தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

கள்ளப் பணப் பரிவர்த்தனையில் ஈடுபட்டோர் குடும்ப நிறுவன வரிச்சலுகை பெற்றிருக்கலாம்

2 mins read
25f1f81a-e5f2-4eac-bb49-9b3d0a8be665
-

கள்ளப் பணத்தை நல்ல பணமாக மாற்றும் விவகாரத்தில் தொடர்புடைய ஒருவர் அல்லது அதற்கு மேற்பட்டோர் குடும்ப நிறுவனங்களுக்கான வரிச்சலுகை பெற்றிருக்கக்கூடும் என்று வர்த்தக, தொழில் துணை அமைச்சர் ஆல்வின் டான் தெரிவித்துள்ளார்.

இது குறித்து நாடாளுமன்றத்தில் நிதி அமைச்சர் லாரன்ஸ் வோங் சார்பாகப் பேசிய திரு டான், நிதி தொடர்பான ஒழுங்குமுறை கண்காணிப்பு அமைப்பு தனது ஊக்கமூட்டும் நிர்வாக நடைமுறைகளை மறுபரிசீலனை செய்துவருவதாகக் கூறினார். இதில் தேவையிருந்தால் அந்த நடைமுறைகள் கடுமையாக்கப்படும் என்றும் அவர் விளக்கினார்.

மேலும், ஒழுங்குமுறை கண்காணிப்பு அமைப்பு இந்த விவகாரத்தில் தொடர்புடைய நிதி நிறுவனங்கள் தொடர்பில் மேலாண்மை கண்ணோட்டத்துடன் முழுமையான மறுபரிசீலனை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் திரு டான் சொன்னார். அத்துடன், இந்த விவகாரத்தில் சந்தேகப் பேர்வழிகள் எவ்வாறு சிங்கப்பூரில் நிதிச் சேவைகள் பெற்றனர் என்பது குறித்தும் தீர பரிசீலிக்கப்படும் என்று அவர் கூறினார்.

ஆகஸ்ட் மாதம் சிங்கப்பூர் காவல் துறை 10 பேரை கைது செய்து அவர்கள் மீது குற்றச்சாட்டுகளை சுமத்தியது. இவர்களிடமிருந்து உயர் ரக சொத்துகள், தங்கக் கட்டிகள், சொகுசு கைப்பைகள், ரொக்கம், மின்னிலக்க சொத்துகள், கார்கள் என மொத்தம் கிட்டத்தட்ட $1 பில்லியன் பெறுமானமுள்ள பொருள்களைக் கைப்பற்றியது.

தற்போதைய நிலையில், கைப்பற்றப்பட்ட சொத்துகள் அல்லது விற்பதற்கு தடை விதிக்கப்பட்ட சொத்துகளின் மதிப்பு $2.8 பில்லியன் அளவுக்கு உயர்ந்துள்ளது. இது உலகில் கள்ளப் பணப் பரிவர்த்தனை விவகாரங்களில் மிகப் பெரியவற்றில் ஒன்று என்று கூறப்படுகிறது.

இதில் ஈடுபட்ட சிலர் மீது வங்கிகளிடம் போலி ஆவணங்களை சமர்ப்பித்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இதன் தொடர்பில் வங்கிகள் கள்ளப் பணத்தை நல்ல பணமாக மாற்றுவது, பயங்கரவாதம் போன்றவற்றுக்கு எதிராக சிங்கப்பூர் வங்கிகள் கடுமையான நடைமுறைகளை அமல்படுத்தியுள்ளனவா என்று சிங்கப்பூர் நாணய ஆணையம் பரிசீலிக்கும் என்று திரு டான் விளக்கமளித்தார்.

“இதில் மேல் நடவடிக்கைகள் அவசியம், அதைச் செய்தே தீருவோம். இந்த விவகாரத்தில் $1.45 பில்லியன் பெறுமானமுள்ள சொத்துகள் கைப்பற்றப்பட்டுள்ளது கவலையளிக்கிறது,” என்று திரு விவரித்தார்.