குறுக்கு ரயில் பாதை இரண்டாம் கட்ட கட்டுமானத்தின் ஒரு பகுதியாக, கிங் ஆல்பர்ட் பார்க், கிளமெண்டி ஆகிய இரு சந்திப்பு நிலையங்களின் வடிவமைப்பு, கட்டுமானத்திற்காக நிலப் போக்குவரத்து ஆணையம் (எல்டிஏ) மொத்தம் $961 மில்லியன் மதிப்பிலான ஒப்பந்தங்களை வழங்கியுள்ளது.
இப்பாதையின் இரண்டாம் கட்ட கட்டுமானத்தின் எம்ஆர்டி நிலையங்களுக்கு வழங்கப்பட்ட முதல் இரண்டு ஒப்பந்தங்கள் இவை.
இந்த நிலையங்களுக்கான கட்டுமானப் பணிகள் 2024ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் தொடங்கும் என்றும் பயணிகள் சேவை 2032ல் தொடங்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
கிங் ஆல்பர்ட் பார்க் சந்திப்பு நிலையம், புக்கிட் தீமா சாலையை ஒட்டி உள்ள பிளாக்மோர் டிரைவில் அமைந்துள்ளது. கிளமெண்டி சந்திப்பு நிலையம் காமன்வெல்த் அவென்யூ வெஸ்ட், கிளமெண்டி அவென்யூ 4 சந்திப்பிற்கு அருகே உள்ளது.
டௌன்டவுன் பாதையில் உள்ள கிங் ஆல்பர்ட் பார்க் நிலையம், கிழக்கு-மேற்கு பாதையில் உள்ள கிளமெண்டி நிலையம் ஆகியவற்றில் புதிய நிலையங்களுடன் இணைப்பை அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்படும்.
கிங் ஆல்பர்ட் பார்க் சிஆர்எல் நிலையத்தை வடிவமைத்து கட்டுவதற்கான ஒப்பந்தத்தை சைனா கம்யூனிகேஷன்ஸ் கன்ஸ்ட்ரக்ஷன்ஸ் நிறுவனம் கிட்டத்தட்ட $447 மில்லியன் வெள்ளி (US$326 மில்லியன்) மதிப்பிலான ஒப்பந்தத்தைப் பெற்றது.
கிளமெண்டி நிலையத்தை அமைப்பதற்கான $514 மில்லியன் மதிப்புடைய ஒப்பந்தம், சைனா கம்யூனிகேஷன்ஸ் கன்ஸ்ட்ரக்ஷன்ஸ் நிறுவனம், சினோஹைட்ரோ கார்ப்பரேஷன் ஆகியவற்றின் சிங்கப்பூர் கிளைகளுக்கு இடையேயான கூட்டு முயற்சிக்கு வழங்கப்பட்டுள்ளது.
“சைனா கம்யூனிகேஷன்ஸ் கன்ஸ்ட்ரக்ஷன்ஸ், உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் பல வடிவமைப்பு மற்றும் கட்டுமான சேவைகளை மேற்கொண்டுள்ளது. சினோஹைட்ரோ கார்ப்பரேஷன் பல்வேறுபட்ட உள்ளூர், வெளிநாட்டு உள்கட்டமைப்பு திட்டங்களில் ஈடுபட்டுள்ளது,” என்று எல்டிஏ தெரிவித்துள்ளது.
குடியிருப்பாளர்கள், மாணவர்கள், வாகன ஓட்டிகளுக்கு ஏற்படும் பாதிப்பைக் குறைக்க, கட்டுமானப் பணிகளை எளிதாக்குவதற்குத் தேவையான போக்குவரத்து, பொதுப் பயனீட்டுக்கான மாற்றுப்பாதைகள் கட்டம் கட்டமாக நடைமுறைப்படுத்தப்படும் என்று எல்டிஏ தெரிவித்துள்ளது.
இந்த இரண்டு இடங்களிலும் நில நிலைமைகள் “சவாலானவை” என்பதால், அகழாய்வு, நிலைய கட்டுமானப் பணிகளைத் தொடங்குவதற்கு முன், நிலத்தை வலுப்படுத்தும் கட்டுமானங்கள் மேற்கொள்ளப்படும்.
கட்டுமானப் பணி நடைபெறும் காலத்தில் அக்கம்பக்கப் பகுதிகளின் பாதுகாப்பையும் தரை நிலைத்தன்மையையும் உறுதிப்படுத்த இது உதவும், என எல்டிஏ குறிப்பிட்டது.
முழுக்க முழுக்க நிலத்துக்கு அடியில் அமைக்கப்படும் குறுக்கு ரயில் பாதை, சிங்கப்பூரின் எட்டாவது பெருவிரைப் போக்குவரத்து ரயில் பாதை ஆகும். கிழக்கு, வடக்கு-கிழக்கு, மேற்கு பாதைகளில் தற்போதுள்ள மற்றும் எதிர்காலத்தில் அமைக்கப்பட உள்ள ஜூரோங் லேக் வட்டாரம், பொங்கோல் மின்னிலக்க வட்டாரம், சாங்கி வட்டாரம் போன்ற முக்கிய மையங்களை இது இணைக்கும்.
செப்டம்பர் 2022ல் அறிவிக்கப்பட்ட குறுக்கு ரயில் பாதையின் 2ஆம் கட்டம், கிட்டத்தட்ட 15 கி.மீ நீளம் கொண்டது. இப்பாதையில், டர்ஃப் சிட்டி, கிங் ஆல்பர்ட் பார்க், மஜு, கிளமெண்டி, வெஸ்ட் கோஸ்ட், ஜூரோங் லேக் வட்டாரம் ஆகிய ஆறு நிலையங்கள் அமைகின்றன.
குறுக்கு ரயில் பாதையின் 3ஆம் கட்டத்திற்கான ஆய்வுகள் நடந்து வருகின்றன என்று எல்டிஏ கூறியது.

