தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

உத்தரப் பிரதேசத்தில் முதலீடு செய்ய விரும்பும் சிங்கப்பூர் நிறுவனம்

2 mins read
7bb7092a-c46a-486b-91d3-d6cb6b15cd89
இந்தத் தளவாடப் பூங்கா அமைப்பதற்கும் உள்கட்டமைப்பு மேம்பாட்டுக்கும் ஏறத்தாழ 650 கோடி ரூபாய் ($104 மில்லியன்) செலவாகும். - படம்: பிரசூன் முகர்ஜி

சிங்கப்பூரைத் தலைமையகமாகக் கொண்ட யுனிவர்சல் சக்சஸ் எண்டர்பிரைசஸ் நிறுவனம் உத்தரப் பிரதேசத்தின் கௌதம புத்தா நகர் மாவட்டத்தில் அமைக்கப்படும் புதிய ஜெவார் அனைத்துலக விமான நிலையத்தில் தளவாடப் பூங்கா அமைக்க ஆர்வம் கொண்டுள்ளது.

கிட்டத்தட்ட 50 ஏக்கர் நிலப்பரப்பளவில் ஒரு மில்லியன் சதுர அடிக்கும் மேலான கட்டுமானம் கொண்ட ‘கிரேட் ஏ’ பல்வழி தளவாடப் பூங்கா அமைப்பது நிறுவனத்தின் திட்டம்.

இந்தத் திட்டம் குறித்து உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தை லக்னோவில் சந்தித்துப் பகிர்ந்ததாகத் தெரிவித்தார் யுனிவர்சல் சக்சஸ் எண்டர்பிரைஸ் நிறுவனத்தின் தலைவர் பிரசூன் முகர்ஜி.

பெரிய அளவிலான வீடமைப்பு, வர்த்தக, தளவாட, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, நிலக்கரி உள்ளிட்ட பல துறைகளில் இந்தியாவிலும் தென்கிழக்காசியாவிலும் இந்நிறுவனம் கால்பதித்துள்ளது.

சிங்கப்பூர் வர்த்தகச் சம்மேளனத்தின் மூத்த உறுப்பினரும் அதன் தெற்கு ஆசிய வர்த்தகக் குழுவின் துணைத் தலைவருமான திரு முகர்ஜி, இந்தத் திட்டத்தையும் தமது நிறுவனத்தின் ஆர்வம் குறித்தும் உ.பி. முதல்வர் கேட்டறிந்ததாகக் கூறினார்.

இந்தத் தளவாடப் பூங்கா அமைப்பதற்கும் உள்கட்டமைப்பு மேம்பாட்டுக்கும் ஏறத்தாழ 650 கோடி ரூபாய் ($104 மில்லியன்) செலவாகும் என்றும் பணிகள் முழுமையடைந்தவுடன் 7,500 வேலை வாய்ப்புகள் உருவாகும் என்றும் சிங்கப்பூர் இந்திய வர்த்தகத் தொழில் சபையின் முன்னாள் ஆலோசகரும் துணைத் தலைவருமான திரு பிரசூன் முகர்ஜி தெரிவித்தார்.

நொய்டா அனைத்துலக விமான நிலையம் என்றும் அழைக்கப்படும் ஜெவார் விமான நிலையம், இந்தியாவில் மட்டுமின்றி ஆசியாவிலேயே ஆகப் பெரிய விமான நிலையமாக விளங்கவுள்ளது.

அடுத்த ஆண்டு செப்டம்பர் மாத இறுதிக்குள் கட்டுமானப் பணிகள் நிறைவுபெற்று விமான நிலையம் இயங்கத் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஜெவார் செயல்படத் தொடங்கியதும் புதுடெல்லியின் இந்திரா காந்தி அனைத்துலக விமான நிலையத்தில் அதிகரித்துவரும் பேரளவிலான போக்குவரத்து சுமையைச் சமாளிக்கத் தோள் கொடுக்கும்.

குறிப்புச் சொற்கள்