பாதுகாப்புக்கு மிரட்டல் விடுக்கும் அமைப்புகளைத் தவிர்க்கும் வகையில் சட்டத்திருத்தம்

பாதுகாப்புக்கு மிரட்டல் விடுக்கும் அமைப்புகளைத் தவிர்க்கும் வகையில் சட்டத்திருத்தம்

2 mins read
4b519937-9362-4f8e-9e05-06d63c407469
ஓர் அமைப்பை பதியும் நடைமுறையை பலப்படுத்துவது புதிய மாற்றங்களின் நோக்கம். அந்த மாற்றங்கள் காரணமாக சங்கப் பதிவு அதிகாரிக்கு அதிக அதிகாரங்கள் இருக்கும். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் 

சிங்கப்பூர் நாடாளுமன்றம் புதன்கிழமை சங்கங்கள் (திருத்த) மசோதாவை நிறைவேற்றியது. அதன்மூலம் சங்கங்கள் சட்டத்தில் மாற்றங்கள் இடம்பெறுகின்றன.

அந்த மாற்றங்கள் காரணமாக சிங்கப்பூரின் தேசிய நலன்களுக்கு எதிரான செயல்களில் ஈடுபடக்கூடிய அமைப்புகளை மேலும் திறம்பட சிங்கப்பூர் கையாள முடியும்.

பதிவகத்தில் அமைப்புகளைப் பதியும் நடைமுறையை அந்த மாற்றங்கள் பலப்படுத்தும். சங்கங்கள் பதிவகத்திற்கு அதிக அதிகாரங்களைத் தரும்.

விண்ணப்பம் தாக்கலாகும் போது அதன் தொடர்பில் பல்வேறு கேள்விகளை பதிவகம் எழுப்ப முடியும்.

சந்தேகத்திற்கு இடமான விண்ணப்பங்களைப் பதிவகம் தவிர்த்துவிடவும் வழி ஏற்படும்.

சங்கங்களைப் பதிவதற்கான விண்ணப்பங்கள் இதுவரை பெயரளவில் அல்லது தானாகவே பரிசீலிக்கப்பட்டு வந்தன.

உள்துறை துணை அமைச்சர் சுன் சூவெலிங் நாடாளுமன்றத்தில் புதன்கிழமை அந்த மாசோதா மீதான விவாதத்தில் கலந்துகொண்டு பேசினார்.

சட்டவிரோத நோக்கங்களுக்காக பயன்படுத்தக்கூடிய, பாதுகாப்புக்கு மிரட்டல் விடுக்கக்கூடிய, சிங்கப்பூரின் தேசிய நலன்களுக்குப் புறம்பான செயல்களில் ஈடுபடக்கூடிய அமைப்புகள் சிங்கப்பூரில் வேர் ஊன்ற அனுமதிக்கப்படுவதில்லை.

இருந்தாலும் புவிசார் அரசியல் சூழல் மாறுபடுகின்ற ஒரு சூழலில் அத்தகைய மிரட்டல்களை வெற்றிகரமான முறையில் கையாள சிங்கப்பூருக்கு மேலும் அனுகூலங்கள் தேவை என்று அவர் தெரிவித்தார்.

கடந்த ஐந்தாண்டுகளில் சுமார் 1,400 விண்ணப்பங்கள் தாக்கலாயின. அவற்றில் சுமார் பாதி விண்ணப்பங்கள் தானாகவே பதியப்படும் வழியில் தாக்கல் செய்யப்பட்டன.

ஆனால், சட்டத்திருத்தத்தை அடுத்து இனிமேல் இந்த முறையில் செய்ய முடியாது.

விண்ணப்பம் தாக்கலாகும்போது பதிவு அதிகாரி பல கேள்விகளையும் கேட்டு சந்தேகத்திற்கு இடமான விண்ணப்பங்களை நிராகரித்துவிட முடியும்.

அப்படி நிராகரித்துவிடும் விண்ணப்பதாரிகள் உள்துறை அமைச்சிடம் முறையீடு செய்யலாம்.

அங்கும் அது நிராகரிக்கப்பட்டால் சட்ட நடவடிக்கை எடுக்கலாம்.

ஓர் அமைப்பின் அதிகாரியாக இருக்கும் ஒருவருக்குத் தகுதி இல்லை என்று இனிமேல் பதிவு அதிகாரியே அறிவித்துவிடலாம்.

இதுநாள் வரை இந்த அதிகாரம் உள்துறை அமைச்சருக்குத்தான் இருந்தது.

சட்டத்திற்கான திருத்தங்கள் காரணமாக குற்றங்களைக் கையாளக்கூடிய சட்ட அம்சங்களும் மேம்படுத்தப்பட்டு இருக்கின்றன.

குற்றம் செய்வோருக்கு அபராதம் $5,000லிருந்து $10,000 ஆக அதிகரிக்கப்படும். ஓராண்டு வரை கூடினபட்ச சிறைத்தண்டனையும் விதிக்க முடியும்.

சங்கங்கள் சட்டம் இதற்கு முன் 2004ல்தான் மறுபரிசீலனை செய்யப்பட்டது. இதனைக் கருத்தில்கொண்டு பார்க்கும்போது தண்டனைகளை அதிகரிக்க வேண்டிய தேவை இருப்பதாக திருவாட்டி சுன் விளக்கினார்.

கடந்த ஐந்தாண்டுகளில் மொத்தம் 53 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டு இருக்கின்றன. இந்த அளவு, மொத்த விண்ணப்பங்களில் 3.7 விழுக்காடாகும்.

பல்வேறு காரணங்களுக்காக விண்ணப்பங்கள் நிரகாரிக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

வட்டார, உலகச் சூழ்நிலைகள் மாறுகின்றன. அதற்கேற்ப சிங்கப்பூர் திகழ வேண்டும். இதனைக் கருத்தில்கொண்டு சட்டத்திருத்தங்கள் இடம்பெறுவதாகவும் அவர் கூறினார்.

குறிப்புச் சொற்கள்