தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சிங்போஸ்ட்டுக்கு 2022ல் $16மி. இழப்பு; அஞ்சல் தொழில்துறை மறுபரிசீலனை

3 mins read
3743497a-9fcd-4c27-9473-834ce1e5e8f4
தளவாடப் போக்குவரத்து, இணைய வர்த்தக நிறுவனங்கள் தங்களுடைய அஞ்சல் பட்டுவாடா ஆற்றல்களை அதிகமாக்கி இருக்கின்றன. அதனால் சிங்போஸ்ட் அஞ்சல் அளவு குறைந்து இருக்கிறது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் 

சிங்கப்பூர் போஸ்ட் (சிங்போஸ்ட்) நிறுவனத்திற்கு 2022ல் அஞ்சல், பார்சல் தொழில்துறையில் $16 மில்லியன் நடைமுறை இழப்பு ஏற்பட்டது.

அதேவேளையில், அஞ்சல்களின் அளவும் குறைந்தன. தளவாடப் போக்குவரத்து நிறுவனங்கள், இணைய வர்த்தக நிறுவனங்கள் ஆகியவையும் போட்டியில் குதித்தன.

அஞ்சல் பட்டுவாடா சந்தையில் இந்த மாற்றங்கள் காரணமாக அஞ்சல்களை அனுப்புவதற்குச் செலவு அதிகரித்துவிட்டது.

தொடர்பு, தகவல் மூத்த துணை அமைச்சர் டான் கியட் ஹாவ் புதன்கிழமை நாடாளுமன்றத்தில் இந்த விவரங்களைத் தெரிவித்தார்.

சிங்கப்பூரில் அஞ்சல் கட்டணம் இன்னும் சில நாட்களில் உயரும்.

என்றாலும் கட்டணம் அதிகரித்த பிறகும் இதர நாடுகளுடன் ஒப்பிடக்கூடிய அளவில்தான் இங்கு கட்டணம் தொடர்ந்து இருக்கும் என்றும் அவர் கூறினார்.

சிங்போஸ்ட் நிறுவனம், அக்டோபர் 9ஆம் தேதி முதல் பொதுவான அஞ்சலுக்கான கட்டணத்தை 31 காசில் இருந்து 51 காசாக உயர்த்துகிறது. இது சுமார் 65% அதிகரிப்பாகும்.

சுமாராக A5 அளவுள்ள 500 கிராம் எடையுள்ள வழக்கமான அஞ்சலுக்கு 51 காசு கட்டணமாக இருக்கும். A4 அளவுள்ள 500 கிராம் எடையுள்ள அஞ்சலுக்கு கட்டணம் 80 காசு.

இதற்கு முன் 2014ஆம் ஆண்டில்தான் கட்டணம் குறிப்பிடத்தக்க அளவுக்கு உயர்த்தப்பட்டது.

நாடாளுமன்றத்தில் இதன் தொடர்பிலான உறுப்பினர்களின் கேள்விகளுக்குப் பதில் அளித்த மூத்த துணை அமைச்சர், அஞ்சல் கட்டணத்தை உயர்த்த சிங்போஸ்ட் விடுத்த வேண்டுகோளைத் தகவல் தொடர்பு ஊடக மேம்பாட்டு ஆணையம் அங்கீகரித்து இருப்பதாகக் கூறினார்.

சிங்கப்பூரில் அஞ்சல் கட்டணம் உயர்த்தப்பட்டாலும் அது அமெரிக்கா, ஜப்பான் போன்ற நாடுகளின் கட்டணத்துடன் ஒப்பிடும் அளவில்தான் இருக்கும் என்று அவர் விளக்கினார்.

சிங்போஸ்ட் நிறுவனம் சென்ற நிதி ஆண்டில் $38.8 மில்லியன் லாபம் ஈட்டியது. அஞ்சல் கட்டணத்தை உயர்த்த சிங்போஸ்ட் அனுமதி கேட்டபோது ஆணையம் சென்ற ஆண்டில் சிங்போஸ்ட் ஈட்டிய லாபத்தை கருத்தில் கொண்டதா என்று உறுப்பினர்கள் கேட்டிருந்தனர்.

இதற்குப் பதிலளித்த அமைச்சர், 2022 நிதி ஆண்டில் சிங்போஸ்ட்டின் ஒட்டுமொத்த தொழில் லாபகரமானதாக இருந்தது என்றும்ருந்தாலும் அதன் லாபத்தில் 90 விழுக்காட்டுக்கும் மேற்பட்ட தொகை, அதனுடைய தளவாடப் போக்குவரத்துத் தொழில்துறையில் இருந்தும் வெளிநாட்டு முதலீடுகளில் இருந்தும் தான் கிடைத்தது என்றும் சுட்டினார்.

சிங்கப்பூரில் அஞ்சல், பார்சல் விநியோகம்தான் சிங்போஸ்ட் நிறுவனத்தின் மூலாதார தொழிலாக இருக்கிறது.

இதைப் பொறுத்தவரை $16 மில்லியன் இழப்பு ஏற்பட்டு இருக்கிறது என்றும் திரு டான் விளக்கினார்.

சிங்போஸ்ட்டின் உள்நாட்டுத் தொழிலுக்கு ஆதரவாகத்தான் கட்டணம் உயர்த்தப்படுகிறது என்றும் அவர் கூறினார்.

சிங்போஸ்ட் ஒவ்வொரு குடும்பத்திற்கும் 51 காசு மதிப்புள்ள 10 இலவச அஞ்சல் முத்திரைகளை வழங்கும்.

வாடிக்கையாளர்கள் சராசரியாக ஒரு மாதத்தில் ஒரு கடிதத்தைக் கூட அனுப்புவதில்லை. இதை வைத்துப் பார்க்கையில், அவர்களுக்கு ஓராண்டு காலம் ஏற்படக்கூடிய அஞ்சல் செலவை அந்தத் தபால்தலைகள் ஈடுகட்டிவிடும் என்றும் அவர் தெரிவித்தார்.

சிங்போஸ்ட் நிறுவனம் தன்னுடைய அஞ்சல், பார்சல் தொழில்துறை ஆற்றலுடன் தொடர்ந்து திகழும்ரையில் அதைச் சீரமைக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக கூறிய திரு டான், என்றாலும் திட்டவட்டமாக எதையும் தெரிவிக்கவில்லை.

குறிப்புச் சொற்கள்