சிங்கப்பூரில் இந்த ஆண்டு செப்டம்பர் முதல் ஹோட்டல் முன்பதிவு மோசடிக்கு குறைந்தபட்சம் 30 பேர் இலக்காகி இருக்கிறார்கள். அவர்கள் சுமார் $41,000 தொகையை இழந்துவிட்டனர்.
அந்த அப்பாவிகள், புக்கிங்.காம் என்ற இணைய முன்பதிவுத் தளத்தைப் பயன்படுத்தி ஹோட்டல் அறைகளை முன்பதிவு செய்ததாகவும் அவர்களுக்கு மின்னஞ்சல் அல்லது குறுஞ்செய்தி வந்ததாகவும் காவல்துறை தெரிவித்தது.
ஹோட்டல் பிரமுகர்கள் போல் நடித்து மோசடிக்காரர்கள் அத்தகைய செய்திகளை அனுப்பினர்.
பிறகு மோசடிக்காரர்கள் போலியான இணைப்பை அனுப்பி முன்பதிவை உறுதிப்படுத்தும்படி கேட்பார்கள்.
அந்த இணைப்புக்குப் போனதுமே அப்பாவிகளின் தனிப்பட்ட வங்கி விவரங்களைத் தெரிவிக்க வேண்டி இருக்கும். அவற்றை வைத்து மோசடிக்காரர்கள் அப்பாவி மக்களின் கணக்குகளில் இருந்து பணத்தை எடுத்துவிடுவார்கள்.
ஸ்கேம்ஷீல்டு செயலி போன்ற பாதுகாப்பு வசகதிகளைப் பயன்படுத்தி முன்னெச்சரிக்கையுடன் நடந்து கொள்ளும்படி காவல்துறை பொதுமக்களுக்கு ஆலோசனை கூறியது.