பேருந்து, ரயில் கட்டண உயர்வு; மூலாதார பணவீக்கம் 0.17% உயர வழிவகுக்கும்

பேருந்து, ரயில் கட்டண உயர்வு; மூலாதார பணவீக்கம் 0.17% உயர வழிவகுக்கும்

படம்: பிசினஸ் டைம்ஸ் 

04 Oct 2023 - 7:28 pm

1 mins read

சிங்கப்பூரில் பொதுப் போக்குவரத்துப் பயணக் கட்டணம் 7 விழுக்காடு அதிகரிக்கவிருக்கிறது. அந்த அதிகரிப்பு, இந்த ஆண்டு டிசம்பரில் 23ஆம் தேதியில் இருந்து நடப்புக்கு வரும்.

அதன் விளைவாக அடுத்த ஆண்டில் சிங்கப்பூரின் மூலாதார பணவீக்க விகிதம் 0.17% கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வர்த்தக, தொழில் அமைச்சர் கான் கிம் யோங், நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட கேள்விக்கு எழுத்து மூலமாக அளித்த பதிலில் இவ்வாறு தெரிவித்து இருக்கிறார்.

பொதுப் போக்குவரத்துக் கட்டணத்தில் பேருந்து, ரயில் கட்டணங்கள் அடங்கும்.

அனைத்து அம்சங்களையும் கருத்தில் கொண்டு கணக்கிடப்படும் ஒட்டுமொத்த பணவீக்கத்தில் அல்லது ஒட்டுமொத்த விலைவாசி உயர்வில் பொதுப் போக்குவரத்துக் கட்டணம் 1.6 விழுக்காட்டுக்குப் பொறுப்பு வகிக்கிறது.

தனியார் போக்குவரத்து கட்டணத்தை நீக்கிவிட்டு கணக்கிடப்படும் மூலாதார பணவீக்கத்தில் அது 2.5 விழுக்காட்டிற்குப் பொறுப்பு வகிக்கிறது.

வாகன உரிமைச் சான்றிதழ் கட்டணம் கூடுவதால் ஏற்படக்கூடிய தாக்கம் பற்றியும் கேள்வி தாக்கல் செய்யப்பட்டது.

அதற்குப் பதிலளித்த அமைச்சர், அடுத்த ஆண்டிற்கான வாகன வாங்குரிமைச் சான்றிதழ் கட்டணத்தை இப்போது கணித்துகூற இயலாது. அதேபோல, பணவீக்கத்தில் அதன் தாக்கம் எந்த அளவுக்கு இருக்கும் என்பதையும் இப்போது கூற இயலாது என்றார்.

குறிப்புச் சொற்கள்
போக்குவரத்து