கூசு யாத்திரை: அதிகமானோர் செல்ல வாய்ப்பு

கூசு யாத்திரை: அதிகமானோர் செல்ல வாய்ப்பு

2 mins read
714b1f68-cd80-401e-9052-0d15667176cb
ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான மக்கள் கூசு தீவிற்கு யாத்திரை செல்வர். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

கூசு தீவிற்கு இந்த ஆண்டில் அதிகம் பேர் யாத்திரை செல்வர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அங்குள்ள டா போ கோங் (துவா பெக் கோங்) கோயில் இந்த ஆண்டில் தனது நூறாவது ஆண்டைக் கொண்டாடுகிறது. அந்தச் சீனக் கோயில் 1923ல் கட்டப்பட்டது.

இந்த ஆண்டு அக்டோபர் 15 முதல் நவம்பர் 12 வரை யாத்திரை மேற்கொள்ளப்படுகிறது.

அந்தக் காலகட்டத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் அங்கு செல்வர்.

இதனிடையே, வருடாந்திர கூசு புனித யாத்திரை காலத்தின்போது அங்கு செல்ல விரும்புவோர், சிங்கப்பூர் படகு, பயணப்படகுச் சேவை (எஸ்ஐசி) இணையத்தளத்தில் அல்லது அந்த இணையத்தளத்தில் கியூஆர் கோடை வருடி படகுப் பயணச் சீட்டுகளை வாங்கலாம் என்று சிங்கப்பூர் நில ஆணையம் தெரிவித்தது.

பயணச்சீட்டுக் கட்டணம், திங்கள் முதல் வெள்ளி வரை பெரியவர்களுக்கு $16. வார இறுதி நாள்களில் $20 ஆகும்.

12 வயது வரைப்பட்ட சிறாருக்குக் கட்டணம் $12. பயணச்சீட்டு வாங்குவோருக்கு அது கிடைத்தால் மின்னஞ்சல் வரும். மரினா சவுத் பியரில் அதைக் காட்டி பயணச்சீட்டைப் பெற்று யாத்திரை செல்லாம்.

முதல்படகு வார நாட்களில் காலை 7 மணிக்குப் புறப்படும். வார முடிவு நாட்களிலும் நவம்பர் 12ஆம் தேதியும் காலை 6.30 மணிக்குப் புறப்படும். நவம்பர் 12 ஆம் தேதி தீபாவளிப் பண்டிகை. பொது விடுமுறை.

கூசு தீவுக்குச் செல்வோர் குடிக்க தண்ணீர் கொண்டு செல்லவேண்டும். அங்கு இரவில் தங்க முடியாது. செல்லப் பிராணிகளைக் கொண்டுசெல்லவும் இயலாது.

குறிப்புச் சொற்கள்