தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

‘மேலும் ஆரோக்கியமான எஸ்ஜி’ திட்டத்தில் மனநலச் சேவை சேர்க்கப்படும்

2 mins read
5e893929-3d3d-4d1b-ba0a-95deedf6d92d
சிங்கப்பூர் மனநலக் கருத்தரங்கில் அமைச்சர் ஓங் யி காங் புதன்கிழமை உரையாற்றினார். - படம்: சாவ்பாவ்

தேசிய அளவிலான நோய் வருமுன் காக்கும் திட்டமான ‘மேலும் ஆரோக்கியமான எஸ்ஜி’யில் மனநலச் சேவை சேர்க்கப்படும் எனச் சுகாதார அமைச்சர் ஓங் யி காங் (படம்) தெரிவித்துள்ளார்.

சிங்கப்பூர் மனநலக் கருத்தரங்கில் புதன்கிழமை உரையாற்றிய அவர், “மற்ற நாட்பட்ட நோய்களுக்கு எப்படி செய்துள்ளோமோ, அதேபோல மனநலச் சுகாதார வரைமுறைகளைத் தயாரித்து, மனநல ஆதரவைச் செயல்படுத்துவோம்,” என்று கூறினார்.

மனநலப் பிரச்சினை உடையோரைக் கையாள, தற்போது 400க்கும் அதிகமான பொதுநல மருத்துவர்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. நோயாளிகளின் மனநலத் தேவைகளைப் பூர்த்திசெய்ய சமூகத் திட்டங்களில் ஈடுபட்டு மருத்துவமனைகளுடன் சேர்ந்து பொதுநல மருத்துவர்கள் செயல்படுகின்றனர்.

வரும் ஆண்டுகளில் அந்த எண்ணிக்கை படிப்படியாக அதிகரிக்கப்படும் என்றார் திரு ஓங்.

“மேலும் ஆரோக்கியமான எஸ்ஜி திட்டத்தின் மூலம், தனிநபர்கள் தங்களது மனநல மீள்திறனை மேம்படுத்தவும் மனஉளைச்சலைச் சமாளிக்கவும் நாம் உதவ வேண்டும்,” என்று அவர் கூறினார்.

2021ல் அமைக்கப்பட்ட மனநலனுக்கான அமைப்புநிலைப் பணிக்குழு, இந்த விவகாரத்தை முழுமையாக எதிர்கொள்ள தேசிய அளவிலான உத்தியை உருவாக்கியுள்ளதாக திரு ஓங் தெரிவித்தார்.

தற்போது இறுதிப்படுத்தப்படும் அப்பணிக்குழுவின் பரிந்துரைகள், வியாழக்கிழமை வெளியிடப்படும்.

தாம் கல்வி அமைச்சராக இருந்தபோது, கூடுதலான மாணவர்கள் தம்மிடம் மனநலப் பிரச்சினைகளை எடுத்துரைத்ததை தாம் கவனித்ததாக திரு ஓங் சொன்னார்.

“இளம் தலைமுறையினர் போர், இனக்கலவரம் போன்றவற்றை எதிர்நோக்காவிடிலும், வேறு விதமான மனஉளைச்சலையும் பதற்றத்தையும் சந்திக்கின்றனர்,” என்றார் அவர்.

பருவநிலை மாற்றம், வேகமாக மாறிவரும் உலகம், வேகமான வாழ்க்கைச் சூழல், சமூக ஊடகம், பள்ளியிலும் வேலையிலும் கடும் போட்டி போன்றவை குறித்து அவர்கள் கவலையுறுவதாக திரு ஓங் சொன்னார்.

தனிநபர்களின் உடல்நலம், மனநலம், உணர்வுநலம் ஆகியவற்றைக் கவனித்துக்கொள்வதற்கான தேவையை தமது அமைச்சில் உள்ள மருத்துவர்கள் நன்றாக அறிந்து வைத்திருப்பதைச் சுட்டி திரு ஓங் உரையை நிறைவுசெய்தார்.

குறிப்புச் சொற்கள்