சிங்கப்பூர், தேசிய மனநல, நல்வாழ்வு உத்தியை தொடங்கி இருக்கிறது.
அதன் விளைவாக, சிங்கப்பூரில் மனநலத் தேவைகளை நிறைவேற்றும் வகையில் அடுத்த சில ஆண்டுகளில் அடிப்படை பராமரிப்பு ஆற்றல் அதிகரிக்கும் என்று வியாழக்கிழமை அறிவிக்கப்பட்டது.
சிங்கப்பூரில் மனநலம் என்பது குறிப்பிடத்தக்க சுகாதார சமூக விவகாரமாக ஆகி இருக்கிறது என்பதை அதிகாரிகள் அங்கீகரித்து இருக்கிறார்கள். இதையே அந்த உத்தி எடுத்துக்காட்டுகிறது.
சமூகம், பள்ளிக்கூடங்கள், வேலையிடங்களில் வருமுன் தடுப்பு, சிகிச்சை ஆகிய கோணங்களில் மனநலப் பிரச்சினையை முழுமையாக, ஒத்திசைவாகச் சமாளிப்பது அந்த உத்தியின் முக்கிய நோக்கம்.
மேலும் ஆரோக்கியமிக்க எஸ்ஜி செயல்திட்டத்தின் கீழ் மனநலச் சேவைகளை வழங்கும் வகையில் மேலும் பல தனியார் மருத்துவர்கள் அடுத்த இரண்டாண்டு காலத்தில் சேர்க்கப்படுவார்கள்.
இவர்கள் குறிப்பாக மனச்சோர்வு, பயம் போன்ற பொதுவான நிலவரங்களை எதிர்நோக்குவோருக்கு உதவுவார்கள்.
இப்போது 24 பலதுறை மருந்தகங்களில் 17 மருந்தகங்கள் மனநலச் சேவைகளை வழங்குகின்றன. 2030ஆவது ஆண்டு வாக்கில் புதிய பலதுறை மருந்தகங்கள் அனைத்தும் அத்தகைய சேவையை வழங்கும்.
2030ஆவது ஆண்டு வாக்கில் இரண்டு புதிய மனநோய் தாதிமை இல்லங்களும் மனநோய் மறுவாழ்வு விடுதி ஒன்றும் அமைக்கப்படும்.
தொடர்புடைய செய்திகள்
உயிர்மாய்ப்பு, தனக்குத் தானே கடுமையாகக் காயங்களை விளைவித்துக் கொள்வது ஆகிய செயல்களில் ஈடுபடக்கூடிய ஆபத்து உள்ள 10 முதல் 19 வரை வயதுள்ள இளையர்களுக்காக இடைக்கால தங்குமிட வசதி ஒன்றும் இருக்கும்.
மனநலக் கழகத்தின் ஆற்றல் விரிவுபடுத்தப்படுவதோடு எதிர்காலத்தில் புதிதாக உருவாக்கப்படும் அலெக்சாண்டிரா மருத்துவமனையில் நோயாளிகள் தங்கி சிகிச்சை பெறுவதற்கான படுக்கைகளும் இருக்கும். மனநோய் சேவைகளும் கிடைக்கும்.
புதிதாக தொடங்கப்பட்டு இருக்கும் உத்திக்குப் பின்னணியில் உள்ள மனநல, நல்வாழ்வு சிறப்புப் பணிக்குழுவுக்குச் சுகாதார மூத்த துணை அமைச்சர் ஜனில் புதுச்சேரி தலைமைத் தாங்குகிறார்.
ஒவ்வொருவரின் தேவைக்கேற்ப அதன் அடிப்படையில் சேவைகளை வழங்கும் ஒரு முன்மாதிரி முறை இந்த உத்தியின் கீழ் அறிமுகப்படுத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.
மக்கள் சுயமாக தங்களுக்கு உதவி செய்து கொள்ள அல்லது உதவியை வேகமாகப் பெற ஏதுவாக தேசிய மனநல உதவி தொலைபேசி, குறுஞ்செய்தி சேவை இன்னும் ஓரிரு ஆண்டுக்குள் இடம்பெறவிருக்கிறது.
மனநலப் புரிந்துணர்வில் பயிற்சி பெற்ற 90,000க்கும் மேற்பட்ட தொண்டூழியர்களும் முன்கள ஊழியர்களும் இப்போது இருக்கிறார்கள்.
அடுத்த இரண்டாண்டுகளில் மேலும் 10,000 முன்கள ஊழியர்களுக்குப் பயிற்சி அளிக்கப்படும்.
மனநலத் தேவைகளுக்கு ஆதரவு அளிக்கும் வகையில் சுமார் 1,500 சமூகச் சேவை நிபுணர்களின் தேர்ச்சிகளும் மேம்படுத்தப்படும்.
தங்களுடைய பிள்ளைகளின் மனநலனுக்கும் நல்வாழ்வுக்கும் ஆதரவு அளிக்கும் வகையில் பெற்றோரும் இந்த உத்தியில் ஈடுபடுத்தப்படுவர்.
இதன்தொடர்பிலான தேர்ச்சிகளைப் பெற்றோருக்கு வழங்கும் வகையில் 2024 தொடக்கத்தில் இருந்து கட்டம் கட்டமாக பெற்றோர் ஆற்றல் சாதனம் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

