உடல்நலத்துக்கு கேடு விளைவிக்கும் ‘கொலஸ்ட்ரால்’ உயிரணுக்களை உருவாக்கவும், ஹார்மோன்களை உற்பத்தி செய்யவும், மூளையின் நலத்தை அதிகரிக்கவும் தேவைப்படுகிறது.
உடலில் அதிகளவு கொலஸ்ட்ரால் நிறைந்த உறுப்பு மூளை ஆகும். இதில் 20 விழுக்காடு கொழுப்பு உள்ளது.
எனினும், நியூரான்கள் போன்ற உயிரணுக்கள் தேவையான அளவு கொலஸ்ட்ராலை எவ்வாறு கொண்டிருக்கின்றன என்பது பற்றி அதிகம் புரிந்து கொள்ளப்படவில்லை. நரம்பு உயிரணுக்களில் உள்ள கொழுப்பின் அசாதாரண பரவல் ஞாபகமறதி தொடர்புடைய மற்ற நோய்களுடன் இணைக்கப்பட்டுள்ளது.
நன்யாங் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் (என்டியு) லீ கொங் சியான் மருத்துவப் பள்ளியின் நான்கு அறிவியல் அறிஞர்கள், கொழுப்பின் அளவைக் கட்டுப்படுத்தும் மூன்று முக்கிய புரதங்களையும் அவற்றின் இயக்க முறைகளையும் கண்டறிந்துள்ளனர்.
இந்தப் புரதங்கள் இதய நோய் அல்லது ஞாபகமறதி உள்ளவர்களுக்கு முறையாகச் செயல்படவில்லை என்று அவர்கள் சந்தேகிக்கிறார்கள். எடுத்துக்காட்டாக, சில புரதங்கள் இல்லாமல் இருக்கலாம் அல்லது அதிகமாக இருக்கலாம்.
“நரம்பியல் சிதைவு கோளாறுகள், இதய நோய்களின் வளர்ச்சியைப் புரிந்துகொள்வதில் இந்த ஆய்வு தாக்கங்களைக் கொண்டுள்ளது,” என்று ஆய்வின் தலைவர், இணைப் பேராசிரியர் யசுனோரி சாஹேகி கூறினார்.
புரதங்களை மேலும் ஆய்வு செய்து எதிர்காலத்தில் இதுபோன்ற நோய்களுக்கான சிகிச்சைகளில் பயன்படுத்தலாம் என்று அவர் நம்புகிறார்.
உயிரணு உயிரியல், நரம்பியல் அறிவியலில் நிபுணத்துவம் பெற்ற பேராசிரியர் சாஹேகி, ஞாபகமறதி நோய்க்கு தற்போது எந்த சிகிச்சையும் இல்லை என்று குறிப்பிட்டார்.
தொடர்புடைய செய்திகள்
அதிக கொலஸ்ட்ரால் உணவுகள் ரத்தத்தில் கொழுப்பின் அளவை அதிகரிக்கின்றன. இது மாரடைப்பு பக்கவாதத்திற்கு வழிவகுக்கும். அதிக கொழுப்பு உள்ளவர்களில், சிறு பிரிவினருக்கு கொழுப்பைக் குறைக்கும் மருந்துகள் வேலை செய்வதில்லை.
ஞாபகமறதி அல்லது இதய நோயாளிகளின் பாதிக்கப்பட்ட உயிரணுக்களைப் பெற்று, அவற்றில் புரதங்கள் எவ்வாறு செயல்படுகின்றன என்பதை ஆய்வுசெய்ய குழு திட்டமிட்டுள்ளது.