மனநலக் கழகம், 1993ஆம் ஆண்டுக்குப் பிறகு இப்போது முதன்முதலாக ஆகப்பெரிய அளவில் சீரமைப்புத் திட்டத்தை நடைமுறைப்படுத்தி இருக்கிறது.
அதன்படி நெடுநாள் நோயாளிகளுக்கான 11 வார்டுகளை அது புதுப்பித்துள்ளது. அந்தக் கழகத்தின் வளாகம் புவாங்காக்கில் 1993ல்தான் கட்டப்பட்டது. கடந்த 2018ல் தொடங்கப்பட்ட சுகாதார அமைச்சின் நிதி உதவித்திட்டத்தின் ஒரு பகுதியாக கழகத்தின் வார்டுகள் புதுப்பிக்கப்பட்டு உள்ளன.
ஸ்டெப்பிங் ஸ்டோன்ஸ், செரினிட்டி செண்டர் என்று குறிப்பிடப்படும் அந்த இரண்டு வார்டுகளையும் வெள்ளிக்கிழமை சுகாதார அமைச்சர் ஓங் யி காங் அதிகாரபூர்வமாகத் திறந்துவைத்து உரையாற்றினார்.
ஸ்டெப்பிங் ஸ்டோன்ஸ் வார்டில் 100 படுக்கைகள் உள்ளன. அங்கு சிகிச்சை பெறுவோர், தாதியின் தலைமையிலான எட்டு வாரகால தன்னிச்சை செயல்திட்டத்தில் பங்கெடுக்கிறார்கள். அதன் மூலம் சமூகத்தில் சேர்ந்து வாழ்வதற்கு அவர்கள் ஆயத்தமாகிறார்கள்.
தனியார் இல்லங்களைப் போலவே நோயாளிகள் தனிப் படுக்கையில் உறங்குகிறார்கள். மருத்துவமனையின் உள்ளே சிறு சிறு வேலைகளையும் அவர்கள் பார்க்கிறார்கள்.
ஸ்டெப்பிங் ஸ்டோன்ஸ் வார்டுக்கு மேலாக குறுகிய காலம் தங்குவதற்கான 30 படுக்கைகள் கொண்ட ஒரு பிரிவு, செரினிட்டி சென்டர், குழந்தை, சிறார் வார்டு, ஆறு பொது வார்டுகள் ஆகியவையும் கழகம் புதுப்பித்துள்ள வார்டுகளில் அடங்கும்.
புதுப்பிக்கப்பட்ட வார்டுகளில் நோயாளிகள் தங்கியிருக்கும் போது, சமையலறையில் உணவு தயாரிக்கலாம், அருகிலுள்ள மொட்டை மாடியில் தோட்ட வேலைகளில் ஈடுபடலாம்.
இந்த வார்டுகளில் பல்நோக்கு அறைகள் உள்ளன. அங்கு பராமரிப்புக் குழுக்கள், நோயாளிகள், குடும்பங்கள், சமூக சேவை முகவை ஆகியவை ஒன்றுகூடி நோயாளி சிகிச்சை முடிந்து வீடு திரும்புவது குறித்து ஆலோசனை செய்யலாம்.
தொடர்புடைய செய்திகள்
மனநலக் கழகம் ஆண்டுதோறும் தனது ஏழு மருந்தகங்கள் மூலமாகவும் சமூகத்திலும் சுமார் 52,000 புறநோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கிறது. 1,800 பேர் தங்கி சிகிச்சை பெறுகிறார்கள்.
அவர்களில் பலரும் ஆண்டுக் கணக்கில் தங்கி சிகிச்சை பெறுவதுண்டு என்று சுகாதார அமைச்சர் தெரிவித்தார்.

