மின்சிகரெட்டுகளைப் பயன்படுத்திய 800 மாணவர்கள் சிகிச்சைக்கு அனுப்பப்பட்டனர்

மின்சிகரெட்டுகளைப் பயன்படுத்திய 800 மாணவர்கள் சிகிச்சைக்கு அனுப்பப்பட்டனர்

2 mins read
e8e06a0e-3501-4cbb-ab43-0b655e5052e7
மாணவர்களிடையே மின்சிகரெட்டுகள் பயன்படுத்தும் பழக்கம் அதிகரித்துள்ளது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
Google News Preferred Icon

மின்சிகரெட்டுகளைப் பயன்படுத்திய 800 மாணவர்கள் சிகிச்சைக்காக சுகாதார அறிவியல் ஆணையத்துக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

அவர்கள் அனைவரும் பள்ளிகள் அல்லது உயர் கல்வி நிலையங்களில் பயில்பவர்கள். இந்தத் தகவலைக் கல்விக்கான இரண்டாம் அமைச்சர் மாலிக்கி ஒஸ்மான் செவ்வாய்க்கிழமையன்று நாடாளுமன்றத்தில் வெளியிட்டார்.

மின்சிகரெட்டுகளைப் பயன்படுத்தும் மாணவர்களின் எண்ணிக்கை இன்னும் தெரியவில்லை என்றும் அவர்களில் சிலர் மட்டுமே பிடிபட்டுள்ளனர் என்றும் இது ஒரு பிரச்சினையாக உள்ளது என்றும் அமைச்சர் மாலிக்கி ஒஸ்மான் கூறினார்.

மின்சிகரெட்டுகள் பயன்படுத்தியதற்காகக் கடந்த ஐந்து ஆண்டுகளில் எத்தனை மாணவர்கள் சுகாதார அறிவியல் ஆணையத்துக்குச் சிகிச்சைக்காக அனுப்பப்பட்டுள்ளனர் என்று தஞ்சோங் பகார் குழுத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன் பெரேரா எழுப்பிய கேள்விக்குப் பதில் அளிக்கும் விதமாக அமைச்சர் மாலிக்கி ஒஸ்மானின் பதில் அமைந்தது.

2020ஆம் ஆண்டுக்கு முன்பு மின்சிகரெட்டுகள் பயன்படுத்தியதற்கான சிகிச்சைக்காக ஆணையத்துக்கு அனுப்பப்பட்ட மாணவர்களின் எண்ணிக்கை 50க்கும் குறைவாக இருந்ததாக அமைச்சர் மாலிக்கி ஒஸ்மான் கூறினார்.

மின்சிகரெட்டுகளைப் பயன்படுத்தும் பழக்கம் மாணவர்களுக்கு இருப்பது மட்டுமன்றி சமூகத்தில் உள்ள மற்ற பிரிவினருக்கும் இருப்பது குறித்து கல்வி அமைச்சு, சுகாதார அறிவியல் ஆணையம், சுகாதார அமைச்சு, சுகாதார மேம்பாட்டு வாரியம் ஆகியவை கவலை தெரிவித்திருப்பதாக அவர் தெரிவித்தார்.

மின்சிகரெட்டுகளைப் பயன்படுத்துவோரைக் கண்டுபிடிக்கவும் அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும் அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும் மற்ற மூன்று அரசாங்க அமைப்புகளுடன் கல்வி அமைச்சு இணைந்து செயல்படுவதாக அமைச்சர் கூறினார்.

“பள்ளிகளிலும் உயர்க் கல்வி நிலையங்களிலும் சோதனைகள் நடத்துவதுடன், மின்சிகரெட்டுகளால் உடல் ஆரோக்கியத்துக்கு ஏற்படும் தீமைகளை மாணவர்களுக்கு எடுத்துரைக்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இந்தக் கவலைக்குரிய போக்கைக் களைய குடும்பங்கள் மற்றும் சமூகத்தின் ஒத்துழைப்பை நாடுகிறோம்,” என்று அமைச்சர் மாலிக்கி ஒஸ்மான் கேட்டுக்கொண்டார்.

குறிப்புச் சொற்கள்
மின்சிகரெட்