ஆடம்பரப் பொருள்கள் தொடர்பான மோசடி சம்பவத்தில் ஈடுபட்டு இருப்பதாகக் கூறப்பட்டதை ஒட்டி ஒரு தம்பதி மீது ஓராண்டுக்கு முன் முதன்முதலாக குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.
அந்த மோசடிகளில் $32 மில்லியன் மதிப்புள்ள பொருள்கள் பட்டுவாடா செய்யப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டது. அவ்விருவர் மீதும் வியாழக்கிழமை மேலும் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.
அவர்களில் ஒருவரான தாய்லாந்தைச் சேர்ந்த பான்சுக் ஸ்ரீவிப்பா, 28, என்பவர்மீது புதிதாக 166 ஏமாற்றுக் குற்றச்சாட்டுகளும் மேலும் இரண்டு வர்த்தக மோசடிக் குற்றச்சாட்டுகளும் சுமத்தப்பட்டன.
அந்த மாது இப்போது மொத்தம் 172 குற்றச்சாட்டுகளை எதிர்நோக்குகிறார். அவரின் கணவர் சிங்கப்பூரர்.
பி ஜியாபெங், 28, என்ற அந்த ஆடவர்மீது வியாழக்கிழமை புதிதாக இரண்டு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. இவர் மொத்தம் ஏழு குற்றச்சாட்டுகளை எதிர்நோக்குகிறார்.
தம்பதியர் டிரேட்நேஷன், டிரேட்லக்சூரி என்ற பெயர்களில் தொழில் நடத்தினர். அந்த நிறுவனங்களுக்கு எதிராக குறைந்தபட்சம் 180 புகார்கள் காவல்துறையில் தாக்கல் செய்யப்பட்டன.
அதனை அடுத்து 2022 ஜூலையில் அவர்களின் பெயர் பெரிய அளவில் பேசப்பட்டது.
விலை உயர்ந்த கடிகாரங்கள், பைகள் போன்ற பொருள்களை வாங்க விரும்பி அதற்கான முன்பணத்தை வாடிக்கையாளர்கள் செலுத்தினர்.
தொடர்புடைய செய்திகள்
ஆனால் பொருள்கள் தங்களுக்குக் கிடைக்கவில்லை என்று அவர்கள் தெரிவித்தனர்.
புகார்களைத் தொடர்ந்து 2022 ஜூன் 7ஆம் தேதி பி ஜியாபெங் கைதானார். அவரின் மனைவி அப்போது கைது செய்யப்படவிலை. என்றாலும் விசாரணையில் அவர் உதவி வந்தார்.
அந்த மாது ஜூன் 30ஆம் தேதி கடப்பிதழை அதிகாரிகளிடம் ஒப்படைத்தார். இருந்தாலும் இருவரும் ஜூலை 4ஆம் தேதி லாரி ஒன்றில் சிங்கப்பூரை விட்டு தப்பிச் சென்றுவிட்டனர்.
அதற்கு ஒரு மாதம் கழித்து இருவரும் ஜோகூர் பாரு ஹோட்டல் ஒன்றில் கைதாயினர்.
அவர்களின் வழக்கிற்கு முந்தைய கலந்துரையாடல் அக்டோபர் 11 ஆம் தேதி நடக்கும்.

