தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

வீவக: தாமதமான ஐந்தாவது ‘பிடிஓ’ திட்ட வீடுகளும் தயார்

2 mins read
2dbf5f0e-51d7-4d35-b7f1-5d5f1d901337
கிளமெண்டியில் கட்டப்பட்டுள்ள வெஸ்ட் கோஸ்ட் பார்க்வியூ வீடுகள், வெஸ்ட் கோஸ்ட் ரோடு புளோக் 513 முதல் 520 வரைப்பட்ட குடியிருப்பாளர்களுக்கான ஒட்டுமொத்த மறு உருவாக்கத் திட்டத்திற்கான ஓர் இடத்தில் கட்டப்பட்டு உள்ளன. - படம்: வீவக

கிரேட்எர்த் கார்ப்பரேஷன், கிரேட்எர்த் கன்ஸ்ட்ரக்‌ஷன் என்ற வீடமைப்பு வளர்ச்சிக் கழகத்தின் (வீவக) முன்னாள் கட்டுமான ஒப்பந்த நிறுவனங்கள் நிதிப் பிரச்சினையில் சிக்கிக்கொண்டன.

அதனால் கழகத்தின் ஐந்து வீட்டுத் திட்டங்கள் தாமதம் அடைந்தன.

அந்த ஐந்து கட்டுமானத் திட்டங்களும் முழுமைபெற்று இருப்பதாக கழகம் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தது.

அவற்றில் கடைசியாக வெஸ்ட் கோஸ்ட் பார்க்வியூ தேவைக்கேற்ப கட்டப்படும் (பிடிஓ) திட்ட வீடுகள் சென்ற மாதம் ஒப்படைக்கப்பட்டன.

வெஸ்ட் கோஸ்ட் பார்க்வியூ ‘பிடிஓ’ திட்டத்தில் கட்டப்பட்ட 534 முதல் 659 வரைப்பட்ட புளோக்குகளில் வீடுகளை வாங்கியோருக்குச் செப்டம்பர் 30ஆம் தேதி வாக்கில் சாவிகள் கொடுக்கப்பட்டுவிட்டன.

அதேபோல், மார்சிலிங் குரோவ் வீடுகள் மார்ச்சிலும்; புக்கிட் பாத்தோக்கில் ஸ்கை விஸ்டா திட்ட வீடுகள் 2022 நவம்பரிலும்; செஞ்ஜா ஹைட்ஸ் வீடுகள் 2022 பிப்ரவரியிலும் செஞ்ஜா ரிட்ஜ்ஸ் வீடுகள் 2022 ஜனவரியிலும் ஒப்படைக்கப்பட்டதாக வீடமைப்பு வளர்ச்சிக் கழகம் தெரிவித்தது.

இந்தத் திட்டங்களில் வீடுகளை வாங்கியோரில் 95%க்கும் மேற்பட்டோர் சாவியைப் பெற்றுக்கொண்டனர்.

அந்த ஐந்து திட்டங்களிலும் கட்டப்பட்டு வந்த ஏறக்குறைய 3,000 வீடுகள் 2021 ஆகஸ்டில் பாதிக்கப்பட்டன.

அவற்றைக் கட்டி வந்த கிரேட்எர்த் நிறுவனம் கலைக்கப்பட்டது.

அதனால் இரண்டு மாதங்கள் முதல் 12 மாதங்கள் வரை தாமதம் ஏற்பட்டதாக கழகம் குறிப்பிட்டது.

கொவிட்-19 தொற்றுநோய் பரவல் காரணமாக அந்தத் திட்டங்களின் கட்டுமானம் ஏற்கெனவே பாதிக்கப்பட்டு இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, கொவிட்-19 காரணமாக தாமதமடைந்த பிடிஓ திட்டங்களில் முக்கால்வாசி திட்டங்கள் கட்டி முடிக்கப்பட்டுவிட்டதாகவும் எஞ்சிய கால்வாசித் திட்டங்களை 2025 தொடக்கத்தில் கட்டி முடிக்கலாம் என்று கழகம் கருதுவதாகவும் தேசிய வளர்ச்சி அமைச்சர் டெஸ்மண்ட் லீ தமது ஃபேஸ்புக் பதிவில் தெரிவித்துள்ளார்.

நிலவரங்களைப் புரிந்துகொண்டு பொறுமையுடன் காத்து இருந்ததற்காக குடியிருப்பாளர்களுக்கு அமைச்சர் நன்றி தெரிவித்தார்.

இதனிடையே, வெஸ்ட் கோஸ்ட் பார்க்வியூ பிடிஓ வீட்டுத் திட்டத்தைப் பொறுத்தவரை ஓர் உணவக இடம், சிறார் பராமரிப்பு நிலையம் போன்ற பொது இடங்கள் இன்னமும் கட்டப்பட்டு வருகின்றன.

அவை 2023 நான்காவது காலாண்டில் கட்டி முடிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

கிரேட்எர்த் நிறுவனம் மேற்கொண்டு வந்த கட்டுமானத் திட்டங்கள் 2021 ஆகஸ்டில் பாதிக்கப்பட்டன.

அதையடுத்து 2021 செப்டம்பரில் புதிய ஒப்பந்த நிறுவனங்கள் சேர்க்கப்பட்டு 2021 அக்டோபரில் பணிகள் மீண்டும் தொடங்கியதாக கழகம் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டது.

குறிப்புச் சொற்கள்