தண்ணீர்க் கட்டணத்தை உயர்த்த வேண்டிய கட்டாயத்தில் பியூபி

தண்ணீர்க் கட்டணத்தை உயர்த்த வேண்டிய கட்டாயத்தில் பியூபி

2 mins read
5b802ee0-a0f0-49f5-a178-d47388c26aaa
சிங்கப்பூரில் தண்ணீர்க் கட்டணம் இரு கட்டங்களாக உயர்த்தப்படுகிறது. 2024 மற்றும் 2025ஆம் ஆண்டுகளில் அந்த உயர்வு நடப்புக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

நம்பத்தகுந்த, பாதுகாப்பான தண்ணீர் விநியோகத்தை உறுதிசெய்வதற்கான நடைமுறைச் செலவுகளை பொதுப் பயனீட்டுக் கழகம் (பியூபி) சமாளிக்க தண்ணீர்க் கட்டணத்தை உயர்த்த வேண்டிய அவசியம் ஏற்பட்டதாக நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற மூத்த துணை அமைச்சர் ஏமி கோர் தெரிவித்து உள்ளார்.

மேலும், தண்ணீர் தொடர்பான உள்கட்டமைப்புகளில் முதலீடு செய்யவும் கட்டண உயர்வு உதவும் என்றும் நாடாளுமன்றத்தில் அவர் கூறினார்.

எதிர்க்கட்சித் தலைவர் பிரித்தம் சிங் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்துப் பேசுகையில் அவர் இவற்றைக் குறிப்பிட்டார்.

தண்ணீர்க் கட்டண உயர்வைத் தாமதப்படுத்தும் வாய்ப்பு ஏதும் உள்ளதா என்று திரு சிங் கேட்டிருந்தார்.

செம்பவாங் தொகுதி உறுப்பினர் போ லி சான், தொகுதியில்லா நாடாளுமன்ற உறுப்பினர் லியோங் மன் வாய் ஆகியோரும் இது தொடர்பாக கேள்வி கேட்டிருந்தனர்.

கடந்த 2017ஆம் ஆண்டிலிருந்து கடல்நீரைக் குடிநீராக்குவதற்கும் நியூவாட்டர் தயாரிக்கவும் ஆகக்கூடிய செலவில் மாற்றம் ஏதும் உள்ளதா என்பதும் அவர்களது கேள்வியாக இருந்தது.

சிங்கப்பூரில் அடுத்த ஈராண்டுகளுக்கு தண்ணீர்க் கட்டணத்தை 18 விழுக்காட்டுக்கு உயர்த்த இருப்பதாக செப்டம்பர் 27ஆம் தேதி பொதுப் பயனீட்டுக் கழகம் அறிவித்து இருந்தது.

கன அடிக்கு கூடுதலாக 50 காசுகள் செலுத்துவதற்கு அது சமம். அது இரு கட்டங்களாக உயர்த்தப்படும். 2024 ஏப்ரல் 1ஆம் தேதி முதற்கட்ட உயர்வும் 2025 ஏப்ரல் 1ஆம் தேதி இரண்டாம் கட்ட உயர்வும் அமல்படுத்தப்படும்.

2025ஆம் ஆண்டு தண்ணீர்க் கட்டணங்கள் முழுமையாக மாற்றப்பட்ட பின்னர் நான்கில் மூன்று குடும்பங்கள் மாதாந்திர தண்ணீர்க் கட்டணத்தில் 10 வெள்ளிக்கும் குறைவான உயர்வைச் சந்திக்கும்.

அதேபோல நான்கில் மூன்று வர்த்தக நிறுவனங்களின் மாதாந்திர தண்ணீர்க் கட்டணத்தில் 25 வெள்ளிக்கும் குறைவான அளவில் உயர்வு இருக்கும்.

உணவங்காடிக் கடைகளைப் பொறுத்தவரை நான்கில் மூன்று உணவங்காடிகளுக்கு மாதம் 15 வெள்ளிக்கும் குறைவான தண்ணீர்க் கட்டண உயர்வு இருக்கும்.

உயரும் விலைகளைச் சமாளிப்பதில் சிங்கப்பூரர்களுக்கு உதவும்பொருட்டு துணைப் பிரதமர் லாரன்ஸ் வோங் அண்மையில் புதிய வாழ்க்கைச் செலவின உதவித் திட்டங்களை அறிவித்து இருந்தார்.

குறிப்புச் சொற்கள்