‘எதிர்கால பொதுப் போக்குவரத்துக் கட்டண உயர்வை நீக்கக் கோருவது சரியானதன்று’

‘எதிர்கால பொதுப் போக்குவரத்துக் கட்டண உயர்வை நீக்கக் கோருவது சரியானதன்று’

1 mins read
294f9047-cf0f-48f9-ae88-5f1651acf34e
பாட்டாளிக் கட்சியின் செங்காங் குழுத்தொகுதி எம்.பி. லூயிஸ் சுவா, சுவா சூ காங் குழுத்தொகுதி எம்.பி. டோன் வீ இருவரின் பரிந்துரைகளை திரு சீ ஹொங் டாட் நிராகரித்தார். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

எதிர்காலத்தில் பொதுப் போக்குவரத்துக் கட்டண உயர்வை நிறுத்தி வைக்க அல்லது எதிர்கால கட்டண மறுஆய்வு நடவடிக்கைகளுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ள 15.6 விழுக்காடு கட்டண அதிகரிப்பை நீக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் முன்வைத்த கோரிக்கைகள், பேருந்துகள் மற்றும் ரயில்களுக்கு நிதி ஒதுக்கீட்டில் ஏற்கெனவே உள்ள இடைவெளியை அதிகரிக்கச் செய்யும் என்று இடைக்காலப் போக்குவரத்து அமைச்சர் சீ ஹொங் டாட் கூறியுள்ளார்.

வரி செலுத்துவோருக்கு எதிர்காலத்தில் இன்னும் பெரிய அளவிலான கட்டணத்துக்கு இது இட்டுச்செல்லும் என்றார் அவர்.

அதன் பொருட்டு, பாட்டாளிக் கட்சியின் செங்காங் குழுத்தொகுதி எம்.பி. லூயிஸ் சுவா, சுவா சூ காங் குழுத்தொகுதி எம்.பி. டோன் வீ இருவரின் பரிந்துரைகளை செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றத்தில் திரு சீ நிராகரித்தார்.

சிங்கப்பூரின் பொதுப் போக்குவரத்து முறையின் நீண்டகால நம்பகத்தன்மையையும் நிதி நிலைத்தன்மையையும் அத்தகைய பரிந்துரைகள் பாதிக்கும் என்று அவர் குறிப்பிட்டார்.

ஒத்திவைக்கப்படும் கட்டண உயர்வை நீக்குவதாலோ கட்டண அதிகரிப்பை நிறுத்தி வைப்பதாலோ பொதுப் போக்குவரத்து முறையை நடத்துவதற்கான செலவுகள் ‘காற்றில் மறைந்துவிடும்’ என்று அர்த்தமாகாது என்றார் அவர்.

டிசம்பர் 23ஆம் தேதி நடப்புக்கு வரும் கட்டண உயர்வு குறித்து கேள்வி எழுப்பிய எட்டு எம்.பி.க்களில் திரு சுவாவும் திரு வீயும் அடங்குவர்.

குறிப்புச் சொற்கள்