சிங்கப்பூரில் அண்மையில் வெளிச்சத்துக்கு வந்த கள்ளப் பணத்தை நல்ல பணமாக்கும் குற்றத்தால் உள்ளூர் சொத்து விலைகள் அவ்வளவாகப் பாதிப்படைந்திருக்காது என்று தேசிய வளர்ச்சி அமைச்சுக்கான இரண்டாம் அமைச்சர் இந்திராணி ராஜா நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
அண்மையில் அதிகாரிகள் நடத்திய அதிரடி நடவடிக்கையில் இந்தக் குற்றங்கள் குறித்து தெரியவந்தது. இந்த வழக்குடன் தொடர்புடைய 152 சொத்துகள், 62 வாகனங்கள் ஆகியவற்றை விற்கக்கூடாது என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்குடன் தொடர்புடைய சொத்துகளின் விலை $2.8 பில்லியனுக்கும் அதிகம்
இந்த முறையற்ற பரிவர்த்தனைகளால் உள்ளூர் சொத்துகளின் விலை எவ்வாறு பாதிப்படைந்துள்ளன என்பது குறித்து துல்லியமாகச் சொல்வது கடினம் என்றார் அமைச்சர் இந்திராணி.
இதுவரை 94 வீடுகளை விற்கக்கூடாது என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவற்றில் எட்டு, செந்தோசா கோவ்வில் உள்ள தரை வீடுகள் என்றும் அவர் தெரிவித்தார்.
இந்த வழக்குடன் தொடர்புடைய வீடுகளில் 60 வீடுகள் மறுவிற்பனை வீடுகள் என்றும் 34 வீடுகள் புதிய வீடுகள் என்றும் அவர் தெரிவித்தார்.
இந்த வழக்குடன் தொடர்புடைய 53 வர்த்தகச் சொத்துகளையும் ஐந்து தொழில்துறைச் சொத்துகளையும் விற்கக்கூடாது என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்தப் பரிவர்த்தனைகள் நடந்தேற, தேவையான ஏற்பாடுகளைச் செய்து தந்த சொத்து முகவைகள் மற்றும் சொத்து முகவர்களிடம் விசாரணை நடத்தப்படுவதாக அமைச்சர் இந்திராணி தெரிவித்தார்.
“இந்த வழக்கு குறித்து தீவிர விசாரணை நடத்துவோம். விதிமீறில்கள் கண்டறியப்பட்டால், தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்,” என்று அமைச்சர் இந்திராணி உறுதி அளித்தார்.
தொடர்புடைய செய்திகள்
சிங்கப்பூரில் உள்ள தரைவீடுகளை வெளிநாட்டினர் வாங்குவது தொடர்பாக அரசாங்கத்தின் நிலைப்பாடு குறித்து பாட்டாளிக் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் ஹி டிங் ருவின் கேள்விக்கு அமைச்சர் இந்திராணி பதிலளித்தார்.
சிங்கப்பூரில் உள்ள தரைவீடுகளை வாங்க வெளிநாட்டினர் விண்ணப்பம் செய்தாலும் குடியிருப்புச் சொத்துகள் சட்டத்தின்கீழ், அத்தகைய விண்ணப்பங்கள் தொடர்ந்து மிகக் குறைவான அளவில் ஏற்றுக்கொள்ளப்படுவதாக அவர் தெரிவித்தார்.
2022ஆம் ஆண்டில், சிங்கப்பூரில் தரைவீடு வாங்க 34 நிரந்தரவாசிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது. 2021ஆம் ஆண்டில் 51 நிரந்தரவாசிகளுக்கும் 2020ஆம் ஆண்டில் 24 நிரந்தரவாசிகளுக்கும் அனுமதி வழங்கப்பட்டது.
ஆனால் அதே காலகட்டத்தில் 2,700 தரைவீடுகள் விற்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. சிங்கப்பூரில் 73,000க்கும் மேற்பட்ட தரைவீடுகள் உள்ளன.
சிங்கப்பூரில் தரைவீடு வாங்க வெளிநாட்டினருக்கு எளிதில் அனுமதி கிடைத்துவிடுவதில்லை என்றார் அமைச்சர் இந்திராணி. விண்ணப்பதாரர்கள் குறைந்தது ஐந்து ஆண்டுகளுக்கு நிரந்தரவாசிகளாக இருக்க வேண்டும். அத்துடன் சிங்கப்பூர் பொருளியலுக்கு அதிக அளவில் பலன் தருபவர்களாக இருக்க வேண்டும். உதாரணத்துக்கு, அவர்கள் பெருமளவிலான வருமான வரி செலுத்துபவர்களாக இருக்க வேண்டும் என்றார் அமைச்சர் இந்திராணி.

