சட்டவிரோதப் பண விவகாரத்தைக் கண்டுபிடிப்பது கடும் சவாலாக இருந்தது என்று உள்துறை இரண்டாம் அமைச்சர் ஜோசஃபின் டியோ நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
“நிதி நிறுவனங்கள் தொடங்கி நிறுவனச் சேவை வழங்குநர்கள் வரை கள்ளப் பண விவகாரம் நீண்டு பரந்திருந்ததோடு சொத்துச் சந்தை முகவர்கள், நகைக் கற்களை விற்போர் ஆகியவர்களிடம் தேவையான சோதனைகளையும் சரிபார்ப்புகளையும் மேற்கொள்ள வேண்டி இருந்தது,” என்றார் திருவாட்டி டியோ.
சிங்கப்பூரில் இதுவரை கண்டறியப்பட்டுள்ள சட்டவிரோதப் பண விவகாரத்தில் இதுவே ஆக மோசமானது என்றார் அவர்.
மேலும் அவர் கூறுகையில், “அனைத்துலக நிதி மையமான சிங்கப்பூரில் அன்றாடம் ஏராளமான பரிவர்த்தனைகள் செய்யப்படுகின்றன.
“அந்த எண்ணிலடங்கா பரிவர்த்தனைகளில் சட்டவிரோதப் பண நடவடிக்கைகள் மூழ்கி இருந்தன. அதில் மில்லியன்கணக்கான சட்டவிரோதப் பணத்தைக் கண்டறிவது சவாலாக இருந்தது.
“வைக்கோலுக்குள் ஊசியைத் தேடுவது போன்றதாக இருந்த அதேநேரம் பல்வேறு வைக்கோல் போர்களில் ஓர் ஊசி இருந்ததும் தெரிய வந்தது.
“இதுவரை பத்து பேர் கைது செய்யப்பட்டு அவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டு உள்ளது. மேலும் பலர் கைது செய்யப்படலாம். இன்னும் அதிகமான சொத்துகள் கைப்பற்றப்படலாம்.
“கைது செய்யப்பட்டவர்களும் அவர்களின் குடும்ப உறுப்பினர்களும் விசாரணையில் உதவி வருகிறார்கள். குறைந்தபட்சம் எட்டுப் பேர் இன்னும் தேடப்படுகிறார்கள்,” என்று விவரித்தார் அவர்.
தொடர்புடைய செய்திகள்
கள்ளப் பணத்தை நல்ல பணமாக மாற்றும் குற்றத்திற்கு எதிரான சட்ட ஒழுங்குமுறை சிங்கப்பூரில் நடப்பில் உள்ளதாகக் குறிப்பிட்ட திருவாட்டி டியோ, அரசாங்கம், நிதி அமைப்புகள் ஆகியவற்றோடு அனைத்துலக முகவைகளும் இதில் ஒன்றுசேர்ந்து ஒத்துழைக்கின்றன என்றார்.
“வர்த்தகம் புரிவதை நாம் வரவேற்கும் அதேநேரம் குற்றம் புரியக்கூடியவர்களும் அந்த வாய்ப்பைப் பயன்படுத்துவார்கள்.
“வலுவான சட்ட நடைமுறைகளையும் பொருளியல் வெளிப்படைத் தன்மையையும் ஏமாற்ற அவர்கள் முயல்வார்கள்.
“அதன் மூலம் தங்களது சட்டவிரோதப் பணத்தை இங்கு கொண்டு வந்து அதற்கு நல்ல பணம் என்பதைப் போன்ற சட்ட வடிவம் கொடுப்பார்கள்.
“சிங்கப்பூர் மட்டுமல்ல, பெரும் பெரும் நிதி மையங்களும் இதுபோன்றவர்களிடம் சிக்கக்கூடிய ஆபத்து உள்ளது,” என்றார் திருவாட்டி டியோ.

