செப்டம்பர் மாதத்தில் மட்டும் 43 பேர் 1.2 மில்லியன் வெள்ளி வரை போலி சுற்றுலாத் திட்டங்களை நம்பி ஏமாந்துள்ளனர். ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டகிராம் போன்ற சமூக வலைத்தளங்களில் வெளிவரும் கடல் பயணங்கள், பிரபல பாடகர் நிகழ்ச்சிகள், டுரியான் உண்ணும் உலாக்கள் சம்பந்தமான விளம்பரங்களைப் பார்த்து, பலர் ஏமாந்துள்ளனர் என்று காவல் துறை கடந்த வியாழக்கிழமை அறிவித்தது.
மோசடி செய்பவர்கள், முதலில் பாதிப்படைந்தோரை வாட்ஸ்ஆப் வழியாக தொடர்புகொள்வர். பிறகு ஆன்டிராய்ட் பேக்கேஜ் கிட் என்ற செயலியில் உள்ள கோப்புகளை மூன்றாம் தரப்பினரின் விற்பனை விளம்பரங்கள் மூலம் பதிவிறக்கம் செய்யவைப்பர். இதன் பிறகு தகவல் அனுப்பும் முறைகளையோ அல்லது பிற தீயவகையான இணைப்புகளையோ வைத்து கட்டணம் செலுத்த வைக்கின்றனர் மோசடிக்காரர்கள். அவர்களை நம்பி கோப்புகள் பதிவிறக்கம் செய்யப்படும்போது, பணம் வசூலிக்க அனுமதிகோரும் சேவைகள் முடக்கிவிடப்பட்டு மறைச்சொல் உட்பட வங்கிக் கணக்கு விவரங்கள் முறைகேடாக திருடப்படுகின்றன.
போலி வங்கி இணையத்தளங்களின் வழி கைத்தொலைபேசி செயலிகளை மோசடிக்காரர்கள் எங்கிருந்தோ தன்வசப்படுத்தி பணப் பறிமாற்றத்தைச் செய்யத் தூண்டுவார்கள். அனைத்து பரிவர்த்தனைகளும் முடிந்தபிறகுதான் பாதிப்படைந்தோர்கள், தங்கள் வங்கிக் கணக்குகளில் முறைகேடாக பணம் வசூலிக்கப்பட்டதை உணர்வார்கள்.
கடந்த 29 செப்டம்பர் அன்று, கேக் மற்றும் ரொட்டி கடையில் பகுதிநேர பணியாற்றும் ஊழியர் ஒருவர் $111,000 வெள்ளியை இதுபோன்ற மோசடியில் இழந்தார். அவர் அன்டிராய்ட் கைத்தொலைபேசியில் மூன்றாம் தரப்புச் செயலியை பதிவிறக்கி, மலேசியாவில் ஒரு பகல்நேர டுரியான் உண்ணும் சுற்றுலாவுக்கு முன்பதிவு செய்திருந்தார். அதில் அவரது பணம் பறிபோனது.
மோசடிக்காரர்களின் வலையிலிருந்து சிக்காமல் பொதுமக்கள் அதிகாரபூர்வ வழிகளில் தாங்கள் சந்தேகிக்கும் இணைப்புகளையும் செயலிகளையும் சோதித்துக்கொள்ளலாம். 1800 722 6688 என்ற எண்ணுடன் தொடர்புகொண்டு உதவி கோரலாம் அல்லது www.scamalert.sg இணையத்தையும் நாடலாம்.
காவல் துறையின் உதவி எண்களை (1800-255-0000), அழைக்கலாம் அல்லது இணைய முகவரியையும் (www.police.gov.sg/iwitness) பார்க்கலாம்.