அக்டோபர் 7ஆம் தேதி சனிக்கிழமை மாலை 6.25 மணிக்கு எண் 100, விக்டோரியா ஸ்திரீட்டில் உள்ள தேசிய நூலக வாரியம் தளம் 5ல் ஒளவையாரின் ஆத்திசூடியைத் தமிழிலிருந்து மாண்டரின், மலாய், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ள நூலும் முத்தழகு மெய்யப்பனின் சுயசரிதை நூலாகிய ‘பன்மொழித் தமிழன் முத்தழகு மெய்யப்பன்’ என்ற நூலும் அறிமுகம் காணவிருக்கின்றன.
இனநல்லிணக்கத்தை வலுப்பெற வைக்க வேண்டும்; ஆத்திசூடியின் நீதிக் கருத்துகள் மற்ற இன மக்களையும், குறிப்பாக மாணவர்களையும் சென்றடைய வேண்டும்; இதன் விளக்கங்களை அனைத்து வீடமைப்புக் கழக அடுக்கு மாடிகளின் மின்தூக்கிகளின் நுழைவாயிலில் மின்னிலக்கக் காட்சியாக அங்கு அமைக்கப்பட்டுள்ள திரைகளில் காண்பிக்கப்பட வேண்டும் எனும் நோக்கத்தில் உருவாகப்பட்ட நூலாகும்.
விழாவுக்கு முன்னாள் நியமன நாடாளுமன்ற உறுப்பினர் இரா. தினகரன் தலைமை ஏற்க இருக்கிறார். தமிழறிஞர் சுப. திண்ணப்பனின் வாழ்த்துரை காணொளி மூலமாகக் காண்பிக்கப்படும். திரு ஜோதி மாணிக்கவாசகத்தின் வாழ்த்துரையை நேரில் கேட்கலாம். முனைவர் இரத்தின வேங்கடேசன், மெய்யப்பனின் இரு நூல்களையும் திறனாய்வு செய்து சிறப்புரை ஆற்ற இருக்கிறார்.
ஹாங்காங் சீனப் பல்கலைக் கழகத்தின் தலைவராகவும், சிங்கப்பூர் தேசியப் பல்கலைக் கழகப் பேராசிரியராகவும் பணியாற்றும் பேராசிரியர் ஹாய் சோ லீ, நூல்களை வெளியிடுவார்.
டாக்டர் சந்துரு, ராஜ்குமார் சந்திரா உள்பட சமூகத் தலைவர்களும் தமிழ் அறிஞர்களுமாக 26 பேர் முதற்படிகளைப் பெற்றுக்கொள்ளவிருக்கிறார்கள்.
மா. அன்பழகன் அனைவரையும் வரவேற்க, முனைவர் ராஜீ சீனிவாசன் இணைப்புரை வழங்குவார். விழா தொடர்பான மேல் விவரங்களுக்கு 9616 6961 என்ற எண்ணை அழைக்கலாம்.