ஜூரோங் ஈஸ்ட் சென்ட்ரலில் ஞாயிற்றுக்கிழமை காலை நிகழ்ந்த சாலை விபத்தில் தம் காதலி நூர் அஃபியா ஹிஷாம், 23, உயிரிழந்த செய்தியைக் கேட்டவுடன் திரு ஃபவ்ஸான் மஸ்ரி மனமுடைந்துபோனார்.
“விபத்து ஏற்படுவதற்கு முதல் நாள் இரவுதான் நான் அவரைச் சந்தித்தேன். சில நாள்களுக்கு முன்பு, டிசம்பரில் நிச்சயதார்த்தம் செய்துகொள்வது குறித்து கலந்தாலோசித்தோம்,” என்று மலாய் நாளிதழான பெரித்தா ஹரியானிடம் திரு ஃபவ்ஸான் திங்கட்கிழமை கூறினார்.
“எங்களது திட்டங்கள் குறித்து எங்கள் பெற்றோரிடம் தெரியப்படுத்த விரும்பினோம். திருமணச் சடங்கை எளிமையாக நடத்தவே என் காதலி விரும்பினார்,” என்றார் திரு ஃபவ்ஸான், 25.
அங் மோ கியோவில் உள்ள அல்-முத்தகீன் பள்ளிவாசலில் 2018ல் தொண்டூழியர்களாகச் சேர்ந்த பின் திரு ஃபவ்ஸானுக்கு குமாரி அஃபியா அறிமுகமானார்.
ஆறு பிள்ளைகளில் இரண்டாவதும் ஒரே மகளுமான குமாரி அஃபியா பள்ளிவாசலுக்குச் செல்ல விரும்புவார் என்றார் திரு ஃபவ்ஸான்.
2020ல் மோட்டார்சைக்கிள் ஓட்ட குமாரி அஃபியா உரிமம் பெற்றார் என அவருடைய இளம் சகோதரர் முகம்மது அகிஃப் ஹிஷாம், 17, பெரித்தா ஹரியானிடம் கூறினார்.
மரினா பே சேண்ட்சில் உள்ள வேலையிடத்துக்குச் சென்றுகொண்டிருந்தபோது குமாரி அஃபியா விபத்தில் சிக்கினார். அவர் என்ன வேலையில் உள்ளார் என்பது குறித்து குறிப்பிடப்படவில்லை.
குமாரி அஃபியா விபத்துக்குள்ளானது குறித்த பதிவு ஒன்று எஸ்ஜி ரோடு விஜிலாண்டே ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிடப்பட்டது. அதையடுத்து அச்செய்தி இணையத்தில் வலம் வந்தது.
தொடர்புடைய செய்திகள்
குமாரி அஃபியா ஓட்டிய மோட்டார்சைக்கிள் சறுக்கியதாக நம்பப்படுகிறது என்று காவல்துறை ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தது.
குமாரி அஃபியாவின் உடல் திங்கட்கிழமை மாலை 4 மணியளவில் நல்லடக்கம் செய்யப்பட்டது.