தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சட்டவிரோதப் பண விவகாரத்தில் முடக்கப்பட்ட சொத்துகளின் மதிப்பு $2.8 பி.

3 mins read
d2b2db33-8b96-418f-bd59-4ed0106e795e
கடந்த ஆகஸ்ட் 15ஆம் தேதி தீவு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட அதிரடிச் சோதனைகளில் பில்லியன்கணக்கான சட்டவிரோதச் சொத்துகள் பிடிபட்டன. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூரில் அண்மையில் கண்டுபிடிக்கப்பட்ட கள்ளப்பணத்தை நல்ல பணமாக மாற்றும் குற்றங்களில் தொடர்புடைய சொத்துகள் முடக்கி வைக்கப்பட்டன.

அவ்வாறு முடக்கி வைக்கப்பட்ட அல்லது அவற்றை மாற்றிவிடுவதற்குத் தடை விதிக்கப்பட்ட சொத்துகளின் மதிப்பு தற்போது $2.8 பில்லியனைத் தொட்டுள்ளது. இதன் மூலம் உலகளவில் கள்ளப் பணத்தை நல்ல பணமாக மாற்றுவது தொடர்பான ஆகப் பெரிய குற்றச்செயல்களில் ஒன்றாக, சிங்கப்பூரில் கண்டுபிடிக்கப்பட்டவை உருவெடுத்து உள்ளன.

2021ஆம் ஆண்டிலேயே காவல்துறையின் கண்காணிப்பு வளையத்திற்குள் இந்தக் குற்றச்செயல்கள் வந்தபோதிலும் கடந்த ஆண்டு அவை தொடர்பான விசாரணை தீவிரமடைந்தது.

தொடர்ந்து, இவ்வாண்டு கடந்த ஆகஸ்ட் 15ஆம் தேதி தீவு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட அதிரடிச் சோதனைகளில் பில்லியன்கணக்கான சட்டவிரோதச் சொத்துகள் பிடிபட்டன.

குற்ற நடவடிக்கைகள் மூலம் பெற்ற பணத்தை வெளிநாட்டிலிருந்து சிங்கப்பூரில் உள்ள வங்கிகளுக்கு மாற்றிவிடும் குற்றச் செயல்களில் ஒரு சிறிய குழு ஈடுபட்டதாகத் தொடக்கத்தில் தெரிய வந்தது.

விசாரணை தீவிரமடைந்தபோது ஏராளமானோர் அதில் ஈடுபட்டு இருப்பதும் சிலரது குடும்பங்களுக்கும் அதில் தொடர்பு இருப்பதும் கண்டறியப்பட்டது.

இது தொடர்பாக உள்துறை இரண்டாம் அமைச்சர் ஜோசஃபின் டியோ செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றத்தில் அமைச்சர்நிலை அறிக்கை ஒன்றைச் சமர்ப்பித்தார்.

சட்டவிரோத பணப் பரிமாற்றம் தொடர்பாக மன்ற உறுப்பினர்கள் எழுப்பிய ஏறக்குறைய 60 கேள்விகளுக்குப் பதிலளிக்கும் விதமாக அந்த அறிக்கை அமைந்தது.

2021ஆம் ஆண்டு, இங்குள்ள வங்கிக் கணக்குகளில் பணம் போட போலிப் பத்திரங்கள் பயன்படுத்தப்படுவது உள்ளிட்ட பல்வேறு சந்தேக அறிகுறிகள் தென்பட்டதாக அவர் அந்த அறிக்கையில் குறிப்பிட்டு இருந்தார்.

மேலும் அந்த அறிக்கையில், “சந்தேகத்துக்குரிய சில பரிவர்த்தனை அறிக்கைகளை நிதி நிறுவனங்களும் இதர நிறுவனங்களும் சமர்ப்பித்து இருந்ததைக் காவல்துறை கண்டறிந்து விழிப்பூட்டியது.

“2022 தொடக்கத்தில் விரிவான புலனாய்வு விசாரணை மேற்கொள்ளப்பட்டபோது ஒருவரோடு ஒருவர் தொடர்புடைய ஒரு வலைப்பின்னல் போல பலர் குற்றச்செயல்களில் ஈடுபட்டிருக்கலாம் என்பது தெரிய வந்தது.

“தகவல்களைத் திரட்டி ரகசிய விசாரணையை காவல்துறை தொடர்ந்தது. சந்தேக நபர்களுக்கு விவரம் கசிந்துவிடக்கூடாது என்ற நோக்கில் அதிகாரிகளைக் கொண்ட ஒரு சிறிய குழுவே விசாரணையில் ஈடுபட்டது.

“சந்தேக நபர்களுக்கு எதிரான நடவடிக்கைகளில் பகிரங்கமாக ஈடுபடுவதற்கு முன்னர் குற்றச்செயல்களை முழுமையாகக் கண்டறிந்து அவற்றில் ஈடுபட்ட அனைவரையும் வளைத்துப் பிடிப்பதும் சம்பந்தப்பட்ட சொத்துகள் பற்றி அறிவதுமே காவல்துறையின் நோக்கமாக இருந்தது.

விசாரணை மூலம் காவல்துறை நெருக்கியபோது சந்தேகக் கும்பல் அடையாளம் காணப்பட்டது. அடுத்தடுத்து பலர் சிக்கினார்கள். மேலும், சிங்கப்பூரில் அவர்கள் வைத்திருந்த சொத்துகளும் அடுத்தடுத்து கண்டறியப்பட்டன,” என்று திருவாட்டி டியோ தமது அமைச்சர்நிலை அறிக்கையில் தெரிவித்தார்.

கைப்பற்றப்பட்ட, முடக்கப்பட்ட $2.8 பில்லியன் சொத்துகள் தொடர்பான விவரத்தையும் அவர் தெரிவித்தார்.

“அவற்றில் 1.24 பில்லியன் மதிப்புடைய 152 சொத்துகளும் 62 வாகனங்களும் அடங்கும். பிடிபட்டவர்களின் வங்கிக் கணக்குகளில் உள்ள தொகை $1.45 பில்லியன். இதர நாட்டு நாணயங்களாகப் பிடிப்பட்ட ரொக்கம் $76 மில்லியன்.

“இவற்றுடன் ஆயிரக்கணக்கான மது, ஒயின் புட்டிகள், $38 மில்லியன் மின்னிலக்க நாணயங்கள், 68 தங்கக் கட்டிகள், 294 ஆடம்பரப் பைகள், 164 விலையுயர்ந்த கைக்கடிகாரங்கள், 546 நகைகள் ஆகியனவும் கைப்பற்றப்பட்டன,” என்று திருவாட்டி டியோ விவரித்தார்.

குறிப்புச் சொற்கள்