நிறுத்தப்பட்டுள்ள லாரிகளின் நிழலில் ஒளிந்துகொண்டு வரி செலுத்தப்படாத கள்ளச் சிகரெட்டுகளை விற்றவர்கள் ஐவர் புதன்கிழமை இரவு கைது செய்யப்பட்டனர்.
துவாஸ் அவென்யூ 1லும் மண்டாய் எஸ்டேட்டிலும் கள்ளச் சிகரெட்டுகள் விற்கப்படுவதை சிங்கப்பூர் சுங்கத்துறை அதிகாரிகள் கண்காணித்துக்கொண்டிருந்தனர். பின்னர் அந்த ஐவர் தப்பித்து ஓடாத வகையில் அதிகாரிகள் அவர்களை வளைத்துப் பிடித்தனர்.
இரு இடங்களிலும் மொத்தம் 53 பெட்டிகள், 15 பாக்கெட் வரி செலுத்தப்படாத சிகரெட்டுகள் கைப்பற்றப்பட்டன.
அவற்றின் பொருள் சேவை வரியின் மதிப்பு முறையே $5,352, $482. அத்துடன் 3.3 கிலோகிராம் மெல்லும் புகையிலையும் சிக்கின.
இதில் தொடர்புடைய 20 முதல் 37 வயதுக்குட்பட்ட ஐந்து பங்ளாதேஷ் ஆடவர்கள் கைது செய்யப்பட்டனர்.
சிங்கப்பூர் சுங்கத்துறையின் மறைந்திருந்து பிடிக்கும் நடவடிக்கை தொடங்கப்படுவதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன்னதாக ஒரு பாதுகாப்பான தூரத்திலிருந்து நடவடிக்கைகளைக் கவனிக்க ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்திக் குழுவுக்கு அனுமதி வழங்கப்பட்டது.
துவாஸ் அவென்யூ 1ல் வெளிநாட்டு ஊழியர்கள் வேலை முடிந்து தாங்கள் தங்கும் விடுதிக்கு செல்லும் நேரத்தில் இரவு சுமார் 7.30 மணியளவில் கள்ளச் சிகரெட் விற்பவர்கள் சிகரெட் வியாபாரத்தைத் தொடங்கினர்.
அதேவேளையில் அதிகாரிகள் யாரேனும் வருகிறார்களா என்று கண்காணிக்கும் பணியில் ஒருவர் ஈடுபட்டிருந்தார்.
தொடர்புடைய செய்திகள்
ஊழியர்கள் சிறிது நேரம் அங்கு நிறுத்தப்பட்டுள்ள லாரிகளின் நிழலுக்குள் மறைந்து, பின்னர் அங்கிருந்து வெளியாகி தங்கும் விடுதிக்கான தங்கள் பயணத்தைத் தொடர்ந்தார்கள்.
இரவு 8.30 மணிக்கு சிங்கப்பூர் சுங்கத்துறையின் அதிகாரிகள் இருவர், கள்ளச் சிகரெட் விற்பவர்கள் தப்பித்துச் செல்வதைத் தடுக்கும் வகையில் நிறுத்தப்பட்டுள்ள முதல் லாரிக்கு நடந்து சென்று வழி மறைத்துக்கொண்டனர். பின்னர் இதர அதிகாரிகள் அந்த லாரிகளை நோக்கி ஓடி வந்தனர்.
சம்பவ இடத்தைச் சோதித்து பார்க்கையில் கள்ளச் சிகரெட் விற்பவர்களிடம் அதிக அளவில் சிகரெட்டுகள் இருந்தது தெரிய வந்தது.
அருகிலுள்ள புதர்களில் 45 பெட்டிகள் 10 பாக்கெட்டுகள் வரி செலுத்தப்படாத சிகரெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன. அவற்றுடன் 3.3 கிலோகிராம் எடையுள்ள மெல்லும் புகையிலையும் சிவப்பு நிற பிளாஸ்டிக் பைகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்தன.
2021ல் வரி செலுத்தப்படாத சிகரெட்டுகளை விற்ற 4,963 பேரும், 2022ல் 7,869 பேரும் கைது செய்யப்பட்டதாக சிங்கப்பூர் சுங்கத்துறையின் புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. 2023ன் முதல் ஆறு மாதங்களில் அவ்வாறு கைது செய்யப்பட்டோர் எண்ணிக்கை 6,300.
வரி செலுத்தப்படாத சிகரெட்டுகளை விற்பதும் வாங்குவதும் வைத்துக்கொள்வதும் சட்டப்படி குற்றம். குற்றவாளிகள் வரி செலுத்தப்படாத சிகரெட்டுகளின் ஜிஎஸ்டி வரித் தொகையை 40 மடங்காக அபராதம் செலுத்த வேண்டும் அல்லது ஆறு ஆண்டுகள் வரையிலான சிறைத் தண்டனையை ஏற்கவேண்டும்.