உயரத்திலிருந்து பொருள்களை வீசும் மோசமான சம்பவங்களில் ஒன்றாக, வீட்டுச் சன்னலில் இருந்து சைக்கிள், நுண்ணலை அடுப்பு, தொலைக்காட்சியை வீசியதாகச் சந்தேகிக்கப்படும் 29 வயது ஆடவர் ஒருவர் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டார்.
பொங்கோலில் புளோக் 223ஏ சுமாங் லேனில் நிகழ்ந்த இச்சம்பவம் குறித்து வெள்ளிக்கிழமை காலை 5 மணியளவில் தனக்கு தகவல் கிடைத்ததாக காவல்துறை தெரிவித்தது. முன்யோசனையின்றி செயல்பட்ட குற்றத்துக்காக சந்தேக ஆடவர் கைது செய்யப்பட்டார்.
இச்சம்பவத்தில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை என்று காவல்துறை தெரிவித்தது.
அந்த புளோக்கில் வசிக்கும் திரு டான், காலை 5 மணியளவில் உயரத்திலிருந்து ஏதோ விழும் பலத்த சத்தம் கேட்டு தூக்கத்திலிருந்து தாம் எழுந்ததாகக் கூறினார்.
“கண்ணாடி சிதறும் சத்தத்தைக் கேட்க முடிந்தது. ஏதோ சரியில்லை என்பதை உணர்ந்தேன். என் வீட்டு சமயலறை சன்னலில் இருந்து, சைக்கிளும் கிளாஸ் புட்டிகளும் கீழே கிடப்பதைக் கண்டேன்,” என்றார் பாதுகாவலராக பணிபுரியும் திரு டான், 37.
அந்த புளோக்கில் கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளாக வசித்துவரும் திரு டான், “ஒவ்வொரு நாளும் செல்லப்பிராணிகளின் கழிவையும் மாதவிடாய்க்கால அணையாடைகளையும் மக்கள் வீசுகின்றனர். என் அண்டைவீட்டார் அதைச் செய்வதையும் நான் பார்த்திருக்கிறேன்,” என்றார்.
கடந்த ஜூலையில் உயரத்திலிருந்து கித்தார் ஒன்று வீசப்பட்டதாகவும் அவர் சொன்னார். கூடிய விரைவில் அந்த வீட்டைவிட்டு வெளியேற தாம் எண்ணம் கொண்டிருப்பதாக திரு டான் சொன்னார்.
அதே புளோக்கில் உயரத்திலிருந்து குப்பைகள் வீசப்படும் பிரச்சினை பரவலாக நிலவுவது குறித்து சீன நாளிதழான ஷின் மின் இவ்வாண்டு மே மாதம் தெரிவித்தது. அந்த புளோக்கில் வாடகை வீடுகள் உள்ளன.