$1 மி. மதிப்பிலான உணவுப் பொருள்களைப் பெற்று ஏமாற்றியவருக்குச் சிறை

2 mins read
9c865751-1ba3-4bf8-bd75-bb1ad5b4a2aa
44 வயது சிங்கப்பூரரான ஸுவோவுக்கு புதன்கிழமை ஐந்து ஆண்டு, நான்கு மாதச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. - கோப்புப் படம்

வெவ்வேறு உணவு, பான நிறுவனங்களில் வேலை செய்த ஸுவோ சோங் யுவான், தமக்கு $1 மில்லியன் பெறுமானமுள்ள உணவுப் பொருள்களை வழங்க வைத்து விநியோகிப்பாளர்கள் பலரை ஏமாற்றினார்.

30 நாள் தவணை முறையில் பணம் செலுத்துவதற்கான பொருள்களைப் பெற்றுக்கொண்ட பிறகு, சைனாடவுனில் உள்ள உணவகங்களில் அவற்றை ஒட்டுமொத்தமாக அவர் விற்றார். அதன் மூலம் பெறப்பட்ட தொகையைக் கொண்டு தமக்கு இருந்த கடனை அவர் அடைத்தார்.

44 வயது சிங்கப்பூரரான ஸுவோவுக்கு புதன்கிழமை ஐந்து ஆண்டு, நான்கு மாதச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. மொத்தம் 13 குற்றச்சாட்டுகளை அவர் ஒப்புக்கொண்டார். $554,000க்கும் மேற்பட்ட தொகை சம்பந்தப்பட்ட மோசடிக் குற்றச்சாட்டுகளும் அவற்றில் அடங்கும்.

பெரும்பாலான குற்றங்களை அவர் 2020லும் 2021லும் புரிந்தார். இரு உணவு, பான நிறுவனங்களில் அப்போது வேலை செய்யாதபோதிலும் அவற்றில் பணிபுரிந்ததாக அவர் நடித்தார்.

அதுவரை வேலை செய்யாத மூன்றாவது நிறுவனம் ஒன்றிலும் தாம் ஊழியராக இருந்ததுபோலவும் அவர் நடித்தார்.

அரசு தரப்பு வழக்கறிஞர் இயோவ் ஸுவான், “விநியோகிப்பாளர்களிடம் இருந்து ஒரே நேரத்தில் பெரிய எண்ணிக்கையிலான உணவுப் பொருள்களைப் பெற்றுக்கொண்டபோது தவறிழைக்கிறோம் என்று குற்றஞ்சாட்டப்பட்டவருக்கு சிறிதும் தோன்றவில்லை. ஒவ்வொரு முறையும் $20,000க்குமேல் பெறுமானமுள்ள பொருள்களை அவர் பெற்றுக்கொண்டார்,” என்று கூறினார்.

“பாதிக்கப்பட்டவர்களிடம் குற்றஞ்சாட்டப்பட்டவர் இழப்பீடு எதையும் வழங்கவில்லை,” என்றும் வழக்கறிஞர் இயோவ் சொன்னார்.

ஸுவோ பெற்றுக்கொண்ட பொருள்களுக்காக, தாம் வேலை செய்ததாக அவர் கூறிய மூன்று நிறுவனங்களுக்கு விநியோகிப்பாளர்கள் கட்டணம் விதித்தனர்.

ஸுவோவின் குற்றங்கள் வெளிச்சத்துக்கு வந்ததைத் தொடர்ந்து அவருக்கு எதிராக காவல்துறையிடம் ஒன்றுக்கும் மேற்பட்ட புகார்கள் செய்யப்பட்டன.

மோசடிக் குற்றம் ஒவ்வொன்றுக்கும் ஸுவோவுக்கு 10 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும் அபராதமும் விதிக்கப்பட்டிருக்கலாம்.

குறிப்புச் சொற்கள்