சிங்கப்பூரின் நிதிப் பரிவர்த்தனை முறைகளை மறுஆய்வு செய்யவும் கள்ளப் பணத்தை நல்ல பணமாக்கும் குற்றங்களைத் தடுக்கும் நடவடிக்கைகளை வலுப்படுத்தவும் அமைச்சுகளுக்கு இடையிலான புதிய குழு அமைக்கப்பட்டுள்ளது என நிதிக்கான இரண்டாம் அமைச்சர் இந்திராணி ராஜா நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
“குற்றவாளிகள் அதிநவீன அணுகுமுறைகளைப் பயன்படுத்துவது அதிகரித்து வருகிறது. நடைமுறையில் உள்ள சட்டங்களையும் விதிமுறைகளையும் மீற அவர்கள் எப்போதும் திட்டமிட்டு வழிவகைகளைத் தேடுகின்றனர். எனவே, சிங்கப்பூரில் செயல்படும் நிறுவனங்களால் மேற்கொள்ளப்படும் சட்டவிரோத நடவடிக்கைகளை இன்னும் எளிதாகக் கண்டுபிடிக்க தகவல் சேகரிப்பு, தகவல் பகிர்வு ஆகியவற்றை தொடர்ந்து வலுப்படுத்த வேண்டும்,” என்றார் அமைச்சர் இந்திராணி ராஜா.
சிங்கப்பூரில் அண்மையில் $2.8 பில்லியன் பெறுமானமுள்ள கள்ளப் பணத்தை நல்ல பணமாக்கும் குற்றம் வெளிச்சத்துக்கு வந்தது. அதுகுறித்து நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு அமைச்சர் இந்திராணி விளக்கம் அளித்தார்.
அமைச்சுகளுக்கு இடையிலான குழுவுக்கு அமைச்சர் இந்திராணி தலைமைதாங்குவார். குழுவில் சிங்கப்பூர் நாணய ஆணையம், உள்துறை அமைச்சு, சட்ட அமைச்சு, மனிதவள அமைச்சு, வர்த்தக, தொழில் அமைச்சு ஆகியவற்றைச் சேர்ந்தவர்களும் அங்கம் வகிப்பர்.
புதிய குழு நான்கு அம்சங்களில் கவனம் செலுத்தும்.
முதல் அம்சம், சிங்கப்பூர் நிறுவனங்களின் செயல்பாடு, வர்த்தக முறை ஆகியவை முறையற்ற வகையில் பயன்படுத்தப்படுவதைத் தவிர்ப்பதாகும்.
இரண்டாவது அம்சம், சந்தேகத்துக்குரிய பரிவர்த்தனைகள் குறித்து நிதி நிறுவனங்கள் எவ்வாறு உடனே அதிகாரிகளுக்குத் தெரிவிக்கலாம் என்றும் அவற்றுக்கு எதிராக எவ்வாறு தங்களைப் பாதுகாத்துக்கொள்ளலாம் என்பது குறித்தும் பரிசீலனை செய்யப்படும்.
மூன்றாவது அம்சம், கள்ளப் பணத்தை நல்ல பணமாக்கும் குற்றத்தைத் தடுக்க நிறுவனங்களுக்குச் சேவை வழங்கும் நிறுவனங்கள், சொத்து முகவர்கள், ரத்தினக் கற்கள் மற்றும் உலோக வர்த்தகர்கள் எவ்வாறு உதவலாம் என்பது குறித்தும் ஆராயப்படும்.
தொடர்புடைய செய்திகள்
நான்காவது அம்சம், சந்தேகத்துக்குரிய நடவடிக்கைகளைச் சிறப்பான முறையில், இன்னும் எளிமையாகக் கண்டுபிடிக்க அரசாங்க அமைப்புகளுக்கிடையிலான ஆற்றலை எவ்வாறு வலுப்படுத்தலாம் என்பது குறித்தும் ஆராயப்படும்.

