ட அந்த இடைவழிப் பேருந்துச் சேவைகள் எந்தப் பிரச்சினையுமின்றி சரளமாகச் செயல்பட்டன.

எட்டு நிமிடங்களுக்கு ஒரு முறை பேருந்து வந்து பயணிகளை ஏற்றிச் சென்றது.

ஒவ்வொரு முறையும் சராசரியாக 15 பேர் பேருந்துகளில் ஏறிச் சென்றதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் தெரிவித்தது.

அது பற்றி கருத்து கூறிய டான் கிம் கியாட், 37, என்ற பயணி, கூட்டம் அதிகம் இருக்கும் என்று தான் எதிர்பார்த்ததாகவும் ஆனால், அதிக எண்ணிக்கையிலான பேருந்துகள் சேவை வழங்கியதால் தான் நினைத்த அளவுக்கு நிலைமை இல்லை என்றும் கூறினார்.

இடைவழிப் பேருந்துகள் புக்கிட் பாஞ்சாங் முனையத்திற்கு அருகே உள்ள ஓரிடத்தில் இருந்து புறப்பட்டும் சேவை வழங்கின.

இந்த இடத்திலும் போக்குவரத்து சரளமாக இருந்தது.

குறிப்புச் சொற்கள்