உட்லண்ட்ஸ் ரயில் நிலையத்துக்கு அருகே தேவைகேற்ப கட்டப்படும் வீடமைப்பு வளர்ச்சிக் கழக வீடுகளுடன் டோவர் ஃபாரஸ்ட் பகுதியில் கட்டப்படும் கடைசி வீடமைப்பு திட்டம் ஆகியவற்றுடன் இவ்வாண்டு டிசம்பர் மாதம் எட்டு வீடமைப்பு திட்டங்கள் விற்பனைக்கு விடப்பட உள்ளன.
இவற்றுடன், முன்பு புக்கிட் மேராவில் இருந்த அலெக்சாண்டிரா அஞ்சல் நிலையம் இருந்த இடத்தில் கட்டப்பட்டுள்ள வீடுகளும் சின் மிங்கில் 30 ஆண்டுகளுக்குப் பின்னர் கட்டப்பட்டுள்ள வீடுகளும் விற்பனைக்கு விடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாண்டு டிசம்பர் மாதம் நடைபெறவுள்ள கடைசி விற்பனைத் திட்டத்தில் அடங்கியுள்ள எட்டு வீடமைப்புப் பகுதிகள் பற்றிய விவரங்களை கழகம் தனது வலைதளத்தில் வெளியிட்டுள்ளது.
இதில் பீஷான், பிடோக், புக்கிட் மேரா, புக்கிட் பாஞ்சாங், ஜூரோங் வெஸ்ட் ஆகிய பேட்டைகளில் 6,000 வீடுகள் விற்பனைக்கு விடப்படும்.
உட்லண்ட்ஸ் ரயில் நிலையத்துக்கு அருகே வரவுள்ள இரண்டு வீடமைப்புத் திட்டங்கள் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெறும் என்று சொத்து ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
இங்கு ஈரறை ஃபிளெக்சி வீடுகள், மூவறை, நான்கறை, ஐந்தறை வீடுகள் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
உட்லண்ட்ஸ் ரயில் நிலையத்துக்கு அருகே உள்ள இரண்டு வீவக திட்டங்களில் ஒன்று உட்லண்ட்ஸ் ஸ்திரீட் 13க்கும் உட்லண்ட்ஸ் அவென்யூ 5க்கும் இடையே அமையும்.
மற்றொன்று உட்லட்ண்ஸ் அவென்யூ 5ல் ரயில் நிலையத்துக்கு அடுத்தாற்போல் அமையவுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
இந்நிலையில், டோவர் ஃபாரஸ்ட் வீடமைப்புத் திட்டத்தில் 890 மூவறை, நான்கறை வீடுகள் இருக்குமென்றும் அவை டோவர் ரயில் நிலையத்துக்கு அடுத்தாற்போல் இருக்குமென்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. உலு பாண்டானில் டோவர் ஃபாரஸ்ட் பகுதியில் அமையவுள்ள கடைசி வீடமைப்பு திட்டம் இது என்றும் அறியப்படுகிறது.