கொவிட்-19 தொற்று செப்டம்பரில் இரண்டு மடங்குக்கு மேல்

2 mins read
d023bfc2-cd69-4833-ba42-f147cbceb00a
செப்டம்பர் 17லிருந்து 23ஆம் தேதிக்குள் 16,401 பேர் கொவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டனர். - கோப்புப்படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூரில் செப்டம்பர் 17லிருந்து 23ஆம் தேதிவரையிலான கொவிட்-19 தொற்றுச் சம்பவங்களின் எண்ணிக்கை அதற்கு முந்தைய வார எண்ணிக்கையைவிட இரண்டு மடங்கு அதிகமாகி 16,401 என்ற எண்ணைத் தொட்டது.

இதற்கு முந்தைய வார தொற்றுச் சம்பவங்களின் எண்ணிக்கை 6,401 மட்டுமே என்பது இங்கு நினைவுகூரத்தக்கது.

இதற்கு முந்தைய 10 வாரங்களில், அதாவது ஜூலை 9லிருந்து செப்டம்பர் 16ஆம் தேதிவரை, கொவிட்-19 தொற்றுச் சம்பவங்களின் வாராந்தர எண்ணிக்கை 3,485லிருந்து 7,045 ஆக இருந்தது.

சிங்கப்பூரில் கொவிட்-19 தொற்றுச் சம்பவங்கள் குறித்து இனி அரசுக்கு தெரிவிக்கப்பட வேண்டியதில்லை. எனவே, மேற்குறிப்பிடப்பட்ட தொற்று எண்ணிக்கை பொதுவாக மருத்துவ சிகிச்சை நாடியோரைக் கொண்டு கணக்கிடப்பட்டுள்ளது.

இது குறித்து கருத்துரைத்த சுகாதார அமைச்சு, நிலைமையைத் தான் கண்காணித்து வருவதாகத் தெரிவித்தது. எனினும், இதுபற்றி கவலையடைய வேண்டியதில்லை என்று அது கூறியது.

ஏனெனில், தொற்று ஏற்பட்டுள்ள நபர்களின் எண்ணிக்கை முந்தைய தொற்று அலைகளுடன் ஒப்பிடும்போது குறைவு என்று விளக்கியது.

“கொவிட்-19 தொற்றுக்காக தினமும் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்படுவோரின் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது. அதுபோல்; தினமும் தீவிர சிகிச்சைப் பிரிவில் கொவிட்-19 தொற்றுக்காக அனுமதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் குறைவு,” என்று கொவிட்-19 வலைதளத்தில் கூறப்பட்டுள்ளது.

இவ்வாண்டு மிக அதிக எண்ணிக்கையிலான தொற்றுச் சம்பவங்கள் மார்ச் மாத இறுதியில் காணப்பட்டது. அப்போதைய வாராந்தர தொற்று எண்ணிக்கை 28,410 என்றிருந்தது.

அந்த வாரம் 159 பேர் மருத்துவமனை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அதற்கு முந்தைய வார எண்ணிக்கையான 139விட இது சற்று அதிகமாகும். இதில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஏழாக இருந்தது. ஒப்புநோக்க இதற்கு முந்தைய வாரம் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆறாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

எனினும், மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவது, தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்படுவது யாவும் தொற்றுச் சம்பவங்கள் கண்டறிந்த பின்னரே நிகழ்வது இங்கு நினைவுகூரத்தக்கது. இதனால், மார்ச் மாத இறுதியில் ஏற்பட்ட தொற்றில் பாதிக்கப்பட்டோர் சிகிச்சைக்காக மருத்துவமனைகளில் சேர்க்கப்படுவது, தீவிர சிகிச்சைக்கு உட்படுத்தப்படுவது யாவும் ஏப்ரல் மாதத்தில் நடந்தது.

அதேபோல் கொவிட்-19 தொற்றினால் ஏற்பட்ட மரணங்கள் இவ்வாண்டு ஏப்ரல், மே மாதங்களில்தான் அதிகம். இந்த மரண எண்ணிக்கை ஏப்ரலில் 54ஆகவும் மே மாதம் 53ஆகவும் இருந்தது.

ஆகஸ்ட் மாதம் 10 பேர், பெரும்பாலானோர் குறைந்தது 60 வயதானவர்கள், மரணமடைந்தனர். இதுவே, கொவிட்-19 வலைதளத்தில் கிடை;க்கப்பெறும் ஆகக் கடைசி தகவல்.

இதுபற்றி அறிக்கை ஒன்றில் கருத்துத் தெரிவித்த சுகாதார அமைச்சு, “பொதுமக்களிடையே குறைந்துவரும் நோய் எதிர்ப்பு சக்தி, உருமாறிவரும் நோய்க் கிருமி, அதிகரித்துவரும் பயணங்கள், ஒருவருக்கு மற்றவருடன் பழகுவது போன்றவை தொற்றுச் சம்பவங்கள் அதிகரிப்பதற்கான காரணங்களாக இருக்கலாம்,” என்று விளக்கியது.