சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம் 2022ல் எரிபொருள் மிகக் குறைந்த நிலையில் பாத்தாமில் தரையிறங்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.
அந்தச் சம்பவம்பற்றி புலன்விசாரணை நடந்தது. அதில் சம்பந்தப்பட்டவர்கள் சூழ்நிலையை இன்னும் சிறந்த முறையில் கையாண்டிருக்கலாம் என்பது அதன் மூலம் தெரியவந்துள்ளது.
லண்டனில் இருந்து சிங்கப்பூருக்கு 2022 அக்டோபர் 25ஆம் தேதி பறந்து வந்துகொண்டிருந்த எஸ்கியூ319 விமானம், பருவநிலை சரியில்லாமல் இருந்ததால் சாங்கி விமான நிலையத்தில் தரையிறங்க அனுமதிக்கப்படவில்லை.
பதிலாக அது திருப்பிவிடப்பட்டது. அந்த உத்தரவின்படி விமானம் பாத்தாமில் பருவநிலை நன்றாக இருந்த நேரத்தில் அங்கு தரை இறங்கி இருக்கலாம்.
ஆனாலும் விமானிகள் சாங்கியில் தரையிறங்கவே விரும்பியதாகத் தெரிந்தது. பிறகு பாத்தாமில் பருவநிலை மோசமடைந்தது.
விமானத்தில் எரிபொருள் அவசர நிலை அளவுக்கு குறைந்துவிட்டதாக விமானிகள் அதற்கு முன்னதாகவே தெரிவித்து இருந்தனர்.
ஆகையால் அவர்கள் தங்கள் முந்தைய முயற்சியைக் கைவிட வேண்டிய நிலை ஏற்பட்டது. விமானி பிறகு இதர திசையில் இருந்து தானியக்க முறையில் தரையிறங்க முயன்றார். ஆனால் அதற்கு அனுமதி இல்லை என்று விமானத் திரையில் செய்தி வந்தது.
பாத்தாமில் விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டு கோபுரத்துடன் தாங்கள் தொடர்பு கொள்ள தவறிவிட்டதை விமானிகள் உணரவில்லை.
தொடர்புடைய செய்திகள்
முதல் முயற்சிகளில் ஒன்றில் அவர்களுக்கு அனுமதி கிடைக்கவில்லை. நான்காவது முயற்சியில்தான் விமானம் பாத்தாமில் தரை இறங்கியது. விமானத்தில் இருந்த 280 பயணிகளில் யாருக்கும் காயம் எதுவும் இல்லை. அந்த போயிங் 777-300இஆர் விமானத்திற்குச் சேதமும் இல்லை என்று செப்டம்பர் 25ஆம் தேதி வெளியிடப்பட்ட போக்குவரத்து பாதுகாப்பு புலன்விசாரணை இலாகாவின் தொடக்க அறிக்கை தெரிவித்தது.
இது தொடர்பான கேள்விகளுக்குச் சனிக்கிழமை பதிலளித்த சிங்கப்பூர் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம், அந்த விமானத்தைத் திருப்பிவிட கையாளப்பட்ட முறையில் குறைபாடுகள் இருப்பதாகத் தெரிவித்தது.
இருந்தாலும் எஸ்ஐஏ நிறுவனம் ஒழுங்குமுறை நியதிகள் எதையும் மீறவில்லை என்று அந்த ஆணையத்தின் பாதுகாப்பு விதிமுறைக் குழுமத்தின் மூத்த இயக்குநர் ஆலன் ஃபூ கூறினார்.