திரீ ஏரோஸ் என்ற மின்னிலக்க முதலீட்டு நிறுவனத்தின் நிறுவனர்களில் ஒருவரான ஸு சு என்பவருக்கு தொடர்புடைய உயர் ரக பங்களா வீடு ஒன்று பண்ணையாக பயன்படுத்தப்படுவது தெரியவந்துள்ளது. இந்த நிறுவனத்தின் மற்றோர் நிறுவனர் இவரது மனைவி என்பது குறிப்பிடத்தக்கது.
இவர்களுடைய திரீ ஏரோஸ் நிறுவனம் இந்த யார்வுட் அவென்யூ பங்களா வீடு இவ்வாண்டு தொடக்கத்தில் இருந்தே யார்வுட் அவென்யூ பகுதியை சுற்றிக் காட்டவும் தனியார் விருந்து உபசரிப்புக்கு பயன்படுத்தப்படும் இடமாகவும் இருப்பதை பிசினஸ் டைம்ஸ் கண்டறிந்துள்ளது.
இந்த பங்களா வீட்டை ஸுவும் அவரது மனைவியான மருத்துவர் இவலின் தாவும் தங்கள் பிள்ளைக்காக ஓர் அறக்கட்டளையை ஏற்படுத்தி 48.8 மில்லியனுக்கு 2022ஆம் ஆண்டு மார்ச் மாதம் வாங்கியுள்ளனர்.
பின்னர் திரீ ஏரோஸ் நிறுவனம் வீழ்ச்சி அடைந்ததைத் தொடர்ந்து பலர் இந்த சொத்துமீது கண் வைக்க ஆரம்பித்தனர்.
அந்த நிறுவனம் நொடித்துப்போன நிலையை அடைந்ததும் இந்த பங்களா வீடு விற்பனைக்கு வரவுள்ளதாக ஊகங்கள் எழுந்தன. இதன் தொடர்பில் சொத்து முகவர்களிடையே யார்வுட் அவென்யூவில் உள்ள உயர் ரக பங்களா வீடு ஒன்று அவசர கதியில் விற்பனைக்கு வரவுள்ளதாக உறுதிப்படுத்தப்படாத குறுந்தகவல் ஒன்று வலம் வந்தது. இது நடந்தது சென்ற ஆண்டு ஜூன் மாதம்.